அதிசய பனிப்பாறைகள்! ஆச்சர்ய தகவல்கள்



*மிகப் பெரிய, உறுதியான, கெட்டியான பனிக் கட்டிதான் பனிப்பாறை (Glacier) ஆகும். கொளுத்தும் வெயிலுக்கு இதமாக, இயற்கையின் அதிசய படைப்பான பனிப்பாறைகள் பற்றிய ‘ஜில் ஜில்’ தகவல்கள் இதோ:

*பனிப்பாறை ஒரு மாதத்திலோ, ஒரு வருடத்திலோ உருவா வதில்லை. ஒரு இடத்தில் பனி விழுந்து, சேர்ந்து பல நூற்றாண்டு களாக அழுத்தப்பட்டு, கெட்டி யாகி பனிக்கட்டியாக மாறி, நாளடைவில் பிரமாண்ட பனிப் பாறையாக உருமாறுகிறது.

*பனிப்பாறைகள் பார்ப்பதற்கு ஆடாமல் அசையாமல் இருப்பது போல் தோன்றினாலும் அவை உண்மையில் மிக மெதுவான நதி போல், நகர்ந்து கொண்டி ருக்கின்றன. எனவே, அவற்றை ‘பனியாறுகள்’ என்றும் சொல்வார்கள்.

*பூமியின் மொத்தப் பரப்பளவில் பத்து சதவீதத்தைப் பனிப்பாறைகள் ஆக்கிர மித்துள்ளன. கடைசி பனி யுகத்தின்போது, அவை 32 சதவீதம் இருந்தனவாம்.
 
*‘கிளேஸியர்’ என்பது பிரெஞ்சு மொழியிலிருந்து வந்தது. லத்தீன் மூல வார்த்தையான ‘கிளேஸிஸ்’ என்பதில் இருந்து இது உருவானதாகும். ‘கிளேஸிஸ்’ என்றால் ‘ஐஸ்’ என்று பொருள்.

*உலகின் எழுபத்தைந்து சதவீத நன்னீர், பனிப்பாறைகளில்தான் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. குளிர்காலங்களில் உருவாகும் பனிப்பாறைகள், கோடையில் உருகி ஆறாக ஓடி, வையத்து உயிர்களின் தாகத்தைத் தணிக்கிறது. எனவேதான் பனிப்பாறைகளை ‘உலகின் மிகப் பெரிய நன்னீர் களஞ்சியம்’ என்று கூறுகிறார்கள்.

*பூமியில் ஒன்றரை கோடி சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பனிப் பாறைகள் காணப்படுகின்றன. இவை சுமார் 50 நாடுகளில் பரவிக் கிடக்கின்றன.

*99 சதவீத பனிப்பாறைகள், இரு துருவப் பகுதிகளிலும் உறைந்து கிடக்கின்றன. அன்டார்க்டி காவில்தான் பெரும்பான்மையான பிரமாண்ட பனிப்பாறைகள் உள்ளன.

*அலாஸ்கா, சிலி, கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து ஆகிய இடங்களிலும் பனிப்பாறைகள் காணப் படுகின்றன. ஆண்டிஸ், இமயமலை, ராக்கி மலை, காகசஸ், ஆல்ப்ஸ் ஆகிய மலைகளில் மலை பனிப்பாறைகள் காணப்படுகின்றன.

*இன்று உலகில் காணப்படும் பெரும்பாலான பனிப்பாறைகள், கடைசி பனியுகத்தின் மிச்சங்களாகும். இவற்றின் வயது 11 ஆயிரம் ஆண்டுகள் முதல் ஒன்றே முக்கால் கோடி ஆண்டுகள் வரை இருக்கும்.

*அன்டார்க்டிகாவில் உள்ள பனிப்பாறைகளின் வயது நான்கு கோடி வருடங்களுக்கு மேல் இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சிறிய பனிப்பாறை, ஒரு கால்பந்தாட்ட மைதானத் தின் நீளம் இருக்குமாம். பெரிய பனிப்பாறைகளின் நீளமோ, 100 மைல்களுக்கு மேல் கூட இருக்குமாம்.

*தட்பவெப்பத்தில் ஒரு சிறு மாற்றம் வந்தாலும், அது சட்டென்று பனிப் பாறை களில் பிரதிபலிக்கும். பனிப் பாறைகளை ஆராய்வதின் மூலம், பூமியின் தட்பவெப்ப மாற்றங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

*பனிப்பாறைகள் மற்றும் அதன் பல்வேறு மாற்றங்கள் பற்றிய படிப்பிற்கு ‘கிலேஸி யாலஜி’  (Glaciology)   என்று பெயர்.

*பனிப்பாறைகளில் பல வகைகள் உண்டு. அவற்றில் முக்கியமானவை சில:
அல்பைன் பனிப்பாறை (Alpine glacier): மலைகளில் காணப்படுவதால், இதை மலை பனிப்பாறை என்றும் அழைப்பார்கள்.
 
*பனித் தொப்பி (Ice cap): மலை உச்சியில் இந்தப் பனிப்பாறைகள் ஜம்மென்று உட்கார்ந்திருக்கும். 50,000 ச.கி.மீ. பரப்பளவில் காணப்படும்.

*கண்டப் பனிப்பாறை (Continental glacier): இரு துருவங்களிலும் காணப்படும் இந்த பிரமாண்ட பனிப்பாறையை ‘ஐஸ் ஷீட்ஸ்’ என்றும் அழைப்பார்கள். இதன் பரப்பளவு 50 ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கும் அதிகம் இருக்கும்.

*அலை நீர் பனிப்பாறை (Tidal glacier): கடலில் முடியும் பனிப்பாறைகளின் பெயர் அலைநீர் பனிப்பாறைகளாகும். கடலுக்குள் ஒரு பனிப்பாறையைப் பார்க்கும்போது, வெறும் பத்து சதவீதம்தான் வெளியே தெரியும். மீதி 90 சதவீதம் நீருக்கு அடியில்தான் இருக்கும்.

*தொங்கும் பனிப்பாறை (Hanging glacier) : இவ்வகை பனிப்பாறை, மலையின் ஓரத்தில், பள்ளத்தாக்கிற்கு மேலே உருவாகும். பள்ளத்தாக்கைச் சென்று அடையாததால், இவை தொங்கியபடியே இருக்கும்.

*பள்ளத்தாக்குப் பனிப்பாறை (Valley glacier): இரு மலைகளுக்கிடையே உள்ள பள்ளத்தாக்கை பனிப்பாறை நிரப்பினால், அதுவே பள்ளத்தாக்குப் பனிப்பாறை. ‘க்ஷி’வடிவில் இருக்கும் பள்ளத்தாக்கு, பனிப்பாறை அரித்து நகர்வதால், ‘ப’ வடிவில் மாறி விடும்.

*பனியாறு நகரும்போது, ஒரு பெரிய புல்டோசர் போல் செயல்பட்டு, நிலப்பரப்பையே மாற்றி விடுகிறது. சிற்றேரி (Cirque), நுழைகழி (fjord), கத்திமுனைக் குன்று (Aret), முட்டை உரு பனிப்படிவு (Drumlin), பனிப்படிவ வண்டல் (moraine), மலை மீதுள்ள சிற்றேரி (Tarn) என பல புதுமையான புவியியல் அமைப்புகளை உருவாக்கு கிறது.

 *சில பனியாறுகள், வருடத்திற்கு சில அடிகள் நகரும். சில பனியாறுகள், ஒரே நாளில் பல அடி தூரம்கூட நகர்ந்து விடும்.

*உலகின் மிகப் பெரிய பனிப்பாறை, அன்டார்க்டிகாவின் லாம்பெர்ட்  ஃபிஷ்ஷர் பனிப்பாறை ஆகும். 400 கி.மீ. நீளமும், 100 கி.மீ. அகலமும், 2.5 கி.மீ. ஆழமும் கொண்ட இந்த பிரமாண்ட பனிப்பாறை, அன்டார்க்டிகாவின் எட்டு சதவீத இடத்தை ஆக்கிரமித்துள்ளது.

*உலகின் இரண்டாவது பெரிய பனிப்பாறை, இமாலய- காரகோரம் பகுதியில் உள்ள இந்தியாவின் சியாச்சின் பனிப்பாறை ஆகும்.

*பாகிஸ்தானின் ‘குடியா பனிப்பாறை’, உலகிலேயே வேகமாக நகர்ந்து சாதனை படைத்துள்ளது. 1953ம் ஆண்டு, ஒரு நாளைக்கு 112 மீட்டர் என்ற கணக்கில், மூன்று மாதங்களில் 12 கி.மீக்கு மேல் இடம் பெயர்ந்தது.

*கடுமையான பனிப்புயல் அடிக்கும்போது, ‘அவலாஞ்ச்’ எனப்படும் பனிச்சரிவு ஏற்பட வாய்ப்புண்டு. பனிச்சரிவின்போது, மணிக்கு 80 மைல் வேகத்தில் ஒரு நீராவி எஞ்சின் போல், பனி வேகமாகச்சரியும்.

- ஹெச்.தஸ்மிலா, கீழக்கரை.