எழுத்தின் கதை



எழுத்து எப்படித் தோன்றியது?
- ஆர்.ரமணி, 8ம் வகுப்பு, ஆர்.சி.பள்ளி, தென்காசி.

சிறியதாக ஆரம்பித்து உலகையே மாற்றிய மகத்தான கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானது - எழுத்து! இப்போது பேனாவும் காகிதமும் கொடுத்தால் சிறிது நேரத்துக்குள் ஒரு கடிதத்தையோ காவியத்தையோ எழுதிவிடலாம். ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்போ, எழுதுவது என்றால் என்னவென்றே தெரியாது. ஒருவரிடமிருந்து வாய் மொழியாகத்தான் செய்திகள் பரவ வேண்டும். விஷயம் நாலாவது நபருக்குப் போவதற்குள் குழம்பிப்போய் புது வடிவம் எடுத்துவிடும். எழுதத் தொடங்கிய பிறகுதான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்தது.

முதல் எழுத்து மொழியைக் கண்டுபிடித்தது குகைவாழ் மனிதர்களே. தாங்கள் அன்று என்ன வேட்டையாடினோம் என மற்றவர்களுக்குச் சொல்ல சித்திர எழுத்தைப் பயன்படுத்தினார்கள். மிருகங்களின் முடியைக் கற்றையாக்கி, அதைக் கொண்டு குகையின் சுவர்களில் தாங்கள் கொன்ற விலங்குகளை ஓவியமாக வரைந்து வைத்தனர். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக எழுத்து முறை உருவானது.

சீனா, எகிப்து போன்றவை முதலில் எழுத்துகளை எழுதிப் பார்த்த தேசங்கள். காலப்போக்கில் இப்போது நாம் பயன்படுத்தும் வடிவத்துக்கு எழுத்துகள் மாற்றம் பெற்றன. இத்தனை நூற்றாண்டுகள் கடந்த பிறகும் கூட, அவ்வப்போது எழுத்துகள் சேர்க்கப்பட்டும் நீக்கப்பட்டும் வருகின்றன.

சீனாவின் குலின் மலைக்குகையை ஓர் அதிசயம் என்கிறார்களே... ஏன்?
- க.மகேஸ்வரி, 10ம் வகுப்பு, எஸ்பிஓஏ பள்ளி, கோவை.

சீனாவின் நீண்ட நெடிய வரலாற்றில், ஒருசில ஓவியர்கள் மட்டுமே குலின் (Guilin) மலைக்குகைகளை வரைந்ததில்லை... அப்படி ஓர் அற்புதம் இது!
குவாங்சி மாகாணத்தின் தென்பகுதியில் மிக அழகாகக் காட்சியளிக்கிறது இம்மலைக்குகை. சுண்ணாம்புக்கல் அரிமானத்தால் உருவான மலைக்குகைக்கு சிறந்த உதாரணம்.

இந்த மலை, செங்குத்துச் சரிவாக கோபுர முகடு வடிவில் 100 மீட்டர் உயரத்துக்கு ‘ஸி’ நதிக்கரையில் வீற்றிருக்கிறது. குட்டையான மரங்கள் கரடுமுரடான பாறைகளைப் பற்றிக்கொண்டு தலைகாட்டுகின்றன. மலைக்கே மாலை அணிவித்தாற்போல திராட்சைக்கொடிகள் தொங்குகின்றன. 48 கிலோமீட்டர் தூரத்துக்கு நதியோடு கை கோர்த்திருக்கிறது இந்த அழகு மலை. 

குலின் மலையில் மழை அதிகம். மழையினால் சுண்ணாம்புக்கல் இணைப்புப் பகுதிகள் தின்னப்பட்டு விட்டன. அதனால் ஆழமான, குறுகலான இடுக்குகள் பல உருவாகியுள்ளன. இந்த இடுக்குகளின் இடையே நீர் கசிந்து சென்று, சிற்ப வேலையைத் தொடர்கிறது. மொத்தத்தில் இது நீரினால் உருவாக்கப்பட்ட அழகு மலைச் சிற்பம்!