சிகாகோவில் ரத்தபலிகள்!



அமெரிக்காவின் சிகாகோ நகர ரத்த ஆற்றில்தான் அங்கு தினசரி சூரிய உதயமே நிகழ்கிறது. பின்னே இதை எப்படி சொல்வதாம்? கடந்த ஜனவரியில் மட்டும் இங்கு நிகழ்ந்த கொலைகளின் எண்ணிக்கை 51 என்றால் நெஞ்சு பதறத்தானே செய்யும்?

ட்ரம்ப் அதிபர் சேரில் உட்கார்ந்த நேரத்திலா இப்படி வம்புகள் வரிசை கட்டணும் என்று நினைத்தாலும் சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டனவே!  அதற்காக தேமே என்று இருந்துவிட்டால்
எப்படி?

6.3 கோடி ரூபாய் செலவில் ஷாட்ஸ்பாட்டர் என்ற சென்சாரை, க்ரைம்  ஸ்பெஷல்  ஏரியாக்களான  மாவட்டங்களின் இரு இடங்களில் மட்டும் மானாவரியாக மாட்டி கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர். துப்பாக்கி தோட்டா எதிரியை நோக்கி பாயத்தொடங்கியதுமே போலீசார் ஸ்மார்ட்போன் மூலம் ஃபாலோ செய்து குற்ற எண்ணை குறித்து வைத்து காரில் பறந்துவந்து, குற்றவாளிக்கு விலங்கு மாட்டுவார்கள்.  
 
அமெரிக்காவில் 100 நகரங்களுக்கு மேல் ஷாட்ஸ்பாட்டர் சென்சாருக்கு யெஸ் சொன்னாலும், சில நகரங்கள் இதற்கெல்லாம் அசைந்தே கொடுக்கவில்லை. டெலவரிலுள்ள டோவர் நகரம், வாஷிங்டனின் குவின்சி, வடக்கு  கரோலினாவின் சார்லட் ஆகியவை
இவ்வகையில் சென்சாருக்கு ஓராண்டிற்கு ஆகும் சந்தா தொகையான 1 கோடி ரூபாயை மிச்சம் பிடித்து வேறு வகையில் செலவழிக்கக்
கூடும்.

“நிகழும் அனைத்து குற்றங்களையும் கொலை என்று கூறிவிடமுடியாது  என்றாலும்  அவை குற்றச்செயல்கள்தான். ஆயிரக்கணக்கான சம்பவங்களை ஆண்டுக்காண்டு கண்டு வந்தாலும் குறிப்பிட்ட குழு மோதல்களிலிருந்து மக்களைக் காக்க முடிவது பெரிய விஷயம்.

இதனால் இந்நகரின் காவல்துறைக்கும் மக்களிடையே மரியாதை, பெருமை கூடியுள்ளது’’ என எக்கச்சக்கமாக பெருமைப்படுகிறார் ஷாட்ஸ்பாட்டின் இயக்குநர் ரால்ப் க்ளார்க். 35% குற்றங்கள் கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது என சாதிக்கிறார் இவர்.

3 ஆண்டுகளுக்கு  முன்பு சிகாகோவில் குற்றவாளிகளைக் கண்டறிய அல்காரிதம் ஒன்று புதிதாக இலினாய்ஸ் இன்ஸ்டிடியூட்டினால் 2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. அதில் ஒருவர் துப்பாக்கிச்சூடில் ஈடுபட்டு குற்றம் செய்து எத்தனை முறை சிறை சென்றார் உள்ளிட்ட விபரங்கள் அப்டேட் செய்யப்படும்.

முழுக்க பலனில்லை என்றாலும் இவ்வகையிலும் நிறைய குற்றவாளிகளை அரசு தொடர்ந்து கண்காணித்து வந்து குற்றச்செயல்கள் எல்லை மீறாமல் காத்தது உண்மைதான். ஆனால் தற்போதுள்ள சென்சார் போல நடக்கும்போது குற்றத்தை தடுக்கும் திறன் இல்லையே! தற்போது கலிஃபோர்னியாவின் ஃப்ரெஸ்னோ நகரத்தின் காவல்துறை பிவேர் எனும் மென்பொருள் மூலம் சமூக வலைதளங்களின் வழியாகவும் மக்களை எச்சரிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்க மாற்றம்தான்.

ஆனால்  இதன் செயல்பாடு பலருக்கும் திருப்தி அளிக்காததால்  இந்நிறுவன ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட உள்ளது.“தொழில்நுட்பம் என்பது செயலை எளிமையாக்கும் ஒரு வசதி. குற்றம் நிகழ்வதற்கான, வாய்ப்பை உருவாக்கும் அல்லது குறைக்கும் தகுதி கொண்டது அல்ல. ஒரு நகரிலுள்ள மக்களிடையே இனம், மொழி, அரசியல் என பல பரிமாணங்களில் பிரச்னைகள் உள்ளன.

அதைத் தீர்ப்பதே புத்திசாலித்தனம். தொழில்நுட்பத்தை  விலை  கொடுத்து இறக்குமதி செய்வதால் எதுவும் இங்கே மாறாது” என பிரச்னையின் நாடி பிடித்து நெத்தியடியாகப் பேசுகிறார் அயர்லாந்திலுள்ள மேனூத் பல்கலையின் பேராசிரியர் ராப்கிச்சின்.

கா.தமிழ்மாறன்