லீகோ பொம்மைகளாக நாசா பெண்கள்!



டென்மார்க்கைச் சேர்ந்த குழந்தைகள் விளையாட்டுப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான லீகோ, நாசாவில் 5 பெண் பொம்மைகளின் பங்களிப்பிற்கான ஐடியாவிற்கு ஓகே சொல்லியுள்ளது.“அமெரிக்காவின் விண்வெளித் திட்டங்களின் வரலாற்றில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

பல்வேறு திட்டங்களுக்கு பின்னணியிலுள்ள பெண்களின் உழைப்பு பலரும் அறியாத ஒன்று.இவ்வகையில் கணிதம், அறிவியல், பொறியியல் ஆகிய துறைகளில் பெண்கள் அரும்பாடுபட்டு முன்னேறியுள்ளனர்”  என குரல் தழுதழுக்க பேசுகிறார் எம்ஐடி பல்கலையின் செய்திப்பிரிவு ஆசிரியரான எழுத்தாளர் மையா வெய்ன்ஸ்டாக். இந்த ஐடியாவின் வேர் இவர்தான். 

நாசா பெண்கள் என்ற லீகோ பொம்மை  ஐடியா மற்ற 11 ஐடியாக்களையும் ஒதுக்கித் தள்ளி முன்னணியில் உள்ளது. ஒரு ஐடியா ஹிட்டாக அதற்கு 10 ஆயிரம் பயனர்களின் வாக்குகள் தேவை. நாசாவில் பல்வேறு சாதனைகள் புரிந்து வீராங்கனைகளான கேத்தரின் ஜான்சன், மார்க்கரேட் ஹாமில்டன், சாலி ரைட், நான்சி கிரேஸ் ரோமன், மே ஜெமிசன் ஆகிய ஐவர்தான் லீகோ பொம்மைகளாக உருவாக்கப்படவிருக்கிறார்கள்.  

அமெரிக்காவின் வர்ஜீனியாவில் 1918 ஆம் ஆண்டு பிறந்து, நாசாவில் கணிதவியலாளராக பணிபுரிந்த கேத்தரின் ஜான்சனின் தற்போதைய வயது 98. இவரின் கதை Hidden Figures என ஹாலிவுட்டில் திரைப்படமாகியுள்ளது. 2015 ஆம் ஆண்டில் கேத்தரின் ஜான்சனின் சாதனைகளைப் பாராட்டி, அதிபரின் விருதும் அளிக்கப்பட்டுள்ளது.    

1936 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் பிறந்த கம்ப்யூட்டர் அறிவியலாளரான மார்க்கரேட் ஹாமில்டன், அப்போலோ 11 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு   உழைத்தவர்களில் முக்கியமானவர்.1951 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் பிறந்த இயற்பியலாளரான ஸாலி ரைட் 1978ஆம் ஆண்டு நாசா நிறுவனத்தில் இணைந்தார்.

1983 ஆம் ஆண்டு, விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் வீரர் ஸாலி ரைட்தான். 2012 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். இவர்களோடு நாசாவின் மூத்த வானியலாளரான நான்சி கிரேஸ் ரோமன், ஆசிய- ஆப்பிரிக்க வானியலாளரான மே ஜெமிசன் ஆகியோரும்  இதில் குறிப்பிடத்தக்கவர்கள்.

“மையா வெய்ன்ஸ்டோக்கின் நாசா பெண்களை உருவாக்க நாசாவுடன் இணைந்து செயல்படவிருக்கிறோம்” என உற்சாகமாக பேசுகின்றார் லீகோ நிறுவன அதிகாரி லைஸன் டைடென்ஸ்போர்க்.

கா.சி. வின்சென்ட்