காய்ச்சலுக்கு கடிவாளம் போடும் மருந்து!



டாக்டர் கு.கணேசன்

‘‘காய்ச்சலா, தலைவலியா... உடனே ஒரு பாராசிட்டமால் மாத்திரையைப் போட்டுக்கோ, அஞ்சு நிமிஷத்தில சரியாப் போகும்’’ என்று படித்தவர் முதல் பாமரர் வரை பலரும் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அலோபதி மருந்துகளிலேயே மிக அதிக அளவில் மக்களால் பயன்படுத்தப்படும் மருந்து இதுதான். உலகில் காய்ச்சலுக்காக தினமும் கோடிக்கான பேர் இந்த மாத்திரையை விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். காய்ச்சல் என்பது தனிப்பட்ட நோயல்ல; அது ஒரு நோயின் அறிகுறி. மனித உடலின் இயல்பான வெப்பநிலை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட். இதற்கு மேல் வெப்பநிலை அதிகரித்தால் அதைக் காய்ச்சல் என்கிறோம். பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணி, காளான் கிருமி என்று ஏதாவது ஒன்று உடலைத் தாக்கும்போது காய்ச்சல் வருகிறது. தாக்கும் கிருமியின் தன்மையைப் பொறுத்து காய்ச்சலின் குணம் அமைகிறது.

நம் மூளையில் ஹைப்போதலாமஸ் எனும் பகுதி உள்ளது. குளிர்சாதனப் பெட்டியில் உள்ள ‘தெர்மோஸ்டேட்’ போல இது வேலை செய்து, நம் உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்துக் கொள்கிறது. ஆனால் கிருமிகள் உடலைப் பாதிக்கும்போது இதுவும் பாதிக்கப்படும். அப்போது இது உடலின் வெப்பத்தைக் கட்டுப்படுத்தத் தவறிவிடும். இதன் விளைவாக வருவதுதான் காய்ச்சல். காய்ச்சல் பல காரணங்களால் வருகிறது. பலருக்கும் பொதுவாக வரக்கூடியது ‘ஃப்ளூ’ காய்ச்சல். இது வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. அசுத்தமான காற்று மூலம் இது பரவுகிறது. காய்ச்சலுடன் மூக்கு ஒழுகுதல், கண்ணில் நீர் வடிதல், இருமல் போன்ற அறிகுறிகள் இதில் இருக்கும். காய்ச்சல் ஒரு வாரம் நீடிக்கும். சின்னம்மை, தட்டம்மை, அம்மைக்கட்டு போன்றவையும் வைரஸால் வருகிற நோய்கள்தான். இந்த நோய்களில் காய்ச்சல் கடுமையாக இருக்கும். உடலில் அம்மைக் கொப்புளங்கள் தோன்றும். அம்மைக்கட்டு நோயில் காதோடு சேர்த்து வீக்கம் காணப்படும்.
‘டைபாய்டு’ காய்ச்சல் சால்மோனல்லா எனும் பாக்டீரியாவால் வருகிறது. துவக்கத்தில் காய்ச்சல் மிதமாக இருக்கும். நாளாக ஆக காய்ச்சல் கடுமையாகும். நாக்கில் வெண்படலம் தோன்றும். வயிற்றுவலி, வாந்தி ஏற்படும். அசுத்தமான குடிநீர் மற்றும் உணவு மூலம் இது பரவுகிறது. பாக்டீரியாவால் வரக்கூடிய மற்றொரு காய்ச்சல், நிமோனியா. கடுமையான காய்ச்சல், இடைவிடாத இருமல், சளி, நெஞ்சுவலி போன்றவை இதன் அறிகுறிகள்.

குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் வரக்கூடிய நோய்களில் மூளைக் காய்ச்சல் முக்கியமானது. பன்றிகள் நிறைந்த இடங்களில் வசிப்போருக்கு மூளைக் காய்ச்சல் வரும். கொசு கடிப்பதால் இது பரவும். கடுமையான காய்ச்சல், இடைவிடாத வாந்தி, கழுத்துவலி, கழுத்தை அசைக்க முடியாத நிலைமை இதன் முக்கிய அறிகுறிகள். கொசுக்களால் பரவும் மற்றொரு காய்ச்சல் டெங்கு காய்ச்சல். பெரியவர்களைவிட குழந்தைகளைத்தான் இது அதிகமாகத் தாக்கும். கடுமையான காய்ச்சல், தலைவலி, மூட்டுவலி, தோலில் சிவந்த தடிப்புகள் தோன்றுதல் போன்றவை இதன் அறிகுறிகள். சில நோய்களில் காய்ச்சல் வெளிப்படும் விதம் தனித்தன்மை கொண்டதாக இருக்கும். டைபாய்டு காய்ச்சல் தினமும் வரும். மலேரியா காய்ச்சல் ஒருநாள் விட்டு ஒருநாள் ஒரே நேரத்தில் வரும். தினமும் இரவு  நேரத்தில் மட்டும் காய்ச்சல் வருமானால் அது காசநோயின் அறிகுறி. குளிர் காய்ச்சல் வருமானால் மலேரியா, யானைக்கால் நோய், சிறுநீர்ப்பாதை அழற்சி, நெறிக்கட்டு போன்றவை காரணமாக இருக்கும்.



இப்படி எந்தக் காய்ச்சல் வந்தாலும் மருத்துவர்கள் முதலில் பாராசிட்டமால் மாத்திரை/ மருந்து/ ஊசியைப் பயன்படுத்தி காய்ச்சலைக் குறைக்கிறார்கள். அதைத் தொடர்ந்து காய்ச்சலுக்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்குரிய மருந்தைக் கொடுக்கிறார்கள். நோய் குணமாகிறது. பாராசிட்டமாலின் வேதிப்பெயர் ‘அசிட்டமினோபென்’. இதைக் கண்டுபிடித்தது ஒரு தனிக் கதை. கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் காய்ச்சலைக் கட்டுப்படுத்த ஆஸ்பிரின் மாத்திரையும் சின்கோனா மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படுகிற குயினின் என்ற மருந்தும் தரப்படுவது வழக்கத்தில் இருந்தது. 1880ல் சின்கோனா மரத்திற்குத் தட்டுப்பாடு வந்த காரணத்தால், புதிய மருந்தை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1873ல் அமெரிக்காவைச் சேர்ந்த வேதியிலாளர் ஹார்மன் நார்த்ரோப் மோர்ஸ் என்பவர் கிளேசியல் அசிட்டிக் அமிலத்திலிருந்து பாராசிட்டமாலை ஏற்கனவே கண்டுபிடித்திருந்தார். ஏனோ தெரியவில்லை, அதை அவர் மனிதப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவில்லை. இதைத் தொடர்ந்து 1886ல் அசிட்டனிலைடு என்ற மருந்தும், 1887ல் பினாசிட்டின் என்ற மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த இரண்டு மருந்துகளைப் பயன்படுத்துவர்களின் ரத்தச் சிவப்பணுக்களுக்கு ஆக்சிஜனை ஏற்றுக்கொள்ளும் சக்தி குறைந்துபோனது.

இதனால் உயிருக்கு ஆபத்து நேரக்கூடும் என்பதால் இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த ரத்தக்கோளாறு ஏற்படுவதற்கான காரணத்தை அறிய பெர்னார்ட் புரூடி, ஜூலியஸ் ஆக்செல்ரோட் எனும் இருவர் ஆராய்ச்சியில் இறங்கினர். 1948ல் இவர்களுடைய முயற்சிக்குப் பலன் கிடைத்தது. அசிட்டனிலைடு மற்றும் பினாசிட்டின் மருந்துகளில் பாராசிட்டமால் எனும் வளர்சிதைமாற்றப் பொருளும் இருக்கிறது; இதுதான் காய்ச்சலைக் கட்டுப்படுத்துகிறது. பாராசிட்டமாலும் இந்த மருந்துகளும் சேர்ந்திருக்கும்போது ரத்தக்கோளாறு ஏற்படுகிறது. அதே நேரத்தில் இவற்றிலிருந்து பாராசிட்டமாலைத் தனியாகப் பிரித்தெடுத்துப் பயன்படுத்தினால் ரத்தக் கோளாறைத் தவிர்த்து விடலாம்; காய்ச்சலையும் கட்டுப்படுத்தலாம் என்று தெரிவித்தனர். அதன்படி 1950ல் பாராசிட்டமால் மருந்தைத் தயாரிக்கத் தொடங்கினர். 1955ல் அமெரிக்காவில் ‘டைலினால்’ எனும் பெயரிலும் 1956ல் இங்கிலாந்தில் ‘பெனடால்’ எனும் பெயரிலும் இது மனிதப் பயன்பாட்டுக்கு வந்தது. இன்றைக்கு ஒவ்வொரு வீட்டிலும் காய்ச்சலுக்குக் கடிவாளம் போடும் மகத்தான முதலுதவி மருந்தாக  பாராசிட்டமால் வீற்றிருக்கிறது.

இது எப்படி வேலை செய்கிறது?

மூளையின் தெர்மோஸ்டேட்டாக விளங்குகிற ஹைப்போதலாமஸைத் தூண்டி அதைச் செயல்பட வைக்கிறது. உடலில் வியர்வை சுரப்பதை அதிகரிக்கச் செய்து அதன் வழியாக உடலின் வெப்பத்தை வெளியேற்றுகிறது. இதனால் காய்ச்சல் குறைகிறது.

(தொடரும்)