தூவானம்




பிம்பத்துக்குப் பின்னே உலோகம்

கண்ணாடியில் நம் பிம்பம் தெரிகிறதென்றால் அது சில உலோகங்களின் உதவியால்தான். ஆமாம், கண்ணாடிக்குப் பின்புறம் பூசப்படும் பாதரசம், வெள்ளி, அலுமினியக் கலவையால்தான் நம் உருவம் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. இந்தப் பூச்சில் ஏதேனும் குறை இருந்தாலோ அல்லது கண்ணாடியே சீரான பரப்பைக் கொண்டிருக்காவிட்டாலோ பிம்பப் பிரதிபலிப்பிலும் குறை ஏற்படுகிறது.

ஒலிபெருக்காதே!

நம் காதுகளை பாதிக்காத ஒலியென்றால் அது பகலில் 45 டெஸிபல், இரவில் 35 டெஸிபலுக்குள்ளாக இருக்க வேண்டும். சுமார் 30 மீட்டர் உயரத்தில் பறக்கும் ஒரு விமானம் 120 முதல் 150 டெஸிபல் வரை ஒலி ஏற்படுத்துகிறது. இந்த ஒலியால் காது பாதிப்பு மட்டுமல்லாமல், வாந்தி, மன இறுக்கம் போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம். தொடர்ந்து 100 டெஸிபல் ஒலியைக் கேட்பவருக்கு நிரந்தரமாகக் காது கேளாமை ஏற்பட்டுவிடும். அதனால்தான் ஒலிபெருக்கிகள் இரவு 10 முதல் காலை 6 மணி வரை ஒலிக்கக்கூடாது என்று தடை செய்திருக்கிறார்கள்.

மோரில் அமிலம்

மோர் குடிக்கிறோம் அல்லது மோர் சாதம் சாப்பிடுகிறோம் என்றால், கூடவே கொஞ்சம் அமிலமும் சேர்த்து குடிக்கிறோம் அல்லது சாப்பிடுகிறோம் என்று அர்த்தம். என்ன அமிலம் அது? லாக்டிக் அமிலம்- மோரைப் புளிக்க வைக்கும் அமிலம்.

முடி ஏற்றுமதி

இந்தியாவிலிருந்து மனிதத் தலைமுடி சீனா, துனிசியா, இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. செயற்கைத் தலைமுடி (விக்) தயாரிக்க இந்த முடி பயன்படுகிறதாம். சாக்லெட் தயாரிப்பிலும் இந்த முடிக்குப் பங்கிருக்கிறது. இந்த ஏற்றுமதியால் இந்தியாவுக்கு சராசரியாக 40 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

நச்சுக் காய்ச்சல் வராது சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் கைதிகளுக்கு நச்சுக் கிருமிகளால் மலேரியா போன்ற காய்ச்சல் தொற்றிக் கொள்ளாமல் இருக்க, நெதர்லாந்து நாட்டில், அவர்கள் சாப்பிட வெற்றிலையைக் கொடுக்கிறார்கள். உணவு உண்ட பிறகு வெற்றிலை-பாக்கு போட்டுக்கொள்ளும் நம் வழக்கத்திலும், உணவில் இருக்கக்கூடிய நச்சுப் பொருட்களை அழிக்கும் உத்தி இருக்கிறது. பொதுவாக நம் உணவில் துவர்ப்புச் சுவை இருக்காது என்பதால், பாக்கு.

பழம் இனிப்பதேன்?

எந்த ஒரு பழத்திலும் சிட்ரஸ் அமிலம் அதிகம் இருந்தால் அது புளிக்கும்; குறைவாக இருந்தால் இனிக்கும். அதாவது ஒரு காய் பழுக்கப் பழுக்க அதில் சிட்ரஸ் அமிலம் குறையத் தொடங்கும்.

அடேயப்பா!

மனித சருமம் மிகவும் மெல்லியது. ஆனால் ஒரு சதுர சென்டி மீட்டர் பரப்பு சருமத்தில் 30 லட்சம் செல்கள், 93 செ.மீ அளவுள்ள ரத்தக்குழாய்கள், 3.75 செ.மீ நரம்புகள், 100 வியர்வைச் சுரப்பிகள், 15 எண்ணெய்ச் சுரப்பிகள், 10 மயிர்க்கால்கள், 25 தொடு உணர் நரம்புகள், 12 வெப்பம் உணரும் நரம்பு முனைகள் ஆகியவை இருக்கின்றன.

- வித்யுத்