மனித உடலில் புதிய உறுப்பு!



புதிய கார்களை, மருந்துகளை கண்டுபிடிக்கிறோம். ஏன் பூமி கடந்து விண்வெளியில் கோள்களையும் கூட ஆய்வு செய்து யுரேகா என துள்ளிக்குதிக்கிறோம். ஆனால் நமது உடலிலேயே நாமறியாமல் ஓர் உறுப்பு இருந்தால் அதை விட அவமானம் நமக்கு வேறு வேண்டுமா?மனித உடலில் அப்படி ஒரு புதிய உறுப்பை அடையாளம் கண்டு அந்த அவலத்தை மனித குலத்திலிருந்தே துடைத்து விட்டார்கள் அயர்லாந்தின் லிமெரிக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

நமது உடலில் செரிமான உறுப்பிலுள்ள பல்வேறு பிரிவுகளைக்கொண்ட நடுமடுப்புதான்(மெசென்ட்ரி) புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட உறுப்பு. முன்பு பல்வேறு அறைகளாக பிரிக்கப்பட்ட அமைப்பு என்று இதனை கூறினாலும், ஆராய்ச்சியாளர்கள் ஆணி அடித்தது போல நின்று பேசுவது, ஒரே ஒரு உறுப்புதான் என்ற கருத்தில்தான்.

“இந்த உறுப்பின் பணி குறித்து இன்னும் துல்லியமாக தெரியவில்லை என்றாலும், இது அறிவியலின் புதிய விஷயங்களை திறக்கலாம்” என தடுமாறாத தன்னம்பிக்கையோடு பேசுகிறார் லிமெரிக் பல்கலை மருத்துவமனையின் ஆராய்ச்சியாளரான கால்வின் காஃபெய். இவர்தான் இந்த புதிய உறுப்பை கண்டுபிடித்தவரும் கூட. “வயிறு தொடர்பான நோய் சிகிச்சைக்காக வயிற்றை ஆராயும்போதுதான் மெசென்ட்ரியை கண்டுபிடித்தோம், அதன் அமைப்பை அறிந்துகொண்டுவிட்டாலும், அதன் பணியை இன்னும் இறுதி செய்யவில்லை.

பணியைப் பொறுத்தே அது சீர்கெட்டதால் நோய் ஏற்பட்டதா என அறிய முடியும்” யதார்த்தமாக பேசுகிறார் ஆராய்ச்சியாளர் கால்வின். வயிற்றுச்சுவர்களிலுள்ள திசுக்களைப் பற்றிய அறிவியல் உண்மைகளை கூறும் இந்த ஆய்வு, லான்செட் மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது.

மெசென்ட்ரி குறித்து ஆய்வு முடிவுகள் உறுதியானவுடன் மாணவர்களுக்கு இவை கற்றுத்தரப்படுவதோடு, புகழ்பெற்ற மருத்துவ நூலான கிரேய்ஸ் அனாடமி நூலிலும் இவை சேர்க்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன. தற்போது புதிய உறுப்பின் தன்மையையும் அதன் விளைவுகளையும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

வயிற்றிலுள்ள உறுப்புகளை காத்து வரும் சவ்வான பெரிடோனியம் போல இரண்டடுக்கு  மடிப்பில் அமைந்துள்ளது இந்த புதிய உறுப்பு. மொத்தமுள்ள மனித உறுப்புகளின் எண்ணிக்கை தற்போது கண்டறியப்பட்ட நடுமடிப்பு உறுப்போடு மொத்தம் 79. மூளை, இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றோடு 74 பிற உறுப்புகள் இணைந்து இயங்கினால்தான் உடல் சிறப்பாக இயங்க முடியும்.

- கா.சி. வின்சென்ட்