சந்ததி வளர்க்கும் வெட்டுக்கிளி



பூச்சிப் பூக்கள் 63

பொதுவாக சில பூச்சிகளின் மீது மனிதர்களுக்கு அருவருப்பும் பயமும் இருப்பதுண்டு. ஒருசில பூச்சிகளின் மீது மட்டும் நமக்கு எவ்விதமான உணர்வும் ஏற்படுவதில்லை. நம்மை இம்சிக்காத வரையில் அதன் அருகாமையை நாம் வெறுப்பதில்லை. வெட்டுக்கிளியும் இந்த ரகத்தைச் சேர்ந்தது தான். இதனால்தானோ என்னவோ, மெக்ஸிகோ நாட்டினரும், சீனர்களும் இந்த வெட்டுக்கிளிகளுடன் கொஞ்சம் உப்பு மற்றும் மசாலா சேர்த்துப் பொரித்து மிக்சர் போல விரும்பி உட்கொள்கிறார்கள்.

எல்லாப் பூச்சி இனங்களையும் போலவே இந்த வெட்டுக்கிளிகளின் உடலும் தலை, மார்பு, வயிறு என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரேயொரு சின்ன மற்றும் கவர்ச்சியான வித்தியாசம் என்னவெனில், மார்புப் பகுதியையும் வயிற்றுப் பகுதியையும் ஒரு மெல்லிய சிற்றிடை இணைக்கிறது. பிற பூச்சி இனங்களில் இந்த மாதிரியான இடுப்பு அமைப்பு இருப்பதாகத் தெரியவில்லை. இதன் தலையும் உடலின் நேர் கோணத்திற்கு செங்குத்தாக சற்றே மேலுயர்ந்தவாறு அமைந்திருக்கும். கம்பீரத் தோற்றம்!

இந்த உயர்தலைத் தோற்றம் ஒரு அசால்ட்டான கெட்டப்பைக் கொடுத்தாலும் இரையை மென்று தின்பதற்கு ஏற்ற வகையில் கீழ்நோக்கி அமைந்த இதன் முகவமைப்பு இதை ஒரு டுபாக்கூர் என எளிதில் காட்டிக் கொடுத்து விடுகிறது. இதன் தலையில் இருக்கும் ஒரு ஜோடிக் கூட்டுக் கண்கள் அபாரமானவை. ஊசி முனை நுட்பத்தோடு 360 டிகிரியிலும் டெலஸ்கோப் தனத்துடன் பார்க்கக் கூடியவை. இதுபோக இருட்டையும் வெளிச்சத்தையும் அறிவதற்கென்றே மானிடக் கண்களைப் போல் மூன்று சாதாக் கண்களை உபரியாய் வைத்திருக்கின்றன.

இந்த வெட்டுக்கிளிகள் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளின் மேற்புறம், ஒரு கெட்டியான மேலுறையைக் கொண்டுள்ளது. இது கைட்டின் என்னும் ஒரு கெட்டியான வஸ்துவினால் உருவான ஒன்றின் மீது ஒன்றேறிய அடுக்கடுக்கான பிளேட்டுகளால் அமைந்ததாகும். இது போக பறப்பதற்கு ரெண்டு ஜோடி றெக்கைகளும், நடப்பதற்கு மூன்று ஜோடிக் கால்களும் இருக்கின்றன. அப்புறம் தொடு உணர்விற்கும் வாசனை அறிவதற்குமாக ரெண்டு ஆண்டெனாக் கொம்புகளும் உண்டு.

விளைநிலங்களை எல்லாம் ஜாலியாக வீணடித்து நாசப்படுத்திக் கொண்டிருக்கும் இந்த வெட்டுக் கிளிகளுக்கு கோடை காலத்தின் மையத்தில் ரொட்டீன் வாழ்க்கையில் ஆர்வம் முற்றிலும் குறைந்து போகும். வேறு பிற மன்மத அம்புகள் மயக்கமுற வைப்பதினால், இணக்கமான இணையைத் தேடுதலில் ஊன் உறக்கமின்றி வாலிப வெட்டுக்கிளிகள் வலம் வந்து கொண்டிருக்கும். இணைத் தேர்வு என்பது இந்த வெட்டுக்கிளிகளின் வாழ்வில் வெகு சுலபமானதுதான். அந்த அளவிற்குப் போதிய எண்ணிக்கையில் ஆணும் பெண்ணுமாய் இந்த வெட்டுக்கிளிகள் பூமிக் கோளத்தில் வியாபித்துக் கிடக்கின்றன.

அடல்ட் ஆண் வெட்டுக்கிளி ஒரு ரிதமிக்கான சிர்ரிங்க் ஒலியை, தம் பின்னங்கால்களை அதன் முன்னுள்ள இறக்கையின் மீது வேக வேகமாக விட்டுவிட்டு இயக்குவதன் மூலம், உருவாக்கிப் பெட்டைகளைத் தம் வசம் ஈர்க்கிறது. ஒரு வழியாக எல்லாம் செட்டான பின்னர் ஒரு பச்சை இலை மறைவில் சேர்க்கை நிகழும்.

சேர்ந்து முடித்த பெண் வெட்டுக்கிளி ஒரு மணற்பாங்கான இடம் பார்த்து, அங்கே சிறு பள்ளம் தோண்டி, அதில் 30-100 முட்டைகளை இட்டு வைக்கின்றது. பின்னர் நுரை போன்ற ஒரு விதமான சுரப்பால் முட்டைகளை ஒன்றோடு ஒன்றை ஒட்ட வைத்து மூடி விடுகிறது. இப்படி அருகருகாமையில் எண்ணற்ற வெட்டுக் கிளிகளின் முட்டைத் தொகுப்புகள் வியாபித்து இருப்பதுண்டு. இம்முட்டைகள் சுமார் இரண்டு மாத இடைவெளியில் பொரிந்து முதல் நிலைப் புழுக்கள் வெளி வருவது இயல்பான நடைமுறை. ஆனால் பெரும்பாலான முட்டைத் தொகுப்புகள் இப்படிப் பொரிவதில்லை. கொஞ்சம் இடையில் ஓய்வு எடுத்துக் கொள்கின்றன.

எதிர் வரும் குளிர் காலம் இளம் புழுக்களுக்கு சவாலாக இருக்கும் என்பதால், இரண்டு வாரம் வளர்ந்த பின்னர் மேற்கொண்டு வளராமல் கரு அப்படியே நின்று விடுகிறது. இதற்கு டயாபாஸ் என்று பெயர். இதே நிலையில் நாலு மாதங்களுக்குக் கூட அதாவது குளிர் காலம் முடியும் வரை இருந்து விடுகிறது.

அடுத்த சீஸனில் தரையின் வெப்ப அதிர்வுகள் முட்டைக்குள் இருக்கும் கருவிற்கு சேதி சொல்ல, அதுவே ஒரு உந்துதலாகி கரு மீண்டும் வளரத் துவங்குகிறது. சில வாரங்களில் முழு வளர்ச்சி அடைந்து ஓரிரு நிமிட இடைவெளியில் எல்லா முட்டைகளும் ஒரு சேரப் பொரிந்து விடுகின்றன.

புழு மேளா!இப்படி பக்கத்தில் இருக்கும் எல்லா முட்டைத் தொகுப்புகளும் ஒரே சமயத்தில் பொரிவதால் இவை கணக்கற்ற எண்ணிக்கையில் இருக்கும். சுமார் 8 மி.மீ நீளமுள்ள இப்புழுக்கள் உடனே தமது உடல் மேலுறையை உரித்துக் கொள்ள, காற்றில் உடலின் வெளிப்புறம் இறுகி கெட்டிப்படுகிறது.

இந்நிலையிலேயே இப்புழுக்கள் எதிரிகளை ஏமாற்றி எம்பிக் குதித்தோடும். இவை கிடைப்பதை எல்லாம் தின்று கொண்டே கூட்டமாய் நடந்து சென்று கொண்டே இருக்கும். இவ்வாறு 3 செ.மீ நீளம் வரை வளர்ந்து நாலைந்து முறை தோலுரித்துக் கொண்ட பின்னர்தான் இவற்றுக்கு முழு இறக்கைகள் கிடைக்கின்றன. அப்புறம்தான் ஆகாய மார்க்கம்!

(நிறைவடைந்தது)

டாக்டர் ஆர்.கோவிந்தராஜ்