தூவானம்



ஓவியக் கவிஞர்

நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞர், ரவீந்திரநாத் தாகூர். இவரை ஒரு ஓவியராக மதித்து, தன் ஓவியக் கண்காட்சியில் பங்கேற்குமாறு ஓர் அமைப்பு அவரைக்கேட்டுக் கொண்டது. அவரும் சென்று வந்தார்  நகரம்- பாரிஸ். ஆண்டு: 1932.

மத்தாப்பே முதல்

சிவகாசியில் 1923ம் ஆண்டுதான் முதன்முதலாக பட்டாசு தயாரிக்கப்பட்டது. அதிலும் ஒளி தரும் மத்தாப்புதான் ஒரே தயாரிப்பாக அப்போது இருந்தது. வண்ண மத்தாப்புகளில் உள்ள பேரியம் பச்சை நிறத்தையும், சோடியம் மஞ்சள் நிறத்தையும், தாமிரம் நீல நிறத்தையும், ஸ்ட்ரான்ஷியம் நைட்ரேட் சிவப்பு நிறத்தையும் தருகின்றன.

தேள் கொடுக்கும் ஊசியும்

மருத்துவரால் நோயாளிக்கு போடப்படும் இஞ்செக்‌ஷன் எனப்படும் ஊசி கண்டுபிடிக்கப்பட தேள் ஆதாரமாக இருந்திருக்கிறது. இது தன் கொடுக்கால் பற்றிக்கொண்டு அந்த கொடுக்கு வழியாக விஷத்தை இறக்கும் அதன் இயல்பே, மருத்துவ ஊசி கண்டுபிடிக்கப்பட காரணம்.

சிந்தாவிட்டால் அன்பளிப்பு

பிரான்ஸ் நாட்டு ஓட்டல்களில் குழந்தைகளுக்கு சாப்பிடும் ஒழுக்கத்தை சொல்லித் தருகிறார்கள். எப்படி? தனக்குப் பரிமாறப்பட்ட உணவை மேசை விரிப்பில் சிந்தாமல் சாப்பிடும் குழந்தைகளுக்கு பொம்மைகள் போன்ற சிறு அன்பளிப்புகளை ஓட்டல் நிர்வாகம் வழங்குகிறது!

புத்தகமே, புத்தகமே...

இங்கிலாந்தில் ஆன்வை என்று ஒரு ஊர். இங்கே மக்கள்தொகையே இரண்டாயிரத்துக்கும் குறைவுதான். ஆனால் இவ்வூரில் உள்ள நூலகத்தில் 15 லட்சம் புத்தகங்கள் உள்ளன! ஒவ்வொரு ஆண்டும் மிக பிரமாண்டமாக புத்தகச் சந்தையும் நடைபெறுகிறது. இந்த சந்தையில் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.



கொசுவுக்கும் ஒரு தினம்!

ஆகஸ்ட் 20ம் தேதி உலக கொசு ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஏன் இந்தத் தேதி? 1899ம் ஆண்டு, இதே நாளில்தான் மலேரியா நோய் பரவுவதற்குக் கொசுதான் காரணம் என்பதை சர் ரெனால்ட் ராஸ் என்பவர் கண்டுபிடித்தார்.

முதல் காரோட்டம்

சென்னையில் முதன்முதலில் கார் ஓடியது தற்போது அண்ணாசாலை என்றழைக்கப்படும் மவுண்ட் ரோடில்தான். இந்த ஓட்டம், 1894ம் ஆண்டு நடைபெற்றது.

வேத முதல்வன்

தோன்றிய காலம் அறியமுடி யாத இந்திய அதிசயங்களில் ஒன்று வேதங்கள். இந்த வேதங்களை முதன்முதலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் மாக்ஸ்முல்லர் என்ற ஜெர்மானியர். இவராலேயே ஜெர்மனி நாட்டில், இந்திய வேதங்கள் பிரபலமாயின.

பார்வையற்றோர் நூலகம்

பார்வையற்றோர் பிரெய்லி முறைப்படி படித்துத் தெரிந்துகொள்ளும் வகையில் நூல்கள் வெளியாகின்றன. பல நூல் நிலையங்களில் இவர்களுக்கென்றே பிரத்யேகமாக அந்தவகை நூல்கள் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. அங்கே சென்று அவர்கள் நூல்களைப் படித்து மகிழ்கிறார்கள். இந்த வகையில் பார்வையற்றோருக்கென்றே முதலில் நூலகம் ஆரம்பிக்கப்பட்டது இந்தியாவின் டேராடூன் நகரில்தான்.

நாய்களுக்கும் பத்திரிகை

‘நியூயார்க் டாக்’ - இது அமெரிக்காவிலிருந்து இரு மாதங்களுக்கு ஒருமுறை வெளியாகும் பத்திரிகை. நாய்கள் பற்றிய எல்லா தகவல்களையும் இதன் மூலம் அறியலாம். அவற்றை வளர்க்கும் முறை, அவற்றுக்கான மருத்துவம், விளையாட்டுப் பொருட்கள், வாசனைப் பூச்சுகள் என்று பல பகுதிகள் உள்ளன. இவ்வளவு ஏன், நாய்களுக்கான ஜோதிடப் பகுதிகூட உண்டு!

- வித்யுத்