கேமராவைக் குழப்பும் புதிய ஆடை!



குற்றச்சம்பவங்கள் அதிகரிக்க அதிகரிக்க தெருவில் கந்துவட்டி வாங்கியாவது வைக்கப்படும் கேமராக்களும் அதிகமாகிவிட்டன. பூட்டு திண்டுக்கல்லில் உருவாக்கப்படும்போதே அதற்கு சாவி உருவாக்குவதுதானே நமக்கும் ப்ரெய்ன் இருக்கிறது என்பதற்கு ஒரே சாட்சி!

தற்போது உருவாக்கப்பட்டுள்ள ஆடையானது, முகத்தை கேமராவினால் அடையாளம் காணமுடியாதபடி தடுக்கிறது. ஆனால் எதற்கு இந்த ஆடை? வேறெதற்கு நம் பிரைவசி காக்கத்தான்.

அமேஸான் தனது கடைகளிலும், ஃபேஸ்புக் இணையத்திலும் நம் புகைப்பட அடையாளங்களை ரகசியமாக சேகரிக்கின்றன என்ற தகவல்களை அறிபவர்கள் யாருக்குமே சிறிது சங்கடமாகத்தானே இருக்கும்? முகத்தை அடையாளம் கண்டறியும் மென்பொருள் என்பது பொதுவாக உங்களது ஸ்மார்ட்போனிலும் உள்ளதுதான். ஆனால் அது உங்களை படம்பிடித்து சேமிப்பது தரும் பதட்டத்தை மறைக்க முடியாதே!

எனவேதான் ஜெர்மனியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநரும் கலைஞருமான ஆடம் ஹார்வே, இந்த மென்பொருட்களை இடியாப்ப சிக்கலில் ஆழ்த்த ஹைப்பர் ஃபேஸ் என்ற பெயரில், க்யூ ஆர் டிசைன் வடிவில், பல்வேறு பேட்டர்ன்களை டிசைன் செய்திருக்கிறார்.

2013 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த பணியில், வேறுபட்ட வடிவில் முகத்தின் உறுப்புகள் போல ஏமாற்றும் விதமாக பேட்டர்ன்களை அச்சிட்டிருப்பதால் கேமராவே அதனை முகமாக கருதி பதிவு செய்வதால் நம் பிரைவசி தப்பிவிடும் என சிம்பிள் ஐடியாதான் இது. ஹார்வி இதற்கு முன்பு கேமராக்களை குழப்பும் விதமாக முகத்தில் மேக்அப், ஹேர்ஸ்டைல் ஆகியவற்றை மாற்றியமைக்கும் சிவி டேஸில் என்னும் புரொஜக்டை செய்தவர்.

“முதலில் நான் உருவாக்கியது மேக்அப் முறையில் கேமராவை குழப்பியது என்றால் இந்த உ்டை என்பது அணிந்திருப்பவரின் முகத்தை நீரில் தெரியும் தன்மையில் மாற்றுவதோடு சுற்றியுள்ள சூழலையும் மாற்றிவிடுகிறது.

உங்களுக்கு பின்னால் உள்ளவருக்கு இந்த ஆடை போர்த்தியிருக்கிறீர்களா அல்லது அணிந்திருக்கிறீர்களா என்பதே தெரியாது” என தனது ஆடை குறித்து விளக்குகிறார் ஹார்வி.  இந்த ஆடையை ஹைபென் லேப்ஸ் நிறுவனத்தோடு சேர்ந்து ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கிறார்.

“1910 காலகட்டத்தில் எடுத்த புகைப்படங்களை பார்த்தீர்கள் என்றால், அதில் அனைவரும் தொப்பி அணிந்திருப்பார்கள். இன்றும் அப்படி  மோசமான அந்தரங்க சுதந்திரத்தை பறிகொடுத்த அவல நிலையிலிருக்கிறோம்” கள யதார்த்தம் பேசும் ஹார்வி துல்லியமான தகவல்களில் திகிலூட்டுகிறார்.

குற்றவாளிகளை கண்டறிய ஒருவரின் உதடு வடிவம், கண் இமைகளின் உள்வட்டம், மூக்கு மற்றும் வாய் அமைந்துள்ள வடிவம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்கின்றனர் என்று சீனாவிலுள்ள ஷாங்காய் ஜியாவோ டாங் பல்கலைக்கழக ஆராய்ச்சிக்குறிப்பு தகவல் தெரிவிக்கிறது. டிஜிட்டல் சாமி இவர்தான்.

- ஏ.ஆர்.நதியா