அசர வைக்கும் அங்கோர் வாட்!



கம்போடியா நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் பார்க்க விரும்பும் இடம் எது தெரியுமா? உலகின் மிகப் பெரிய கோயிலான ‘அங்கோர் வாட்’ ஆலயத்தைத்தான். காண்பவரைக் கவர்ந்திழுக்கும் கலை அதிசயமான அங்கோர் வாட் பற்றிய சுவையான தகவல்கள் இதோ...கம்போடிய நாட்டில் அங்கோர் என்ற ஊரில் அமைந்துள்ள கோயில்தான் அங்கோர் வாட். அங்கோர் வாட் என்றால் ‘கோயில் நகரம்’ என்று பொருள்.    

இக்கோயில், 12ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கெமர் வம்சத்தைச் சேர்ந்த மன்னன் இரண்டாம் சூரியவர்மனால் யசோதரபுரத்தில் (அங்கோரின் அப்போதைய பெயர்) கட்டப்பட்டது. அங்கோர், அவருடைய தலைநகரமாகவும் அரச கோயில் இருக்கும் இடமாகவும் விளங்கியது. கெமர் நாகரிகத்தின் உயர்வான கட்டிடக்கலையை பிரதி பலிக்கும் அங்கோர் வாட், அப்போதைய அரசர்களின் சைவ பாரம்பரியத்தைத் தகர்க்கும் விதமாக விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பின், 14 -15ம் நூற்றாண்டில் அது பௌத்த கோயிலாக மாற்றப்பட்டது.

203 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அங்கோர் வாட், 65 மீட்டர் உயரமுள்ள கோபுரத்துடன் பல அடுக்குகளாக கட்டப்பட்டுள்ளது. இக்கோயில், நகரத்திலிருந்து சிறிது உயர்த்தப்பட்ட தளத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இதைக் கட்ட உபயோகப்படுத்தப்பட்ட 50 லட்சம் டன் கற்கள், 40 கி.மீ. தொலைவிலுள்ள குலென் மலையின் குவாரியிலிருந்து எடுத்து வரப்பட்டதாகும்.

இந்து புராணப்படி, பிரம்மன் வாழும் இடமான மேரு மலை போல் இக்கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் சுற்றுச் சுவர் கட்டப்பட்டு, அதற்கடுத்து அகழியும் நடுவே கோயில் கட்டிடமும் அமைந்துள்ளது. மத்திய கோபுரங்கள் - மேரு மலையின் ஐந்து சிகரங்களையும், சுவர் - பிற மலைத் தொடர்களையும், அகழி - கடலையும் குறிக்கிறதாம்.

கோயிலின் அலங்காரங்கள் அனைத்தும் கதை சொல்லும் பாணியில் அமைக்கப்பட்டுள்ளன. இந்து புராணக் கதைகள், மகாபாரதம் ஆகியவற்றை இங்கு அற்புத சிற்பங்களாகக் காட்சிப்படுத்தியுள்ளனர். தூண்களின் மேற்புறம் தாமரை வடிவ அலங்காரங்களும்,  சுவர்களில் நடன மாதர்கள்,  ஆண்கள்,  அப்சரஸ், விலங்குகள் இவர்களின் உருவங்களும் காணப்படுகின்றன.

இக்கோயிலின் தனிச்சிறப்பே அதன் புடைப்புச் சிற்பங்கள் (bas-relief)தான். பெரும்பாலானவை அப்சரஸ் எனப்படும் பெண் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெண் சிற்பமும் ஒவ்வொரு முத்திரையுடன், நுணுக்கமான நகை, உடை, தலை அலங்காரத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அங்கோர் வாட்டை சூரிய உதயத்தின்போது காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்குமாம்.மன்னரின் சாம்பலை பாதுகாப்பதற்காக இக்கோயில் கட்டப்பட்டதாம். எனவே, இதை ஆசியக் கண்டத்தின் பெரிய பிரமிட் என்று கருதுகின்றனர்.வடக்கு கம்போடியாவின் சுற்று வட்டாரத்தில் அங்கோர் வாட் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான கோயில்கள் இடம்பெற்றுள்ளன. அங்கோர் தோம், பேயோன் கோயில், தா ப்ரோம், பேகாங்க் கோயில் போன்ற புராதனக் கோயில்கள் நிரம்பிய பகுதியை ‘அங்கோர் தொல்லியல் பூங்கா’ என்று அழைக்கின்றனர்.

தா ப்ரோம் (Ta prohm) கோயில் என்பது மர விழுதுகளால் சூழப்பட்ட இடிபாடுகள் நிறைந்த கோயிலாகும். இன்று, கோயிலைக் காப்பாற்றும் பொருட்டு, சில மரக்கிளைகளை நீக்கியுள்ளனர். ‘டோம்ப் ரெய்டர்’ (Tomb raider) என்ற பிரபல ஹாலிவுட் திரைப்படம் இங்குதான் படமாக்கப்பட்டது.

எதிரிகளின் படையெடுப்பு, இயற்கை அழிவு, உள்நாட்டுப் போர் ஆகியவற்றால் அங்கோர் வாட் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஒழுங்கற்ற சுற்றுலா அமைப்பாலும் கொள்ளையர்களாலும் பல புராதன சிலைகளின் தலைகள் உடைக்கப்பட்டு, விற்கப்பட்டன. 1992ல் அங்கோர் வாட் யுனெஸ்கோவின் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டது. பன்னாட்டு அமைப்புகள் உதவி செய்து கோயில் கட்டிடம் பாழாகாமல் தடுக்க ஏற்பாடு செய்தனர்.

1986ம் ஆண்டிலிருந்து 1992 வரை இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம், கோயில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டது.ஆண்டுதோறும் 20 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இக்கோயி லுக்கு வருகை புரிகின்றனர்.கம்போடியர்கள் அங்கோர் வாட்டை பெருமைப்படுத்தும் விதமாக, அதை தங்கள் நாட்டின் தேசிய சின்னமாக அறிவித்து, தேசியக் கொடியிலும் இடம் பெறச் செய்துள்ளனர்.

- ஹெச்.தஸ்மிலா, கீழக்கரை.