தேவமகனின் மர்ம போர்வை!



மர்மங்களின் மறுபக்கம் 14

உலகிலுள்ள கிறிஸ்தவ சமூகமே மிகவும் தீவிரமாக நம்பிய விஷயமது. தேவகுமாரன் ஏசு மரணமடைந் தபோது அவர் மீது போர்த்தப்பட்ட போர்வை மிகவும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டது என்பதுதான் அது. 4 மீட்டர் நீளமும், 1 மீட்டர் அகலமும் கொண்ட அந்த லினன் போர்வை போலி என்றால் கிறிஸ்தவ உலகம் எப்படிக் கண்ணீர் வடித்திருக்கும் என்பதை வார்த்தைகளால் கூற முடியாது.

அப்போர்வையில் படம் வரைந்தது போல உருவம் உள்ளது; ஏசு கிறிஸ்து துன்புறுத்தப்பட்டதன் அடையாளங்கள் உள்ளன என்றும் பல கதைகள் உலாவின. போர்வையில் கண்ட உருவத்தைப் படம் பிடித்தபோது, அது மனித  உருவம்  போலிருந்தது என்றனர் பலர்.

ஏசுவின் போர்வை எப்படிக் கிடைத்தது என்பதற்கு சுவாரசிய வரலாறுண்டு. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபின், அந்த இடங்களுக்கு பயணித்த பயணிகள் கிழக்குத் திசையில் சென்று, ஏசுவின் ஞாபகச்சின்னங்களாக பலவற்றையும் சேகரித்தனர்.

இந்த அபூர்வ லினன் போர்வை அப்போது ஜெரூசலத்தில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது என்றும் கான்ஸ்டான்டிநோபிள் (இஸ்தான்புல்) நகரத்திற்கு அது பின்னர் எடுத்துச் செல்லப்பட்டது என்கின்றனர்.

அதற்குக் காரணம் கான்ஸ்டான்டிநோபிள் நகரத்தை 1204ஆம் ஆண்டு தாக்கிய எதிரிகள், பல ஆவணங்களையும், பொருள்களையும்  கொள்ளையடித்துச் சென்றதுதான். 1350ஆம் ஆண்டு ஜியாபிரே சர்னி என்ற பிரெஞ்சுக்காரர், இப்போர்வையை மக்களிடம் காட்டி இது கிழக்கு தேசத்திலிருந்து வந்தது என்றார்.

டிராய் நகரின் பிஷப், அதில் வரைந்துள்ள படம் போலி என்று அன்றே சொன்னார்.அந்த பிரெஞ்சுக்காரர், அப்போர்வையை சாவாய் பிரபுக்கு அன்பளிப்பாக வழங்கினார். பல ஆண்டுகளாக அவர்களிடம் மிகவும் பத்திரமாக  இருந்த அப்போர்வை இன்று ட்யூரின் மாதா கோயிலில் பாதுகாக்கப்படுகிறது. கிறிஸ்துவின் வரலாற்றில் தொடக்க கால நூற்றாண்டுகளில், இதைப்பற்றி ஏன்  எங்கும்  குறிப்பிடப்படவில்லை என்பதுதான் ஆராய்ச்சியாளர்களின் கேள்வி.

அப்போதே  இச்செய்தி வெளியாகியிருந்தால் கிறிஸ்துவ மத பாதிரியார்கள், ஆர்வலர்கள் எல்ேலாருமே இதை எவ்வளவு மகிழ்ச்சியோடு வரவேற்றிருப்பார்கள்? 15 ஆம்  நூற்றாண்டில்  இதுபற்றிய தகவல்களில், உருவம் மிகவும் தெளிவான வண்ணத்தில் இருந்தது என்றும் இப்போதுள்ள அவ்வுருவம் சரியாகவே தெரியவில்லை என்றும் சர்ச்சை கிளப்புகிறார்கள்.

14 நூற்றாண்டு களாக தெளிவாக தோற்ற மளித்த அந்த உருவம் 600 ஆண்டுகளுக்குப் பின் லேசாக மங்கிப் போவதின் காரணமென்ன? இந்த “பவித்திரமான போர்வையைப் போல், மற்ற பொருள்களும்  துணிகளும் இருந்தன” என்கிறார் ஆராய்ச்சியாளர் காலின் பிளேன்ஸி. 

ஏசு போர்வையை அதே ஆண்டு இரண்டு விஞ்ஞானிகள் தீவிரமாகப் பரிசோதித்து ஆராய்ச்சி செய்தபின், இச்செய்தி உண்மையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்றனர். அப்போர்வையை பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்தபோதிலும் அதில் தெரிந்த உருவம் எப்போது யாரால் வரையப்பட்டது என்று அவர்களால் கண்டறிய முடியவில்லை. இது மிகவும் அபூர்வமான தோற்றம்தான் என்ற முடிவுக்கே அவர்கள் எல்லோரும் வந்தார்கள்.

1988ஆம் ஆண்டு, உருவம் வரையப்பட்ட போர்வை மீண்டும் ஆராய்ச்சிக்கு உட்பட்டது. அப்படத்தின் சில துகள்கள் எடுக்கப்பட்டு ஆக்ஸ்போர்டு, ஜூரிச், அரிஸோனா போன்ற இடங்களுக்கு தீவிர பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.

அப்போர்வையின் காலம் 1260- 1390க்குள் இருக்கலாம். 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியின் சரித்திர ஆராய்ச்சியாளரான ஹோல்கர் கெர்ஸ்டன், அவருடன் ஆராய்ச்சி செய்த இன்னொரு விஞ்ஞானியான எல்மர் குருபெர்  இருவரும்  இந்தப் போர்வையின் ஆராய்ச்சி முடிவை வெளியிட்டார்கள்.

‘‘ஜீசஸ் கான்ஸ்பிரசி’’ என்னும் நூலில் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி என்னவென்றால், “ஆராய்ச்சிக்கு  இது வரை எடுத்துக்கொண்ட சாம்பிள்கள் எதுவும் அப்போர்வையில் இருந்து வந்ததல்ல’’ என்பதுதான்.

(வெளிச்சம் பாய்ச்சுவோம்)