விலங்குகள்... விநோதங்கள்..!



*வரிக்குதிரைகளில் ஒன்றுக்கு காயம் என்றாலோ அல்லது நோய்வாய்ப்பட்டாலோ, மற்றவை சுற்றி நின்று அதைப் பாதுகாக்கும். சில நேரங்களில் ஆண் வரிக்குதிரை, சிங்கத்தையே கூட எதிர்த்து நின்று போராடும்.

*ஒட்டகங்கள் மிக வேகமாக எச்சிலைத் துப்பும். அதனால் ஒட்டகங்கள் எச்சில் துப்பப் போகிறது என்று தெரிந்தவுடன் ஒட்டகத்தை விட்டுதள்ளி ஐந்து மீட்டர் தூரத்தில் நிற்பது நல்லது. ஒருமுறை எச்சில் துப்பும்போது 200 கிராம் எச்சில் வெளியாகும்.

*சிம்பன்சி குரங்குக் கூட்டம் ஒன்று இடம் விட்டு இடம் மாறி வெளியே செல்லும்போது மனிதர்களைப் போல ஒன்றுக்கொன்று கை குலுக்கிக் கொள்ளும்.

*நீரில் படுத்திருக்கும் ஆண் நீர் யானை எழுந்து நின்றால், உடனே அருகில் இருக்கும் பெண் நீர் யானையும் எழுந்து நின்றுவிடும் பண்புடையது.

*பெங்குவின் பறவைகள் கடல் நீரை அருந்தியே உயிர் வாழ்கின்றன. அவற்றின் உடலில் உள்ள பெரிய உப்புச் சுரப்பிக்கு ரத்தத்தி லிருந்து உப்பைப் பிரிக்கும் சக்தி இருக்கிறது.

*ஒரு பூனையால் 100 விதமான ஒலிகளை எழுப்ப முடியும். ஆனால் நாயால் 10 வித ஒலிகளை மட்டுமே எழுப்ப இயலும்.

*விலங்குகள் எல்லாமே தன் எதிரி மீதோ, இரை மீதோ பாய்ந்து தாக்கித்தான் கொல்லும். ஆனால், எதிரியைக் கட்டிப் பிடித்து, மூச்சு முட்ட வைத்தே கொல்லுமாம் கரடி.

*டால்பின் மீன்கள் மிகுந்த இரக்க குணம் கொண்டவை. தங்களின் கூட்டாளிகளுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால் உடனே அங்கு விரைந்து சென்று, மயக்கமடைந்த டால்பினை மற்ற டால்பின்கள் தண்ணீருக்கு மேல் தூக்கி சுவாசத்துக்கு வழி செய்யும்.

*ஒரு டால்பின் மீன் தனது எடையைப் போல் 10ல் ஒரு பங்கு மீனை தினமும் உணவாக உட்கொள்ளும். டால்பின் மீன்கள் ஒரு கண்ணை மூடிக்கொண்டு தூங்கும். இரண்டு கண்களை மூடிக்கொண்டு அவை எப்போதும் தூங்காது.

*மாடுகள், மேடுகளில் இறங்கும் வேகத்தைவிட ஏறும் வேகம் அதிகமாகும். அதாவது, ஏற்றத்தில் அதிக வேகத்தையும் இறக்கத்தில் நிதானத்தையும் காட்டும்.

*துரத்தும்போது கங்காரு 10 அடி உயரம் எழும்பி, 30 அடி நீளம் தாவக் கூடியது.

*கடல் ஆமைகள் அவ்வப்போது நிலத்திற்கு வந்து பாறை, உடைந்த மரங்களின் மீது ஏறி அமர்ந்து கொண்டு சன்பாத் செய்யும். தண்ணீரிலேயே கிடப்பதால் இதன் ஓடுகள் ஊறிப்போய் மென்மையாக இருக்கும் என்பதால் இப்படி வந்து வெயிலில் காய்வதன் மூலம், இதன் ஓடுகள் உறுதியடைகின்றன. அத்துடன் இந்த ஓடுகளின் மீது ஒட்டியிருக்கும் தாவரங்கள், குட்டி கடல் உயிரினங்களை உதிர்த்து விடுவதற்காகவும் சூரியக் குளியல் செய்கின்றன.

*நத்தையின் அபூர்வமான திறமை என்ன தெரியுமா? அது தன் இருப்பிடத்தை விட்டு எவ்வளவு தூரம் நகர்ந்து சென்றாலும் வந்த வழியை மறப்பதில்லை. எப்படியாவது தன் இருப்பிடத்திற்குத் திரும்ப வந்துவிடும்.

*யானைக்கு வால் குட்டையாக இருப்பதால் ஈ, கொசு போன்ற நுண்ணுயிர்கள் தொந்தரவு கொடுக்கும்போது தன் வாலினால் அவற்றை விரட்ட முடியாது. ஆனால் ஈ, கொசுக்கள் உடலின் மீது உட்கார்ந்த சில நாழிகைக்குள் யானை தன் தோலைச் சுருக்கும். அப்போது அத்தோலின் மடிப்புகளில் சிக்கி அவை இறந்துவிடும்.

*உலகில் உள்ள விலங்கினங்களில் மிகவும் சுத்தமானது எனக் கருதப்படுவது சுண்டெலிதான். காரணம், இது நிமிடத்துக்கு 3 முறை நாக்கால் தன் உடலை சுத்தம் செய்கிறது. இதனால் இதன் ஆயுளில் பாதிக் காலம் தன் உடலை சுத்தம் செய்வதிலேயே கழிந்துவிடுகிறது.

*சீல்கள் - பொதுவாக ஒரு குட்டியே இடும். இரண்டு குட்டிகள் பிறந்தாலும் தாய் ஒன்றை மட்டுமே வளர்க்கும். இரண்டாவது குட்டியை மற்றொரு சீல் தத்தெடுத்துக் கொள்ளும்.

*ஒலி எழுப்புவதில் திமிங்கலத்தைப் போல் கில்லாடி எதுவும் இல்லை. இது எழுப்பும் சத்தம் 188 டெசிபல்கள் ஆகும். இது விமானம் கிளம்பும்போது எழும் ஒலியைப் போல் ஒன்றரை மடங்கு அதிகம். இப்படி திமிங்கலம் எழுப்பும் சத்தம் 10 கிலோ மீட்டர்களுக்கு அப்பாலும் கேட்கும்.

*சிங்கத்தின் குணத்தை அதன் வாலிலிருந்து தெரிந்து கொள்ளலாம். சிங்கம் வாலை ஆட்டாமல் இருந்தால் சந்தோஷமாக இருப்பதாக அர்த்தம். வாலை பூமியில் ஓங்கி அடித்தால் மிகக் கோபமாக இருப்பதாக அர்த்தம்.

*நீரிலும் நிலத்திலும் வாழக் கூடிய பாலூட்டி இனமான பிளாடிபஸ், தனது எடைக்குச் சமமான உணவை தினமும் உட்கொள்கிறது.

- என்.ஜரினா பானு, திருப்பட்டினம்.