தூவானம்




இந்தியரால் சுழன்றது

‘பூமி சூரியனைச் சுற்றி வரவில்லை’ என்று ஒரு பிடிவாதம் உலகம் முழுவதும் பரவியிருந்தது. அப்போது ‘பூமி சூரியனைச் சுற்றித்தான் வருகிறது’ என்று முதலில் சொன்னதோடு, அதை நிரூபிக்கவும் செய்தவர் ஓர் இந்தியர். அவர், ஆர்யபட்டர். இவர் நினைவாகவே இந்தியாவின் முதல் செயற்கைக் கோளுக்கு ‘ஆர்யபட்டா’ என்று பெயரிடப்பட்டது.

மின்னல் அறுவடை

மழை பெய்யும்போது ஏற்படும் மின்னல் மற்றும் இடியால், அது தாக்கும் பகுதியில் கோதுமை, பார்லி, சோளம் போன்ற பயிர்கள் அதிக விளைச்சலைத் தருகின்றன. அதோடு, குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னாலேயே அறுவடை செய்யப்படும் பக்குவத்தையும் அடைந்து விடுகின்றன. இதற்குக் காரணம், மின்னல் உண்டாகும்போது ஏற்படும் மின்காந்தமே!

பார் போற்றும் ஃபாரடே

மின்னாற்றல் பகுப்பு விதிகள், மின்சார மோட்டார் ஆகியவற்றைக் கண்டுபிடித்தவர் மைக்கேல் ஃபாரடே. காந்த ஆற்றலை மின் ஆற்றலாகப் பயன்படுத்தலாம் என்று முதலில் தெரிவித்தவரும் இவரே. சிறு வயதில் பத்திரிகைகள் விற்பனை செய்துவந்த இவருடைய தந்தையார் இரும்புக்கொல்லராகப் பணிபுரிந்தவர். என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா மற்றும் ஜேன் மார்ஸெட் எழுதிய வேதியியல் பகுதிகள் இவருக்கு அறிவியலில் பெரிதும் ஊக்கம் கொடுத்தவை. புகழ்பெற்ற விஞ்ஞானி சர் ஹம் ஃப்ரி டேவியின் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றியவர் ஃபாரடே.

வாழ்ந்தா இங்கே வாழணும்

‘வாழ்ந்தா இங்கே வாழணும்’ என்று ஏங்கும் அளவுக்கு தனி மனித சௌகரியங்களைக் கொண்ட நகரங்களைப் பட்டியலிட்டார்கள். அதில் ஸ்வீடன் நாட்டின் தலைநகரமான ஸ்டாக்ஹோம் முதலிடத்தில் உள்ளது. நமது சென்னைக்கும் இடம் இருக்கிறது, 65வது இடம்.

சரித்திரம் சொல்லும் கல்வெட்டுகள்

நம் புராதனக் கோயில்களில் கல்வெட்டுகள் இருப்பதைக் காணலாம். இந்தக் கல்வெட்டுகள் அந்தப் பகுதியின் பழமை, சிறப்பு, சில முக்கிய நிகழ்வுகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இப்படி கல்வெட்டுகள் மூலம் சரித்திரத்தை எதிர்கால மக்களுக்கு எடுத்துரைக்கும் பணியை முதன்முதலில் செய்தவர் மாமன்னர் அசோகர்.

மஞ்சளும் கல்யாணமும்

உடல்நலத்துக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படும் ஒரு காய், பூசணி. இந்தப் பூசணி இருவகைப்படுகிறது - வெள்ளைப் பூசணி, மஞ்சள் பூசணி. இவற்றில் மஞ்சள் பூசணி வெள்ளையைவிட கூடுதல் நன்மைகளைக் கொண்டது. இதன் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தை வைத்தே இதனை கல்யாணப்பூசணி என்றும் சொல்வார்கள்.

சுட்டு விரல்

கைவிரல்களின் விதவிதமான நீளம், எதையும் கையாள இறைவனால் கொடுக்கப்பட்ட வசதி. ஆனால் இந்த விரல்களில் உணர்வுகளும் வித்தியாசப்படும். குறிப்பாக சுட்டு விரலுக்கு உணர்வு அதிகம்.

டப்பாஸ்

பட்டாசை யாராவது ‘டப்பாஸ்’ என்று சொன்னால் கேலி செய்யாதீர்கள். ஏனென்றால் ‘டபாஸ்’ என்ற சமஸ்கிருத சொல்லிலிருந்துதான் பட்டாஸ் என்றே வந்தது. 18ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பட்டாசு வெடிக்கும் உரிமை ராணுவத்தினருக்கு மட்டுமே இருந்தது. கனடாவில் விபத்தில்லாமல் பட்டாசு வெடிப்பது எப்படி என்று அரசாங்கமே பயிற்சி அளிக்கிறது. பெல்ஜியத்தில் மத்தாப்பு, தரைச் சக்கரம் போன்ற சாத்வீகமான பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யலாம்.

- வித்யுத்