வினோத மரணங்கள்!



சுகமாக வாழ்வதற்கு மட்டுமல்ல, துன்பமின்றி இறப்பதற்குக்கூட அதிர்ஷ்டம் வேண்டும். ‘‘படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்படியே போய்விட்டார்’’  என்பார்கள். யாருக்கும் எந்த தொந்தரவும் தராமல், தானும் அவஸ்தைப்படாமல் போய்ச் சேர்ந்திருப்பார். இது மாதிரியான முடிவுதான் அனைவரின் விருப்பமும் ஆகும். எந்த மருத்துவ வசதியும் இல்லாத காலத்தில் மனிதனின் ஆயுள் என்பது 33 ஆண்டுகளாக இருந்தது. இன்றைய  மருத்துவ வசதிகள் நம்முடைய ஆயுள் காலத்தை சுமார் 100 ஆண்டுகள் வரை உயர்த்திவிட்டன. நோய், விபத்தால் தினம் தினம் இறப்பவர்கள் குறித்து அறிகிறோம். ஆனால் ஒருசிலருக்கு  எதிர்பாராதவிதமாக அதிர்ச்சி தரும் வினோத முடிவுகள் நிகழ்வதுண்டு. அதுமாதிரியான சில முடிவுகளின் தொகுப்பே இது!

தண்ணீர் குடித்த உயிர்

‘அதிகமாக தண்ணீர் குடித்ததால், அதுவே விஷமாகி செத்துப்போனார்’ என கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அமெரிக்காவின் ஃப்ளோரிடாவைச் சேர்ந்த 29 வயதான டினா கிறிஸ்டோபர்சன் சிறந்த புத்திசாலி.  இவருடைய அம்மா, வயிற்றில் கேன்சர் வந்து இறந்து போனார். அதனால், தனக்கும் கேன்சர்  நிச்சயம் இருக்கும் என்று நினைத்தார் டினா. எனவே, அடிக்கடி விரதம் இருந்து, வெறுமனே தண்ணீர் மட்டும் குடித்தார். தண்ணீர் வயிற்றை சுத்தம் செய்யும் என்று கருதினார். விரத நாட்களில் ஒரு நாளைக்கு 15 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பார். இப்படி அதிகமாகத் தண்ணீர் குடித்ததால் கிட்னிக்கு அதிக வேலை கொடுத்தார். ஒருநாள் கிட்னி களைத்துப் போய் தண்ணீரை வடிகட்டுவதை நிறுத்த, தண்ணீர் தாக்குப் பிடிக்க முடியாமல் நுரையீரலுக்குள் நுழைந்தது. அதனால் டினா,  1977ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி இறந்து போனார். மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெறாமல் தானாக கற்பனை செய்து கொண்டு சிகிச்சை பெற நினைத்தால் இத்தகைய விபரீதத்தில்தான் முடியும்!

மின்னல் குடித்த உயிர்

ஜேம்ஸ் ஒடிஸ், ஒரு அமெரிக்கர். இவர் தன் நண்பர்களிடம்,  ‘‘மின்னல் தாக்கித்தான் நான் இறப்பேன்’’ என அடிக்கடி கூறுவாராம். தகவல் மின்னலுக்கு எட்டியதா எனத் தெரியவில்லை. 1783ம் ஆண்டு மே 23ம் தேதி,  58வது வயதில் ஜேம்ஸ் ஒடிஸ், தன் வீட்டின் கீழே ஒரு இரும்புக் கம்பியில் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு மின்னல் அவரைத்  தாக்கியது. அதனால் ஜேம்ஸ் ஒடிஸ் உடல் கருகி இறந்தார். அவர் வார்த்தை உண்மையானதை பலரும் வியப்புடன் நினைவு கூர்ந்தார்கள்.
 


அரச விதி குடித்த உயிர்

ஒரு காலத்தில் ராஜா, ராணிகள் புனிதமாகக் கருதப்பட்டனர். அவர்களைத் தொடக்கூடாது; மீறி ெதாட்டால் கடும் தண்டனை கிடைக்கும் என்பது அரச விதி. 1880ம் ஆண்டு மே மாதத்தில் ஒருநாள்  தாய்லாந்து நாட்டின் ராணி சுனந்தாகுமாரி ரத்னா, அரசுக்குச் சொந்தமான ஒரு மாளிகையில் உள்ள குளத்தில் சொகுசுப் படகில் சுற்றுலா சென்றார். அதைப் பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென படகு தண்ணீரில் கவிழ்ந்தது. அதனால் ராணி நீரில் மூழ்கினார். கரையில் நின்றவர்கள் ராணியைப் பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர யாரும் தண்ணீரில் குதித்து ராணியைக் காப்பாற்றவில்லை.  ஏனெனில் ராணியைத் தொடக்கூடாது; மீறி  தொட்டால் கடும் தண்டனை கிடைக்கும் என்ற அரச விதி அவர்களைத் தடுத்தது. கரையில் நின்றிருந்தவர்களுக்கு நன்றாக நீச்சல் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. அரச கட்டுப்பாடே ராணியின் உயிரிழப்புக்கு காரணமாகிவிட்டது.
   
கடமை குடித்த உயிர்

அமெரிக்காவின் மெரிலாண்ட் பெட்டர்டன்  என்ற நகரின் மேயராக இருந்தவர் மோனிகா மையர்ஸ்.  கடமை உணர்வு மிக்கவர். ஒருமுறை செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வேலைகள் நடக்கும் இடத்திற்கு சென்றார். மூக்கைப் பிடித்துக் கொண்டு ‘ஒழுங்காக சுத்தம் செய்கிறார்களா?’ என்று கவனித்தார். செப்டிக் டேங்கை எட்டிப் பார்த்தபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து, 15 அடி ஆழமுள்ள செப்டிக் டேங்கில் மூழ்கி இறந்தார்.

ஆரஞ்சு தோல் குடித்த உயிர்

பாபி லீச், ஒரு வித்தியாசமான சாதனைப் பெண்மணி. 1911ல் இவர் நயாகரா உச்சியில், ஒரு பீப்பாய்க்குள் தன்னை அடைத்துக் கொண்டு அருவியோடு அருவியாய், கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார். 1926ம் ஆண்டு, ஒரு விமானத்திலிருந்து பாராசூட் மூலம் கீழே பறந்து நயாகரா நீர்வீழ்ச்சியில் இறங்கி சாதனை படைத்தார். ஆனால் பாபி லீச்சின் வாழ்க்கையில் விதி வேறுவிதமாக விளையாடியது. நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் அருகில் ஒரு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆரஞ்சு பழத்தின் தோல் சறுக்கி விழுந்து, காலை உடைத்துக் கொண்டு, பிறகு அந்தக் காலையே அறுவை சிகிச்சை செய்து எடுக்க வேண்டி வந்தது. இறுதியில் சிகிச்சை செய்த காலில் பிரச்னைகள் வந்து இறந்து போனார்.

- ராஜிராதா, பெங்களூரு.