54 ஆண்டுகள் மாரத்தான் ஓடிய வீரர்



விளையாட்டுப் போட்டிகள் ஒவ்வொன்றும், நாடுகளிடையே நடக்கும் மறைமுகமான போரை நிகர்த்தது. எனினும் இதில் நிகழும் சுவாரசியங்களுக்கும் பஞ்சமில்லை. மாரத்தானில் காணாமல் போன வீரர், பறவை சுடும் போட்டி, தாயும் மகளும் பங்கேற்ற ஒரே போட்டி என கீழேயுள்ள சுவாரசியக் களஞ்சியங்களை வாசிப்போம், வாருங்கள்!

*1908ம் ஆண்டிற்கு முன்பு  வரை ஒலிம்பிக்கில் மாரத்தான் ஓட்டத்தின் தூரம் 25 மைல் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 1908  லண்டன் ஒலிம்பிக்ஸின்போது ராணி அலெக்சாந்திரியாவும் மற்ற அரச குடும்பத்தினரும் ராஜ இருக்கையில் அமர்ந்து பந்தய முடிவைக் காணும் தூரம் வரை தடத்தை நீடித்து, அதையே மாரத்தான் ஓடும் தூரமாக நிர்ணயித்தார்கள். 1921ம் ஆண்டில்  சர்வதேச தடகளக் கூட்டமைப்பு சங்கம் (IAAF) மாரத்தான் தூரத்தை 42.195 கி.மீ. என அதிகாரபூர்வமாக அறிவித்தது.

*தியேட்டர்களில் DTS எனப்படும் Digital Theatre Sound முறையை கலிபோர்னியாவின் வெஸ்ட்லேக் கிராமத்தில் உள்ள டிஜிட்டல் தியேட்டர் சிஸ்டம்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இத்தொழில்நுட்பத்தில் முதன்முதலில் 1993ம் ஆண்டு ஜூன் மாதம் ‘ஜுராஸிக் பார்க்’ திரைப்படம் வெளியானது.

*கிரிக்கெட் கடவுளாகக் கருதப்படும் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன், 1932ம் ஆண்டில் வட அமெரிக்காவில் விளையாடியபோது நியூயார்க் மேற்கு இந்தியர்கள் அணிக்கு எதிராக ‘ரன்’ எதுவும் எடுக்காமல் ‘டக்’  அவுட்டானார். இதைக் கேள்விப்பட்ட வால்ட் டிஸ்னி தனது கார்ட்டூன் கதாபாத்திரம் ஒன்றுக்கு ‘டொனால்ட் டக்’ என்ற பெயரினைச் சூட்டியதாக பரவலாக நம்பப்படுகிறது.

*ஒரே நபரின் இரண்டு கண் விழிகள் ஒவ்வொன்றும் மாறுபட்ட நிறத்தில் இருப்பதை heterochromia என்கிறார்கள். இப்பாதிப்பு கண்களில் அதிகம் ஏற்பட்டாலும் தோல் மற்றும் முடியிலும் ஏற்படுகிறது. மெலனின்  நிறமி அதிகரிப்பு (அ) பற்றாக்குறை காரணமாக இது தோன்றுகிறது.

*1900ம் ஆண்டு பாரிஸில் நடந்த ஒலிம்பிக்ஸில் ஒரு கூண்டிலிருந்து உயிருள்ள பறவைகளைப் பறக்கவிட்டு அதை சுட்டுக் கொல்லும் துப்பாக்கி சுடும் போட்டி இடம்பெற்றிருந்தது. பிரபுத்துவ போட்டியான இதில் பங்கேற்பாளர்களுக்கு முன் 27 மீ. தொலைவில் பறவைகள் பறக்க விடப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்டன. இதில் 2 பறவைகளை சுடாமல் தவற விட்டவர்கள் போட்டியிலிருந்து விலக்கப்பட்டனர். இப்போட்டியில் சுமார் 300 பறவைகள் கொல்லப்பட்டன. பின்னர் இப்போட்டி ஒலிம்பிக்ஸிலிருந்து நீக்கப்பட்டது. 

*அமெரிக்காவில் வசித்த இங்கிலாந்து நாட்டுக்காரரான வால்டர் டபிள்யூ. வைனன்ஸ் (Walter W.Winans (1852-1920)) என்பவர் 1908 மற்றும் 1912 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு துப்பாக்கி சுடுதலில் தங்கம் மற்றும் வெள்ளி வென்றார். 1912ல் நடந்த ஒலிம்பிக்ஸில் சிற்பம் செதுக்குவதில் தங்கப்பதக்கம் பெற்றார். இன்றுவரை இவர்  மட்டுமே கலை, விளையாட்டு இரண்டிலும் ஒலிம்பிக்ஸில் தங்கப்பதக்கம் பெற்ற வீரர் ஆவார்.

*ஷிஸோ கனகுறி (Shiso Kanakuri) என்ற ஜப்பானிய மாரத்தான் வீரர் 1912ம் ஆண்டு ஸ்டாக்ஹோமில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் ஓடும்போது பாதி வழியிலேயே காணாமல் போய் விட்டார்.

பின்னர் இவர், ஜப்பானில் வசிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. 1967ல் சுவிட்சர்லாந்து தொலைக்காட்சி இவரை மீண்டும் ஸ்டாக்ஹோமிற்கு அழைத்து தடைபட்ட மாரத்தான் ஓட்டத்தை நிறைவு செய்யும்படி கோரிக்கை வைக்க, அதை ஏற்று இவர் ஓட்டத்தை நிறைவு செய்தார். இதன்படி இவர் மாரத்தான் ஓட்டத்தை நிறைவு செய்ய எடுத்துக்கொண்ட காலம் 54 ஆண்டுகள் 8 மாதங்கள் 6 நாட்கள் 5 மணிகள் 32 நிமிடங்கள் ஆகும்.

*பெரும்பாலான கதைகள் ‘முன்னொரு காலத்தில்...’ எனத் தொடங்கும். ஆனால் கொரிய நாட்டுக் கதைகள் மட்டும் ‘புலிகள் புகை பிடிக்கும் காலத்திற்கு முன்பு...’ என்று தொடங்குகின்றன.

*ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முதலில் தங்கப் பதக்கம் பெற்ற அமெரிக்கப் பெண்மணி மார்கரெட் அபோட் (Margaret Abbott) ஆவார். இவர் 1900ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்ஸில் கோல்ஃப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றார். இதே போட்டியில் கலந்துகொண்ட இவரது தாயாரும், எழுத்தாளருமான மேரி அபோட் ஏழாம் இடத்தைப் பிடித்தார். ஒலிம்பிக்ஸில் தாயும் மகளும் கலந்து கொண்ட ஒரே போட்டி இதுதான்.

*சீனாவில் உயிர்க்காட்சி சாலைகளில் பிறக்கும் பாண்டா கரடிகளுக்கு அது பிறந்த 100 நாட்களுக்குப் பிறகே பெயர் சூட்டும் வழக்கம் நிலவுகிறது. 

*சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் சர் தோரப்ஜி டாடா ஆவார். நீட்டா அம்பானி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக  நியமிக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்மணி ஆவார்.

*ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள ஓசியன் (OSIAN) என்ற நகரத்தில் உள்ள இந்து மற்றும் சமணக் கோயில்கள் 8 - 11ம் நூற்றாண்டு காலகட்டத்தில் கட்டப்பட்டவை. இங்குள்ள சிற்பங்களின் சிறப்பினால் இவை ‘ராஜஸ்தானின் கஜூராஹோ’ என அழைக்கப்படுகின்றன.

*ஒவ்வொரு நிமிடமும் உலகில் 36 கால்பந்தாட்ட மைதானங்களின் பரப்பளவுக்கு சமமான காடுகள் அழிக்கப்படுகின்றன.

- க.ரவீந்திரன், ஈரோடு.