ரோபோ ரகசியங்கள்



சென்ற இதழ் தொடர்ச்சி...

விண்வெளி ஆராய்ச்சிக்கு ரோபோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. சோவியத் யூனியன் வெள்ளி கிரகத்திற்கு விண் ஓடங்களை அனுப்பிய திட்டம் Venera ஆகும். 1970ல் Venera - 7 என்ற ரோபோ வெள்ளி கிரகத்தில் இறங்கி அங்கிருந்து பூமிக்கு விவரங்களை அனுப்பியது. இதுவே ஒரு கிரகத்திலிருந்து மற்றொரு கிரகத்திற்கு விவரங்களை அனுப்பிய முதல் ரோபோ ஆகும்.

வைகிங் - 1 என்ற விண்கலம் முதலில் செவ்வாய் கிரகத்தில் இறக்கப்பட்ட கருவி ஆகும். இதில் ஒரு தொலைநோக்கி பொருத்தப்பட்ட ரோபோ கரங்கள் மூலம் மண் மற்றும் பாறைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. நிலவை ஆராயவும் ரோபோக்கள் பெரிதும் உதவின.ஆஸ்திரேலியாவில் செம்மறிஆடுகளின் ரோமங்களை வெட்டுவதற்கு ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அணு உலைகளிலும் சுரங்கங்களிலும் ரோபோக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன. அவ்வளவு ஏன்... வீடுகளைத் துடைப்பதற்கும், சமையலறையில் காய்கறிகளை நறுக்கவும், பாத்திரங்களைக் கழுவவும்கூட ரோபோக்கள் உதவுகின்றன.

2001ம் ஆண்டில் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையம் பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டபோது மீட்புப் பணியில் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன.
ஜெர்மனியில் Zandit என்னுமிடத்தில் உருவாக்கப்பட்ட Zollnet Elektronik AG என்ற ரோபோ உலகிலேயே பெரிய நடக்கின்ற ரோபோ ஆகும். நெருப்பைக் கக்குகின்ற டிராகன் வடிவில் உருவாக்கப்பட்ட இது 15.72 மீட்டர் நீளமும், 12.33 மீட்டர் அகலமும், 8.20 மீட்டர் உயரமும் கொண்டது.

Google நிறுவனம் 2014ல் ஓட்டுநர் இல்லாமல் ஓடுகின்ற ரோபோ கார் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இதில் பெடலோ, ஸ்டியரிங் வீலோ இல்லை. இதில் ஒரே நேரத்தில் இரண்டு பேர் பயணிக்க முடியும்.ஜப்பானில் புகழ்பெற்ற வங்கி ஒன்று NAO என்ற ரோபோவை வங்கிப் பணிகளுக்கு பயன்படுத்துகிறது. 58 செ.மீ. உயரமுடைய இது 19 மொழிகளில் பேசி வாடிக்கையாளர்களை வரவேற்கும் ஆற்றல் உடையது. இதை பாரிஸில் உள்ள Aldebaran Robotics என்ற நிறுவனம் தயாரித்தது.

அமெரிக்க ராணுவம் ரோபோ டாங்குகளை வடிவமைத்துள்ளது. Robear என்ற ரோபோ, முதியவர்களை கவனித்துக் கொள்வதற்காக உருவானது. ஜப்பானின் Riken ரோபோ ஆராய்ச்சி மையம் வடிவமைத்தது இது. இது வயது முதிர்ந்தவர்களையும் மாற்றுத் திறனாளிகளையும் சக்கர நாற்காலியில் அமர்த்தி அழைத்துச் செல்லும். சக்கரம் பொருத்திய படுக்கைகளை இயக்கும். 140 கிலோ எடையுள்ள இது, 80 கிலோ எடையை சர்வசாதாரணமாகத் தூக்கும். இதன் கால்களில் சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

WF3 - RIX என்ற ரோபோ, புளூட் வாசிக்கும் திறனைப் பெற்றது. அமெரிக்க கடற்படை தயாரித்த 1.77 மீட்டர் உயரமும் 70 கிலோ எடையும் கொண்ட Saffir என்ற ரோபோ கப்பலில் பணிகளை மேற்கொள்ளும்.பூச்சிகள் பலவிதமான சூழ்நிலைகளில் வாழ்கின்ற ஆற்றலை உடையவை. இவற்றை அடிப்படையாகக் கொண்டே ரோபோக்கள் உருவாக்கப்படுகின்றன.

Darpa ரோபோ பந்தயம் ரோபோக்களுக்கும் கணினி மென்பொருள்களுக்கும் இடையே நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான பந்தயமாகும். இதில் ரோபோக்கள் வாகனங்களை ஓட்டுவது, கதவின் குறுக்கே உள்ள தடைகளை அகற்றுவது, ஏணியில் ஏறுவது போன்ற வேலைகளைச் செய்தன.மைசூர் புலி என்று அழைக்கப்பட்ட திப்பு சுல்தான் 1795ல் மரத்தால் ஒரு புலி உருவத்தை உருவாக்கினார். இப்புலியின் தோளில் பொருத்தப்பட்ட ஒரு விசையைத் திருகினால், இந்தப் புலி பிரிட்டிஷ் படைவீரரின் பொம்மை மீது பாயும்.

இந்தியாவில் 1980லிருந்து பல ஆராய்ச்சி நிலையங்களில் ரோபோ பயன்படுத்தப்பட்டு வருகிறது. குர்கானில் உள்ள Milagrow Human Tech என்ற நிறுவனம் Robo Cop போன்ற வீட்டு வேலை செய்யும் 2500 ரோபோக்களை தயாரித்து விற்பனை செய்துள்ளது.சமஸ்கிருதத்தில் மனிதன் என்று பொருள்படும் Manav என்ற ரோபோவை டெல்லியிலுள்ள A-Set என்ற பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் உருவாக்கினர். 2 கிலோ எடையுள்ள இது நடக்கும், பேசும், மற்றும் பல வேலைகளைச் செய்யும். இதன் விலை ரூ. 1.5 லிருந்து ரூ. 2 லட்சம் ஆகும்.

டெல்லியிலுள்ள பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்பு ரோபோ போர் வீரர்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.2010ல் இந்தியாவில் டாக்டர் டாக்ரா என்பவர் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் முதன்முதலாக ரோபோக்களை அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தினார். இது டா வின்சி சர்ஜிகல் சிஸ்டம் என அழைக்கப்படுகிறது. இப்போது ரோபோ அறுவை சிகிச்சை பல இடங்களில் பரவலாகிவிட்டது.

- க.ரவீந்திரன், ஈரோடு.