தாம்பூல திருப்தி!




‘பிராக்ஸிமா பி’ எனும் புதிய பூமியைக் கண்டுபிடித்த செய்தி, தித்திக்கும் செய்திதான். ஆனால் ‘இன்னொரு பூமி’ இருக்கும் மிதப்பில் மனிதர்கள் இயற்கையை இன்னும் வேகமாக சூறையாடத் தொடங்குவார்களே!
- ஜி.மாணிக்கவேந்தன், திருச்சி.

ஒவ்வொரு ஆண்டும் உலகில் 750 பில்லியன் டாலர் மதிப்பில் உணவுப்பொருட்கள் வீணாகின்றன என்பது மின்னதிர்ச்சி செய்தி. ஏலம் போன தண்டி உப்பு, வீரர் பிர்ஸா முண்டா என ‘வரதட்சணை நகரம்’ தலைப்பில் வந்த துணுக்குகள் ஒவ்வொன்றும் ஸ்பெஷல் டேஸ்ட்.
- மு.வேதவல்லி, சென்னை-33.

தொன்மை சர்ச்சுகளிலிருந்து இன்றைய சர்ச்சுகள் வரை அறிந்துகொள்ள உதவிய ‘புதுமை தேவாலயங்கள்’ கட்டுரை சுப்ரீம் தரத்தில் வசியம் செய்தது.
- டி.தீபா கிரீஷன், கோவை.

இதயநோய்க்கு ஊட்டச்சத்து சிகிச்சை பலனளிக்கும் என்பது இதுவரை நான் அறியாத ரகசியம்தான். நிறம் மாறும் கண்ணாடி, அவசியத் தேவையான கண்டுபிடிப்பு என்பதை தனது பயன்பாடு  வழியே நிரூபித்தது. 
- பி.மணிபல்லவி, திருவள்ளூர்.

எளிய மொழியில் அறிவியலை செல்ஃபி நெருக்கத்தில் விளக்கிய ‘செல்ஃபி வித் சயின்ஸ்’ தொடர் கச்சிதமான விதத்தில் நறுக்கென நிறைவடைந்தது விருந்து. தாம்பூல திருப்தி!
- எல்.சங்கீதா சுப்ரமணி, திருப்பூர்.