சொகுசு டிரங்கு பெட்டிகள்!



இன்று டிரங்கு பெட்டிகளை வளையல் விற்பவர்கள்கூட எடுத்து வருவதில்லை. மியூசியப் பொருட்களைப் போல் பார்த்தாலும்,  அவை தரும் பாதுகாப்பும் சொகுசும் நவீன பயணப்பெட்டிகள் கூட தரமுடியாது என்பதை நமது முன்னோர்கள் அறிவார்கள்.

டிரங்கு பெட்டிகள் நம் நாட்டில் கண்டுகொள்ளப்படாவிட்டாலும் மேலைநாடுகளில் இன்றும் அவற்றுக்கு தன்னிகரற்ற மவுசு உண்டு. பல்வேறு வசதி களைக் கொண்ட வசீகரிக்கும் சொகுசு டிரங்கு பெட்டிகளை வாங்காவிட்டாலும் பார்த்து ரசிக்கலாமே!

மைக்கேல் கிளார்க்கின் டிரங்கு பெட்டி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், புகழ்பெற்ற லூயிஸ் உய்ட்டன் வடிவமைப்பு நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய பிரபலமான டிரங்கு பெட்டிதான் இது. இதனை வடிவமைக்கும்போது எப்படி பெட்டி அமைய வேண்டும் என பல்வேறு யோசனைகளை கிளார்க் வழங்கினார்.

140 சென்டி மீட்டர் உயர டிரங்கு பெட்டி இது. மென்மையான கிராபைட் கேன்வாஸ் கேஸால் உருவான இதில் கிரிக்கெட் உபகரணங்கள், ஷூக்கள், மேலாடைகள் என பலவற்றையும் இஷ்டம் போல வைக்கலாம். களைப்பானால் பாடல் கேட்க சவுண்ட் சிஸ்டம் வசதியும் உண்டு. இது விளையாட்டு வீரர்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது! விலை 1 லட்சத்து 70 ஆயிரம் டாலர்கள். பத்திரமாக பார்த்துக்கங்க!

குக்சி அழகு டிரங்கு பெட்டி

இத்தாலியில் கையினாலேயே இழைத்து உருவாக்கப்பட்ட குக்சி நிறுவன சொகுசுப் பெட்டி! கறுப்பு தோல் கவர் போர்த்திய 13 டிராயர்கள் கொண்டது. உள்ளே மர டிராயர், நகைகள் வைக்க லினன் துணி டிராயர் எல்லாம் உண்டு. பாதுகாக்க பூட்டு வசதிகளும் கொண்ட இதன் விலை 49 ஆயிரத்து 300 டாலர். அசர வைக்கும் அழகுப்பெட்டி.

லூயிஸ் உய்ட்டன் கிளாசிக் டிரங்கு பெட்டிகள்

 19ம் நூற்றாண்டிலிருந்து பல்வேறு பசையான  பெரிய கை மனிதர்களுக்கு சொகுசுப் பெட்டிகள் தயாரித்து வரும் லூயிஸ் உய்ட்டன் நிறுவனத்தினரால் 1854ம் ஆண்டு முதல் உருவாக்கப்படும் தோல் சுமைதாங்கி சொகுசுப் பெட்டி.

இதனுள் துணி அலமாரி, தற்காப்புக் கவசம், 4  சூட்கேஸ்கள், படகில் பயன்படும் டிரங்கு பெட்டிகள், நகைப்பெட்டி, சொகுசுப் பை மற்றும் ஹேட் கவர் ஆகியவை இருக்கும். ஹாலிவுட் நடிகைகளான பாரிஸ் ஹில்டன், கிம் கர்தாஷியன் உள்ளிட்டவர்கள் போற்றிப் பாதுகாக்கும் பெட்டிகள் இவைதான்.  விலை 60 ஆயிரம் டாலர்!

முதலைத்தோல் டிரங்கு பெட்டிகள்

2010ம் ஆண்டு பொட்டிகா வெனெட்டா நிறுவனத்தால் வசந்த கால கலெக்‌ஷனாக அறிமுகப்படுத்தப்பட்ட பெட்டிகள் இவை.  6 தனித்தனி சுமை தாங்கி செட்டுகளை தன்னகத்தே கொண்டது!  முதலையின் மேல் தோலிலிருந்து உருவாக்கப்பட்ட இதனுள் ஒரு சிறு சூட் கேஸ், ஒரு நடுத்தர சூட்கேஸ், ஒரு பெரிய சூட்கேஸ், துணிகள் எடுத்துச் செல்ல அழகிய கைப்பெட்டி என 6 பெட்டிகள் உள்ளன.

இவற்றை தனித்தனியாகவும் வாங்கலாம். வலுப்படுத்தப்பட்ட முனைகள்,   பாதுகாப்பான பூட்டு வசதிகளையும் கொண்ட மிக மென்மையான முதலைத்தோலில் உருவான சூப்பர் டிரங்கு பெட்டி களுக்கு  1 லட்சத்து 57 ஆயிரம் டாலர் கொடுக்கமாட்டீர்களா என்ன?

பயணிகளுக்கான டிரங்கு பெட்டி

இங்கிலாந்தைச் சேர்ந்த சொகுசுப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஷிவாஸ் ரீகல் மற்றும் குளோப் டிராட்டர் இணைந்து ‘மேட் ஃபார் ஜென்டில்மேன்’ என்ற பெயரில் தயாரித்த லிமிடெட் எடிஷன் சொகுசு டிரங்கு பெட்டி இது. வெள்ளை ஓக் மரத்தில் செய்யப்பட்ட 20 அங்குல உயரப் பெட்டியில் பாரம்பரிய வடிவமைப்பு, நேர்த்தியான வசதி மற்றும் தரத்திற்கு பஞ்சமில்லை.

அடியில் டிராலியும் இருப்பதால் எளிதில் இழுத்துச் சென்று விமானமோ, கப்பலோ உள்ளே பாதுகாப்பாக வைத்துவிட்டு பயணத்தை ரசிக்கலாம். இதனுள் மது, உணவு, துணிகள், கடிகாரங்கள், ஷூக்கள் வைப்பதற்கான கச்சிதமான இடம் உண்டு. தங்கும் இடத்தில் ஒரு அலமாரி போல நிறுத்தி வைக்கலாம். விலை அதிகமில்லை, 18 ஆயிரத்து 800 டாலர். மகிழ்ச்சிதானே!

- ராஜிராதா, பெங்களூரு.