சர் ரிச்சர்ட் பிரான்ஸன்



பசுமை பேச்சாளர்கள் 2

இங்கிலாந்தில் 1950ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று பிளாக்ஹீத் நகரில் பிறந்த, 400 நிறுவனங்களை கட்டியாளும் கோடீஸ்வரர் இவர். பல்வேறு பொருட்களைத் தயாரிக்கும் வர்ஜின் நிறுவனத்தின் தலைவர் சார்தான். டிஸ்லெக்சியா குழந்தையான பிரான்ஸனுக்கு பால்யவயது வேதனைகள் சுனாமியாய் தாக்கின. பள்ளிப்படிப்பில் சுமார் மூஞ்சி குமார்தான்.

இவன் வளர்ந்தால் ஒன்று ஜெயிலில் இருப்பான் இல்லையென்றால் கோடீஸ்வரனாக மாறியிருப்பான் என பிரான்ஸனின் பள்ளி தலைமையாசிரியர் சொன்னதில் இரண்டாவது நிஜமானதற்கு ஒரே காரணம் பிரான்ஸனின் அயராத கனவை நோக்கிய உழைப்பு மட்டுமே.  

முதலில் நடத்திய மாணவர்களுக்கான பத்திரிகை, அட்டகாச கட்டுரைகள், நேர்காணல் என அசத்தியதில் பத்திரிகை செம ஹிட். அடுத்து, பாடல் கேட்கும் ரெக்கார்டுகளை வாங்கி கட்ட ரேட்டில் மற்றவர்களை முந்தி விற்று அதிலும் புகழ்பெற்றார். வர்ஜின் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் பிறந்தது இப்படித்தான். இவரின் சொத்து மதிப்பு 5.2 பில்லியன். 2004 இல் தொடங்கிய வர்ஜின் யுனைட் என்ஜிஓ மூலம் சூழல் காப்பதற்கான ஏராள முயற்சிகளை முன்னெடுக்கிறார்.  

தோல்விகளுக்கு பயப்படாதீர்கள், தோல்விகளிலிருந்து கற்றுக்கொண்டு புதிதாக தொடங்குங்கள் என டன் கணக்கில் தன்னம்பிக்கை சொன்ன பிரான்ஸன், 1999 ஆம் ஆண்டு ICMEC என்ற தொலைந்துபோகும் குழந்தைகளையும், குழந்தை தொழிலாளர்களையும் மீட்கும் அமைப்பைத் தன் தாய் ஈவாவுடன் இணைந்து தொடங்கினார்.

2009 ஆம் ஆண்டு தொடங்கிய கார்பன் வார் ரூம் என்ற திட்டத்தின் வழியாக கப்பல், விமானம், எரிபொருள் உள்ளிட்டவற்றில் மாற்று ஐடியாக்களை வரவேற்றார். இதோடு இங்கிலாந்திலும், தென் ஆப்பிரிக்காவிலும் பல்வேறு புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் ஸ்டார்ட் அப்களுக்கு ஏராள நிதியுதவியும் வழங்குகிறார். 

அணுஆயுதங்களை கைவிடச் செய்யும்  முயற்சியாக குளோபல் ஜீரோ என்ற  திட்டத்தை முன்னெடுத்த நன்னெறி மனிதர் பிரான்ஸன். ஆப்பிரிக்க கானுயிர்ள் வேட்டையாடப்படுவதையும், கடத்தப்படுவதையும் எதிர்த்து தொடர்ந்து பிரசாரம் செய்து வரும் பிரான்ஸன், குற்றங்களுக்கு வழங்கப்படும் மரண தண்டனையையும் எதிர்க்கும் மாறுபட்ட புதியபாதை சிந்தனைக்காரர். நல்ல வணிகம் எப்படி உலகில் பாசிட்டிவ் சிந்தனைகளை கொண்டு வருகிறது என்பதை நிரூபித்தவர் வேறுயார்? பிரான்ஸன்தான்.

ச.அன்பரசு