யூதர்களின் காட்ஃபாதர்!மர்மங்களின் மறுபக்கம் 39

ஸ்வீடன் நாட்டு மக்கள் 40 ஆண்டுகளாக ஒரு மனிதரைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். யார் அவர், எதற்கு இந்த பரபரப்பான தேடல்?  சாதாரண மனிதர், யூதர்களுக்கு காட்ஃபாதரான கதை அது. 1912ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  4ஆம்  தேதி  ஸ்வீடன்  நாட்டில் பிளாட்டின ஸ்பூனில் சாப்பிடும்  யூத- கிறிஸ்தவ  குடும்பத்தில் பிறந்தவர் ராவுல் வாலன்பெர்க். 

ஸ்வீடனின் ராக்பெல்லர் என்பது  இவரது  ஃபேமிலியின் செல்லப்பெயர். வங்கிகள், தொழில்துறை என நாட்டில் இவர்கள் கைவைக்காத தொழில்களே கிடையாது. மிக்சிகன் பள்ளியில் கட்டடக் கலையைப் பற்றிப் படித்துக்கொண்டே, வாலன்பெர்க் அவர்களின்  குடும்ப  வங்கியிலும் பணிபுரிந்து வந்தார். 

1936ஆம் ஆண்டு ைஹப்பா என்னும் நகருக்கு வாலன்பெர்க் வியாபார நுணுக்கங்களைக்  கற்றுக் கொள்ளச் சென்றார். அந்த நகரில் கோசர் என்னும் நகரிலிருந்த விடுதியில் அவர் தங்கியிருந்தார்.  நாஜிகள் ஐரோப்பாவிலுள்ள யூதர்களை டார்ச்சர் செய்துகொண்டிருக்கிறார்கள் எனும் செய்தி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

வாலன்பெர்க் தங்கியிருந்த நகரத்தில் யூத அகதிகளின் தொகை 50,000 ஆக  அதிகரித்தது,  இரண்டாம் உலக யுத்தம் 1939ஆம் ஆண்டு ஆரம்பமானபோது. உணவு ஏற்றுமதி - இறக்குமதி  தொழிலுக்கான நல்ல பார்ட்னரைத் தேடிககொண்டிருந்தபோது, ஹங்கேரிய - யூத 
அகதியான கோல்மான்  கிடைக்க, அவரை லான்பெர்க் தன்னுடன் இணைத்துக் கொண்டார். 

பன்மொழி வல்லவரான வாலன்பெர்க், எந்த நாட்டிற்கும் எளிதில் சென்று வருபவர் என்ற நமபிக்கையை கோல்மானுக்கு ஏற்படுத்தினார். நாஜிகளின் ஆதிக்கத்தில்  உள்ள  நகரங்களுக்கும்  அவர் வியாபார விஷயமாகப் போய்வர வேண்டியிருந்தது.

வியாபாரப்   பயணத்தில்   யூதர் களுக்கு நாஜிகள் இழைக்கும் கொடுமைகளைக் கண்கூடாகக் கண்ட.  வாலன்பெர்க்குக்கு  வேதனையில்  நெஞ்சம்  துடித்தது. 1942ஆம் ஆண்டு ‘‘ஞாபக மறதிப் பேராசிரியர்’’ என்று ஓர் ஆங்கிலப் படத்தை வாலன்பெர்க் பார்த்தார்.ஒரு பேராசிரியர் நாஜிகளை ஏமாற்றி யூத மக்களைக் காப்பாற்று கிறார் என்பதை காமெடியாகச் சொன்ன படம் அது. 

மிருகங்களைப் போல் பட்டிகளில் அடைப்பது - பிடிக்காதவர்களை  ‘கேஸ்’ சேம்பரில்  கொல்வது  என்று  கொடூர கொடுமைகளை யூதர்களுக்கு  நாஜிகள் இழைத்தனர். ஜெர்மனியை எதிர்த்தவர்கள் கொடுமைகளைப் பற்றிப் பேச மட்டுமல்ல,  யூத சமூகத்திற்கு  தங்களால் என்ன உதவி செய்ய முடியுமோ அதைச் செய்யத் தொடங்கினார்கள், மறைமுகமாகத்தான். 

1944ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  யூத அகதிகளுக்குப் புனர்வாழ்வு என்று ஒரு அமைப்பை அமெரிக்கா தோற்றுவித்தது. இதற்கு மிகவும் முக்கிய காரணமாக இருந்தவர் அமெரிக்காவின் நிதி இலாகா காரியதரிசியான ஹென்றி மார்க்கன்தௌ ஜூனியர். இதற்குப் பிறகுதான் ஐரோப்பாவில் அகதிகளுக்கான அமைப்பு ஒன்று தோன்றியது.
 
நடுநிலையான ஸ்வீடனில் பல முக்கிய அதிகாரிகள் முகாமிட்டு ஐரோப்பிய அகதிகளாக ஜெர்மன் மற்றும் ஹங்கேரி நாடுகளிலிருந்த 7 லட்சம் யூதர்களை விடுவிக்க  ஏற்பாடுகளைச் செய்தனர்.

ஹங்கேரி ஜெர்மனியுடன் நல்லுறவு கொண்டிருந்தாலும், யூதர்களை ஜெர்மனி கொன்று குவித்ததை முகச்சுளிப்புடன் கவனித்தது. பொறுக்கமுடியாமல் தன் எதிர்ப்பை அது ஜெர்மனியிடம் தெரிவித்தபோது, டென்ஷனான ஜெர்மனி தனது துருப்புகளை 1944ஆம் ஆண்டில் மார்ச் மாதம் ஹங்கேரிக்கு அனுப்பி தாக்கி, அங்கே பொம்மை அரசை நிறுவியது.

இதை சாதித்த  தளபதி அடால்ப் ஈச்மன் தீவிர ஆரிய இனவெறியர். ஹங்கேரியில் இருந்த யூதர் கள் மஞ்சள் நிற நட்சத்திர பட்டையை உடையில் அணிவது கட்டாயமானது. எதற்கு? அடையாளம் கண்டு கொல்லத்தான்.

அமெரிக்கா யூதர்களைக் காப்பாற்ற ஐரோப்பா முழு வதும் போராடிக் கொண்டிருந்த நிலையில், ஹங்கேரி மற்றும் ஜெர்மனியில் யூதர்கள் மீதான கொடூரங்கள் தீவிரமாகி வந்தன.

ஸ்வீடன் நாட்டிலிருந்த அமெரிக்கப்  பிரதிநிதி ஐவா ஆஸ்லன் என்  பவர், மிகுந்த யோசனைக்குப் பிறகு தொழிலதிபரான ராவுல் வாலன்பெர்க்கை யூதர்களைக் காப்பாற்றி வரும்  பணிக்கு தேர்வு செய்தார். அப்போது வாலன்பெர்க்கின் வயது 31.

(வெளிச்சம் பாய்ச்சுவோம்)

ரா.வேங்கடசாமி