அச்சிடுவது கலோரி!அதிகரிப்பது உப்பு!



புகழ்பெற்ற கடையின் ப்ரெஞ்ச் ஃபிரையில் கலோரி அதிகமா? முக்குக்கடை குமார் அண்ணனின் சாம்பாரில் உப்பு அதிகமா? என்று நாசுக்காக சுத்தம் பார்க்கும் நம் மனம் உடல் பிரச்னையானால் இரண்டாவதையே குற்றம் சாட்டும். உண்மையில் எதில் பிரச்னை  கலோரியா? உப்பா?   அமெரிக்காவில் கடந்த மே 5 இல் அமலான விதிப்படி, ஹோட்டல்கள் அனைத்தும் மெனுவில் கலோரி அளவை கட்டாயம் குறிப்பிடவேண்டும்.

அதிபர் ட்ரம்ப் பதவிக்கு வந்தபிறகு இந்த விதியை பின்தள்ள ஹோட்டல்கள் மற்றும் பீட்ஸா நிறுவனங்கள் கடுமையாக முயற்சித்தன என்றாலும் அவ்விதி இறுதியில் அமலாகிவிட்டது. ஆனால் கலோரி ஆரோக்கியத்திற்கான அளவீடு அல்ல. உப்புக்கு  இதில் முக்கியப்பங்குண்டு.  
கலோரியை தன் மெனுவில் இடம்பெறச்செய்வதை சில அமெரிக்க   நிறுவனங்கள்  கடந்த பத்தாண்டுகளாக  கடைப்பிடித்து வருகின்றன. எ.கா: ஸ்டார்பக்ஸ், மெக்டொனால்ட்.

இந்த இரு நிறுவனங்களும் நாடு முழுக்கஉள்ள தம்  உணவகங்களில் கலோரியை அச்சிடுவதை துல்லியமாக கடைப்பிடிக்கின்றன. இந்த கலோரி லேபிள் முறையால், பல்வேறு உணவகங்களும குறைந்த கலோரி உணவுவகைகளை அறிமுகம் செய்யத் தொடங்கிவிட்டன. உறுதியாக இதனால் என்ன பயன் என்று கூறமுடியாது. உணவு ஐட்டங்களிலுள்ள கலோரியின் அளவு மெல்ல குறையக்கூடும்.  

உப்புக்கும் இதே விதி பொருந்தும். சோடியத்தின் அளவு அதிகமானால் இதயநோய்களும், வலிப்பும்  அதிகரிக்கும். அமெரிக்காவில் தினசரி  ஒரு  அமெரிக்கர் பயன்படுத்தும் உப்பின் அளவு 3.400 மி.கி. ஒருவருக்கு தினசரி தேவை என பரிந்துரைக்கப்படும் அளவான 2.300 மி.கி என்பதை விட இது 50% அதிகம். உணவில் உப்பின் அளவை 40% குறைத்தாலே அரைமில்லியன் மக்களின் இறப்பைத் தடுக்கமுடியும் என்பது ஆராய்ச்சியாளர்களின் வாக்கு.

உடலில் அதிகரிக்கும் உப்பிற்கு முழுமுதல் காரணம் பேக்கேஜ் உணவுகள்தான். உப்பு அதிகரிப்பதில் இதன் பங்கு 70%. கலோரியை கணக்குப் போடும் அவசரத்தில் உணவில் அபரிமிதமாக பெருகி நிற்கும் உப்பை மறந்துவிடுகிறோம்.

ஆனால் பெரும்பாலும் ஏற்படும் இதயநோய்களுக்கு ஆதாரமே உப்புதான். தற்போது நியூயார்க்கிலுள்ள ஹோட்டல்களில் 2300மி.கி. அளவுக்கு மீறும் உப்பு கொண்ட உணவுகளைப் பற்றி தெளிவான நிறத்தில் வாடிக்கையாளருக்கு அறிவிக்க வேண்டும் என்று புதிய விதி அமலாகியுள்ளது.

கா.சி.வின்சென்ட்