புகழ்பெற்ற வாள்களின் வரலாறு



அதிநவீன துப்பாக்கியிலிருந்து அணுகுண்டுகள் வரை சகஜமாகப் புழங்கி வரும் இந்தக் காலத்திலும் வாள் சண்டை நமக்குள் ஏற்படுத்தும் ஆர்வம் என்பது அலாதியான ஒன்று. முதன்முதலில் உருவான வாள், (செம்பு வாள்) தற்போது பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நாகரிக நகரமான ஹரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதற்குப் பிறகு நடந்த பல்வேறு போர்களுக்கு இரும்பினால் செய்யப்பட்ட வாள்கள் அம்பாரமாய் உருவாக்கப்பட்டன. வீரர்கள் பயன்படுத்தும் வாளை மன்னர் பயன்படுத்த முடியுமா? அவருக்கென தனித்துவமான அலங்காரங்கள் சேர்த்த, கற்கள் பதித்த வாள்கள் உருவாக்கப்பட்டன. நாம் பார்க்கப்போவது அப்படிப் புகழ்பெற்ற சில வாள்களின் வீரம் செறிந்த வரலாற்றையே!

ஏழு கிளை வாள்

கி.பி 4ம் நூற்றாண்டில் தெற்கு கொரியாவை  ஆட்சி புரிந்து வந்த தொன்மையான வம்சம் பேக்ஜே (Baekje) ஆகும். இந்த வம்சத்தினர், தமது ஆட்சியில் சீனாவையும், மேற்கு கொரியாவின் பெரும்பகுதிகளையும் வாளின் நுனியில் வைத்திருந்தனர். அன்று கொரியாவை ஆண்டுவந்த கோகுர்யா, சிலா ஆகிய அரச குடும்ப வரிசையில் பேக்ஜே வம்சத்தினருக்கும் தனி இடமுண்டு.

கி.பி. 372ம் ஆண்டில் ஜெயுன்சோகோ பேக்ஜே மன்னரால் ஜப்பான் மன்னரான வா (Wa) என்பவருக்கு அன்பளிப்பாக ஏழு கிளைகளைக் கொண்ட வாள் வழங்கப்பட்டது. கி.பி 4ம் நூற்றாண்டில் உருவான இந்த வாள், தற்போது ஜப்பானில் உள்ள டென்ரி எனும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. 74.9 செ.மீ நீளமுள்ள இந்த வாளின் மத்தியில் உள்ள குறிப்புக்கு தங்கம் பூசப்பட்டுள்ளது. கொரியா மாணவர்கள் ஜப்பானில் பௌத்தம் கற்கச் செல்வதற்கு அன்பளிப்பாக இந்த வாள் கொடுக்கப்பட்டது என்பது வினோதம்தானே! புத்தம் வீரம் கச்சாமி! 

வில்லியம் வாலஸின் வாள்

1272 - 1305 காலகட்டத்தில் ஸ்காட்லாந்து நாட்டிற்காக ரத்தம் சிந்திய ஒரு ஆக்‌ஷன் ஹீரோதான் வில்லியம் வாலஸ். இங்கிலாந்தை எதிர்த்து ஸ்காட்லாந்தின் சுதந்திரத்திற்காக போராடிய இவர், ஸ்காட்லாந்து நாட்டின் எல்லை காக்கும் ராஜ்கிரணாகவே கருதி போற்றப்பட்டவர். இவரின் தலைமையிலான வீரர்கள் பலரும் நேருக்கு நேர் கத்திச்சண்டை செய்வதில் வல்லவர்கள். தங்களின் வாளில், தாங்கள் பெற்ற வெற்றிகளைக் குறித்தும் வைத்திருந்தனர் என்றால் பாருங்கள்.

இங்கிலாந்து மன்னர் எட்வர்டிடம் ஒருநாள் வசமாக சிக்கியவரின் மீது  உடனே தேசத் துரோகச் சட்டம் பாய, வாலஸ் துணிந்து மரணத்தை ஏற்றார். அவரின் வாள் மட்டுமல்ல, அவரின் வீரமும் ஸ்காட்லாந்து மண் முழுவதும் புகழ்பெற்றது. 163 செ.மீ உயரம் கொண்ட இந்த வாளின் எடை 2.7 கிலோ ஆகும். ஸ்காட்லாந்தின் ஸ்டர்லிங் எனுமிடத்திலுள்ள வாலஸ் நினைவகத்தில் தற்போது வாள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நாட்டுப்பற்று நாயகன்!

டோமோயோகி யாமஷிட்டா வாள்

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் வசமிருந்த பிலிப்பைன்ஸ் தீவுகளில், இம்பீரியல் ராணுவத் தளபதியாக பலரது வாழ்வையும் நூடுல்ஸாக சிதைத்த வீரர்தான் யாமஷிட்டா (1885-1944). ஜப்பான் கைப்பற்றி வைத்திருந்த மலேசியா, சிங்கப்பூர் என இரு நாடுகளையும் போரில் ஜப்பான் இழந்ததும் நிலைமை மாறியது.

 மணிலா படுகொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்பாடுகளில் யாமஷிட்டா ஈடுபட்டதாகக் கூறி அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இவரது பெயரில் யாமஷிட்டா ஸ்டேண்டர்டு என போர் குற்றங்களுக்கான சட்டமே இயற்றப்பட்டு உள்ளது.  ஃப்யூஜிவாரா கானேனாகா எனும் புகழ்பெற்ற வாள் தயாரிப்பாளரால் உருவாக்கப்பட்ட வாள் இது. குற்றமே தண்டனை!

சான் மார்ட்டின் வளைவு வாள்

தென் அமெரிக்க விடுதலைக்காக ஸ்பெயினை எதிர்த்துப் போராடிய விடுதலை வீரர் ஜோஸ் டி சான் மார்ட்டின் (1778- 1850) பயன்படுத்திய வாள் இது. தென் அமெரிக்காவின் நாயகனாக மட்டுமல்லாது பெரு நாட்டின் காவலராகவும் இவர் இருந்தார். இவரது வழிகாட்டலில் பெரு நாடு 1821 ஜூலை 21 அன்று சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது.

போர் செய்வதற்கான திறன் கொண்ட வாள் இது. தன் இறப்பு வரை இந்த வாளை மார்ட்டின் தன்னுடன் வைத்திருந்தார். தற்போது அர்ஜென்டினா நாட்டின் தலைநகரான பியூனஸ் அயர்ஸில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இருமுறை திருடப்பட்ட இந்த வாள் தற்போது கண்ணாடிக் கூண்டுக்குள் வைத்து பத்திரமாகப் பாதுகாக்கப்படுகிறது. சுதந்திர வாள்!

டிஸோனா வாள்

கேஸ்டைல் எனும் தீபகற்ப நாடு மத்தியக்  கால பேரரசுகளில் ஒன்று. கி.பி. 11ம் நூற்றாண்டில் அதன் சிறு நகரமான விவாரில் பிறந்த எல் சிட், மாவீரராகவும், கல்வியாளராகவும் மிளிர்ந்தார்.  ஆறாவது அல்போன்ஸ் மன்னரின் ராணுவத்தளபதியாக ஓவர்டைம் கேட்டு வாங்கி உழைத்ததால் ஸ்பானிஷ் நாட்டின் நாயகனாக உயர்ந்தவர்.

அந்தளவு கடமை உணர்ச்சி கொண்ட நாயகனின் கை சுழற்றிய வாளான டிஸோனா 103 செ.மீ உயரமும், 1.1 கிலோ எடையும் கொண்டது. ஒவ்வொரு வாளும் ஏதாவதொரு நூற்றாண்டு மனிதர்களின் தீராத கதைகளை பேசிக்கொண்டிருக்கின்றன என்பது உண்மைதானே!

- ச.அன்பரசு