சும்மா இருப்பது சின்ன விஷயமா?



சும்மா ஒரு இடத்தில் சோம்பலுடன் இருப்பது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்பதை வடிவேலு ஆதாரத்துடன் ஒரு திரைப்படத்தில் காட்டியிருப்பார். ஆனாலும் சும்மா (சோம்பி)யிருப்பது என்ற விஷயம் உலக அளவில் தொற்றுநோய் போல பரவிக் கிடக்கும்  நிலை. இந்தியாவில் மட்டும்தான் சோம்பேறிகள் இருப்பதாக எண்ண வேண்டாம். பணக்கார நாடுகளில் இவர்கள் இன்னமும் அதிகம்.

இந்தியாவில் சும்மா இருந்தால் அடுத்த வேலை உணவுக்குத் திண்டாட்டம். டாஸ்மாக்கிற்கு கொடுப்பதற்காகவாவது கொஞ்சம் உழைக்க வேண்டியுள்ளது. ஆனால் பணக்கார நாடுகளில்?சும்மா இருப்பவர்களால்   உலகுக்கு சுகாதாரச் செலவினங்களில் 2013ம் ஆண்டில்  54 பில்லியன் டாலர்கள் ஆனது. இவர்களால் இழந்த உற்பத்தித் திறனின் மதிப்பு, சுமார் 13 பில்லியன் டாலர்கள். இதனை ‘லேன்செட்’ என்ற பிரிட்டன்  மருத்துவ மாத இதழில் சில ஆய்வாளர்கள் சும்மா இருக்காமல் ஆராய்ச்சி செய்து ஆய்வுக்கட்டுரை வெளியிட்டுள்ளனர்.

ஓடியாடி சுறுசுறுப்பாக உழைக்காமல் சும்மா ‘உட்கார்ந்தே’ இருக்கும் வாழ்க்கை முறையால், உழைப்பின்மையால்  ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் பேர்  இறப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.எதுவும் செய்யாமல் சும்மா இருப்பவர்களுக்கும் தினமும் ஒரு மணி நேர சுறுசுறுப்பான உடற்
பயிற்சி தேவை. அதையாவது சோம்பி இருக்காமல் செய்தால் வாழ்நாள் கூடும்  என்று அவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இது உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த உடற்பயிற்சி நேரத்தை விட சுமார் மூன்று மடங்கு அதிகமானது.

சும்மா சோம்பி இருப்பவர்களால் ஏற்படும் பொருளாதாரச் சுமை, ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கே சுமையாகும். மிக மேம்பட்ட சுகாதார அமைப்புகள் உள்ள பணக்கார நாடுகள்  இந்த சும்மா  பிரச்னைக்கு அதிக விலை தரவேண்டியிருக்கிறது  என்று கவலைப்படுகிறார்கள் ஆய்வாளர்கள்.

- சீ.சுப்பிரமணியன், தூத்துக்குடி.