டி.என்.ஏ.வுக்கு உத்வேகம் தரும் ஊட்டச்சத்து சிகிச்சை!



உடல் மொழி ரகசியங்கள் 5

டி.என்.ஏ கட்டமைப்பில் உண்டாகும் இயல்பு மாற்றம் ஒவ்வொரு செல் படியெடுப்பு செய்முறையிலும் மெல்லப் பெருகும். அதனால்தான் ஒருவருக்கு 20 வயதில் இருக்கும் உடல் தோற்றம் 50 வயதில் மொத்தமாக மாறி விடுகிறது. இந்த உருவமாற்றம் டி.என்.ஏ கட்டமைப்பின் இயல்பு மாற்றத்தால்தான் உண்டாகிறது.

குறுகிய காலத்தில் இந்த டி.என்.ஏ இயல்பு மாற்ற விளைவுகளைக் காண முடியாது. பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் உடல் புறத்தோற்றத்தில் மாற்றங்கள் தெரியும். எ.கா: சூரிய ஒளியின் புறஊதாக் கதிர்வீச்சின் தாக்கம் தோலில் ஏற்படுத்தும் விளைவுகள் முதலில் தெரியாது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, தோல் செல்களில் ஏற்படும் மாற்றங்கள் பெருகி உடல் புறத்தோற்றம் பெருமளவில் மாறியிருப்பதைக் காணலாம்.

டிரான்ஸ்கிரிப்ஷன் செய்முறையில் டி.என்.ஏ குறைபாடுகள்:(‘DNA’ ERRORS DURING TRANSCRIPTION)

உடல் தேவைக்கென  தனிவகைப் புரதங்கள் அல்லது என்சைம்கள் செல்களில் உருவாக்கப்படுகின்றன. இந்த ெசய்முறையில், குறிப்பிட்ட மரபணுக்களில் பதிந்துள்ள செய்முறை குறிப்புகள் டி.என்.ஏ மூலக்கூறு களிலிருந்து ஆர்.என்.ஏ மூலக்கூறுகளுக்கு மாற்றப்படுகிறது. இந்த செய்முறைக் குறிப்புகளை முன்மாதிரி வழிகாட்டியாகக் கொண்டு ேதவையான, தனிவகை புரதங்கள் (அ) என்சைம்கள் கட்டமைக்கப்படுகின்றன.

*டி .என்.ஏ மூலக்கூறுகளை முன்மாதிரியாகக் கொண்டு ஆர்.என்.ஏ எனும் செய்தி மூலக்கூறு கட்டமைக்கப்படுகிறது. எனவே டி.என்.ஏ மூலக்கூறில் பதிந்துள்ள மரபியல் செய்முறைக் குறிப்புகள் ஆர்.என்.ஏ மூலக்கூறுகளில் படியெடுக்கப்படுகின்றன (அ) பதிக்கப்படுகின்றன. இத்தகைய செய்முறையே ‘டிரான்ஸ்கிரிப்ஷன்’ எனும் மரபியல் செய்தி மாற்றமாகும்.

*புரதங்கள் மற்றும் என்சைம்களில் உள்ள வேதியங்கள்தான் ‘அமினோ அமிலங்கள்’. நாம் உண்ணும் மீன், கோழி, முட்டை முதலிய உணவுகளில் செறிந்துள்ள புரதங்கள் உணவு செரிப்புமுறையில் அமினோ அமிலங்களாகப் பிரிக்கப்பட்டு, உடல் செல்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. செல்களின் டி.என்.ஏ.வில் உள்ள செய்முறைக் குறிப்புகளைச் சார்ந்து, அமினோ அமிலங்கள் மறுஇணைப்பு (Reassemble) செய்யப்பட்டு, புதிய புரதங்கள் உருவாக்கப்படுகின்றன.

*புரதங்கள் உருவாக்கப்படும் ‘டிரான்ஸ்கிரிப்ஷன்’ செய்முறையில், தேவையான அமினோ அமிலங்கள் இல்லாதபோது, சிக்கல்கள் உண்டாகும். அதாவது, தேவையான புரதங்கள் அல்லது இன்றியமையா நியூரோடிரான்ஸ்மிட்டர்கள் கூட உருவாகாது. எ.கா: மிக முக்கியமான ‘செரடோனின்’ நியூரோடிரான்ஸ்மிட்டர் உருவாகாது. இதன் விளைவாக, கடுமையான மனத்தளர்ச்சி நோய்
உண்டாகும்.

*புரதங்களை உருவாக்கும் இந்த டிரான்ஸ்கிரிப்ஷன் செய்முறை மிகத்துல்லியமாக இருந்தாலும், வேறு பல தடைகளால், புரதங்கள் உருவாக்கச் செய்முறை தடுக்கப்படும். எ.கா: புரதங்கள் செறிந்துள்ள உணவுப்பொருட்களை (கோழி இறைச்சி, மீன்) கடும் வெப்பத்தில் வறுத்தல், பொரித்தல் எனும் சமையல் முறையால் புரதங்கள் ‘AGE’ (Advanced Glycation End Product) எனும் நச்சுப் பொருளை உருவாக்கி விடுகின்றன.

இந்த ‘ஏஜ்’ என்பது குளுக்கோஸ் புரத மூலக்கூறுகளோடு இணைந்து கடும் வெப்பத்தில் வேதிய மாற்றங்களை உண்டாக்குகிறது. அதனால் புரதங்களின் மூலக்கூறுகள் குறுக்கு இணைப்பு மாற்றம் அடையும் செய்முறையே ‘கிளைகேஷன்’ (Glycation) ஆகும். ‘கிளைகேஷன்’ உருவாக்கும் பொருள்தான் ஏஜ் எனும் கடும் நச்சுப் பொருள். ஃபிரி ரேடிகல்களைப் போலவே இவற்றாலும் டி.என்.ஏ. தாக்கி சிதைக்கப்படும். ஏஜ் சீர்கேடுகளாலும், புரதங்களை உருவாக்கும் ‘டிரான்ஸ்கிரிப்ஷன்’ செய்முறை தடைப்படும்.

டாக்டர் எரிக் போராட்டம்

டாக்டர் ‘எரிக்’ ஒரு மருத்துவர் என்றாலும், அவர் உடலில் அணுகுண்டு ஒன்று வெடிக்கக் காத்திருப்பதை அவர் அறியவில்லை. 1996ம் ஆண்டு இரவில் உறங்கிக் கொண்டிருந்தவர் கடுமையான நெஞ்சுவலியால் எழுந்து பலமுறை வாந்தி எடுத்தார். அதோடு அவர் உடல் நெருப்பாகச் சுட, அவர் மனைவி அவரை மருத்துவமனையில் சேர்த்தார்.

மருத்துவமனை ஆய்வுகளில், ‘எரிக்’ ரத்தத்தில் வெள்ளை செல்கள் எண்ணிக்கை இயல்பு அளவுக்கு மேல் 4 மடங்கு கூடுதலாக இருப்பது கண்டறியப்பட்டது. நோய் ஆய்வில்  எரிக்கை வெள்ளை செல் புற்றுநோய் (Myelogenous Leukemia) தாக்கியது கண்டறியப்பட்டது. உடனடியாக சிகிச்சை தொடங்கவில்லையெனில் ‘எரிக்’ சில நாட்களில் இறந்து விடுவார் என்றும், மருத்துவத்தினாலும் அவரின் வாழ்நாள் குறைவு என மருத்துவர்கள் கூறி விட்டனர்.

டாக்டர் எரிக், பல நோயாளி களுக்கு ஊட்டச்சத்து மருத்துவம் செய்து வென்றவர். எனினும் ஊட்டச்சத்துக்கள்  பயன்தர நீண்ட நாட்கள் ஆகும். எனவே எரிக் நெஞ்சு வலி, வாந்தியைக் குறைக்க, ஊட்டச்சத்து மருத்துவத்துக்குத் தன்னை தயார்படுத்திக் கொள்வதற்காக புற்று சிகிச்சையான கீமோதெரபிக்கு உடன்பட்டார். கூடவே அவர் விருப்பப்படி, ஊட்டச்சத்துக்களை துணை உணவுகளாக சாப்பிடத் தொடங்கினார்.அதன் விளைவு?

(ரகசியம் அறிவோம்)

ச.சிவ வல்லாளன்