நடத்தை ரகசியம் சொன்ன ஸ்கின்னர்



விலங்குகள் நடந்துகொள்ளும் விதம் குறித்து ஆராய்ந்து வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தியவர் அமெரிக்க உளவியல் நிபுணர் பர்ஹஸ் ஃபிரெடரிக் ஸ்கின்னர். சுருக்கமாக பி.எஃப்.ஸ்கின்னர். இவர் ஆய்வாளர் மட்டும் அல்ல; தத்துவஞானியும் கூட.இவர் 1904ம் ஆண்டு அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பிறந்தார். இவரது தந்தை சட்ட வல்லுனர்.

ஸ்கின்னர் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, ஹாமில் டன் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். 1930ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உளவியல் பாடப் பிரிவில் எம்.ஏ. பட்டம் பெற்றார். அப்போதுதான் விலங்குகள் நடந்துகொள்ளும் விதங்களைக் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார்.

சரியான நடத்தை முறை உத்தியைப் பயன்படுத்தி, மனிதர்கள் நடந்துகொள்ளும் முறையை மேம்படுத்த முடியும் என்று நம்பினார். விளைவுகளைப் பொறுத்தே உயிரினங்களின் நடத்தை முறைகள், எதிர்வினைகள் அமைகின்றன என்பதைக் கண்டுபிடித்தார். உயிரினங்களின் நடத்தையைப் பகுப்பாய்வு செய்து அறிய உதவும் ஆபரன்ட் கண்டிஷனிங் என்ற ஆய்வக சாதனத்தை மேம்படுத்தினார். இதற்காக ஆபரன்ட் கண்டிஷனிங் கூண்டு ஒன்றை உருவாக்கினார்.

இது ‘ஸ்கின்னர் பாக்ஸ்’ என்றழைக்கப்படுகிறது. எலிகள், புறாக்கள் ஆகியவை, தாங்கள் வாழும் சூழலுடன் எவ்வாறு தொடர்புகொள்கின்றன என்பதை இதன் உதவியுடன் ஆராய்ந்து வந்தார் ஸ்கின்னர். சூழலுக்கு ஏற்ப அவை தங்களது நடத்தை முறைகளை எவ்வாறு மாற்றிக்கொள்கின்றன என்பதையும் கண்டறிந்தார். இப்படிக் கண்டறிந்தவற்றைத் தொகுத்து ‘தி பிஹேவியர் ஆஃப் ஆர்கானிசம்ஸ்’ என்ற கட்டுரையை எழுதி வெளியிட்டார்.

இவர் நடத்தை உளவியல் குறித்து 21 புத்தகங்கள், 180 கட்டுரைகள் எழுதியுள்ளார். 1945ம் ஆண்டு ஸ்கின்னரை இண்டியானா பல்கலைக்கழகத்தில் உளவியல் துறைத் தலைவராக நியமித்து கௌரவித்தார்கள். ஸ்கின்னர் தனது கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட சமுதாயத்தை விவரிக்கும் ‘வால்டன் டூ’ என்ற நாவலை எழுதினார்.

‘குழந்தைகளுக்குப் பொருத்தமான பரிசுகள், தண்டனைகளை வழங்கி அவர்களது பழக்க வழக்கங்களை திருத்திக்கொள்ள உதவுங்கள். அதன் மூலம், அவர்களை நல்ல குடிமக்களாக மாற்ற முடியும்’ என்று இந்த நாவலில் கூறியுள்ளார். குழந்தைகள் கற்றுக்கொள்ளும் முறை குறித்து ஆராய்ந்தார். ‘தி டெக்னாலஜி ஆஃப் டீச்சிங்’ என்ற நூலை எழுதினார்.

சமுதாய, மனித நடத்தை முறைகள் தொடர்பான இவரது பல கோட்பாடுகள் சர்ச்சைகளைக் கிளப்பின. அதே நேரம், நடத்தை முறை உளவியல் களத்தில் மேலும் பல ஆராய்ச்சிகள் நடைபெற இவரது ஆய்வுகளே அடித்தளமாக அமைந்தன.ஸ்கின்னரின் பல கோட் பாடுகள் அதிகம் பயன்படுத்த முடியாமல் போனாலும் இவரது நேர்மறை வலுவூட்டும் உத்தி (Positive Reinforcement Technique) இவரை அடையாளப்படுத்தும் முக்கிய கோட்பாடாகப் புகழப்படுகிறது. ஸ்கின்னருக்கு பல பல்கலைக்கழகங்கள் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தன. சிக்மண்ட் ஃபிராய்டுக்குப் பிறகு சிறந்த உளவியலாளராக புகழ்பெற்ற, பி.எஃப்.ஸ்கின்னர் 1990ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி மறைந்தார்.

- சி.பரத்