புற்றுநோய் இல்லாத புதிய உலகம்!



புதிய தொடர்

புற்றுநோய்...
இந்த வார்த்தையை உச்சரிக்கும்போதே மனசுக்குள் ஓர் இனம் புரியாத பயம் பலருக்கும் உண்டாவது வழக்கம். வாசிப்பவர் வயதானவர் என்றால் கேட்கவே வேண்டாம், வயிற்றில் புளியைக் கரைக்கும். இளசு என்றால், ‘இப்போவெல்லாம் சின்ன வயசுலேயே இந்த நோய் வருதாமே!’ என்று கண்கள் கலங்கும். புற்றுநோய் என்றதுமே ஏன் இத்தனை பயமும் கலக்கமும்?

நவீன மருத்துவம் பிறந்து, வளர்ந்து நூற்றாண்டுகள் ஆன பிறகும், கழுவும் மீனில் நழுவும் மீன்போல் புற்றுநோயின் பல பிரிவுகள் மருத்துவத்துக்குக் கட்டுப்படாமல் நம்மை உடும்புப் பிடியாக இறுக்குவது ஒரு முக்கியக் காரணம். ‘புற்றுநோய் வந்துவிட்டால் மரணம் நிச்சயம்’ என்று பொதுவாகத் தெரிந்து வைத்திருப்பது அடுத்த காரணம். புற்றுநோய் குறித்த சரியான புரிதல் படித்தவர்களுக்கே இல்லை என்பதும் ஒரு காரணம். ‘அறுவை சிகிச்சையா? கதிர்வீச்சா? சொத்தில் பாதி கரைந்துவிடுமே’ எனும் வணிக விமர்சனம் இன்னொரு காரணம்.

இயற்கையோடு இயைந்த நம் பாரம்பரிய வாழ்வியல் மறைந்து, செயற்கைத் தன்மை நிரம்பிய மேற்கத்திய கலாச்சாரங்கள் நமக்குள் புகுந்துகொள்ளத் தொடங்கியதிலிருந்தே பல தொற்றா நோய்கள் நமக்கு நெருக்கடி கொடுக்கின்றன. அந்த நோய்க்கூட்டத்தில் வி.ஐ.பி. வரிசையில் புற்றுநோய் உட்கார்ந்துள்ளது என்பது உண்மைதான் என்றாலும், அநேகரும் நினைப்பதுபோல் புற்றுநோய் வந்தாலே மனித உயிரை மாய்த்துவிடும் என்பது முழு உண்மையில்லை. புற்றுநோயில் வீழ்ந்தவர்களும் இருக்கிறார்கள்; அதிலிருந்து மீண்டவர்களும் இருக்கிறார்கள்.

‘பழி ஓரிடம்… பாவம் ஓரிடம்’ என்று சொல்வார்களே, அதற்கு நூறு சதவிகித உதாரணம் புற்றுநோய். எப்படி? இரண்டு நிகழ்ச்சிகளைச் சொல்கிறேன். நீங்களே புரிந்துகொள்வீர்கள்.சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்மணி என்னிடம் சிகிச்சைக்கு வந்தார். அவர் நாற்பது வயதைக் கடந்த ஓர் ஆசிரியை. அவரைப் பார்த்த மாத்திரத்தில் அவருடைய இடது கை முழுவதும் வீங்கியிருப்பது என் கண்ணில் பட்டது. நான் அதைக் காட்டிக்கொள்ளாமல் ‘என்ன விஷயமாக வந்துள்ளீர்கள்?’ என்று கேட்டேன். நான் எதிர்பார்த்தபடியே அவர் தன்னுடைய இடது கை வீக்கத்தைக் காண்பித்தார்.

‘கடந்த ஒரு மாதமாக இந்த வீக்கம் இருக்கிறது. ஆனால், வலி இல்லை’ என்று சொன்னார். அவரது கையைப் பரிசோதித்துப் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘உங்கள் இடது மார்பகத்தில் ஏதாவது கட்டி இருக்கிறதா?’ என்று கேட்டேன். ‘ஆமாம், டாக்டர். ஆறேழு மாசமாக ஒரு கட்டி இருக்கிறது.

ஆனாலும் வலி இல்லை’ என்றார். ‘கட்டிக்கு ஏதாவது சிகிச்சை பெற்றீர்களா?’ என்று கேட்டேன். ‘இல்லை, டாக்டர்!’ என்றார்.‘ஏன்?’ என்றேன். ‘எனக்கு அந்தக் கட்டியால் எந்தத் தொந்தரவும் இல்லை, அதனால் அதைக் கவனிக்கவில்லை’ என்றார். தொடர்ந்து, ‘எனக்கு எப்போதும் ‘நீர்ப்பிணப்பு’ உண்டு. அதனால் கை வீங்கியிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்’ என்றார்.

‘அதுதான் நீங்கள் செய்த தவறு’ என்று சொன்ன நான், அவருக்குத் தேவையான பரிசோதனைகளைச் செய்துவிட்டு, ‘உங்களுக்கு இடது மார்பகத்தில் புற்றுநோய்க் கட்டி இருக்கிறது. அது கைக்கும் பரவிவிட்டதால், கை வீங்கியுள்ளது’ என்றதும் அதிர்ச்சி அடைந்து, ‘எனக்கு ஏன் இந்தக் கொடுமை?’ என்று கதற ஆரம்பித்துவிட்டார்.சில வருடங்களுக்கு முன்பு, ‘குங்குமம்’ வார இதழில் ‘செகண்ட் ஒப்பினியன்’ எனும் மருத்துவத் தொடரை எழுதிக் கொண்டிருந்தேன்.

அதில் ‘புராஸ்டேட் சுரப்பி’ குறித்த கட்டுரையில், ‘40 வயது ஆகிவிட்டாலே நாம் அனைவரும் வருஷத்துக்கு ஒருமுறை ‘மாஸ்டர் செக்-அப்’ செய்துகொள்வது நல்லது. அதிலும் ஆண்கள் PSA டெஸ்ட் செய்துகொள்ள வேண்டியது அவசியம். ஏற்கெனவே புராஸ்ட்டேட் பிரச்னை உள்ளவர்களும் அதற்கான சிகிச்சை எடுப்பவர்களும் ஆண்டுதோறும் இந்தப் பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும்’ என்று
எழுதியிருந்தேன்.

அதைப் படித்த ஈரோடு வாசகர் ஒருவர் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்… ‘டாக்டர், உங்கள் கட்டுரையைப் படித்துவிட்டுப் பலன் பெற்ற எத்தனையோ வாசகர்களில் நானும் ஒருவன். எனக்கு அடிக்கடி சிறுநீர்க் கடுப்பு ஏற்படுவதுண்டு. உடல் உஷ்ணத்தால்தான் இது ஏற்படுகிறது என்று நினைத்துக் கொண்டு, இயற்கை வழிகளில் சமாளித்துக் கொண்டிருந்தேன்.

உங்கள் கட்டுரையைப் படித்ததும் நான் ‘மாஸ்டர் செக்-அப்’ செய்தேன். அதில் ‘பி.எஸ்.ஏ.’ அளவு மிகவும் அதிகமாக இருந்தது. அதனால் எனக்கு புராஸ்டேட் புற்றுநோய் ஆரம்பநிலையில் இருக்கிறது என்றார்கள். அதற்கு உடனே சிகிச்சை பெற்றுவிட்டேன். இப்போது நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.

உங்கள் கட்டுரையை மட்டும் படிக்கவில்லை என்றால், நான் அலட்சியமாக இருந்திருப்பேன். புற்றுநோயை முற்ற விட்டு சிரமப்பட்டிருப்பேன்’.ஆசிரியைக்கும் சரி, வாசகருக்கும் சரி, புற்றுநோயின் ஆரம்பத்திலேயே அறிகுறிகளைக் காண்பித்திருக்கிறது. அவற்றை அலட்சியப்படுத்திய ஆசிரியை புற்றுநோயின் புதைகுழிக்குள் விழுந்துவிட்டார்; ஈரோடு வாசகரோ நோயின் தொடக்கத்திலேயே விழித்துக்கொண்டு பிழைத்துக் கொண்டார்.

எனவே, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இல்லாதவர்கள்தான், அது பின்னும் வலைக்குள் சிக்கிக் கொண்டு சிரமப்படுகிறார்கள்; அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளுக்கெல்லாம் புற்றுநோயின்மீது பழியைப் போடுகிறார்கள். அதேநேரம், புற்றுநோயை ஜெயித்தவர்கள் ‘இதுவும் கடந்துபோகும்’ என்று அதை எளிதாக எடுத்துக்கொள்கிறார்கள்.

இன்றைய தினம் தவிர்க்க முடியாத நோயாகி வருகிறது புற்றுநோய்! 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை எங்கோ, எவருக்கோ வந்துகொண்டிருந்த புற்றுநோய் இப்போது ஜலதோஷம் பிடிப்பதுபோல் எவருக்கும் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலைமைக்கு
‘முன்னேறி’யுள்ளது. அதேவேளையில் எது புற்றுநோய் என்பதைத் தெரிந்து, ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்தால், இன்றைய நவீன மருத்துவத்தில் அதை எதிர்கொள்வது எளிது என்பதும் உறுதியாகியுள்ளது.

எனவே, புற்றுநோயை எப்படி அறிவது, என்ன சிக்கல், என்ன சிகிச்சை, எப்போது தொடங்குவது, எப்படித் தொடங்குவது, எங்கு தொடங்குவது… இப்படியான கேள்விகளையும் அவற்றுக்கான பதில்களையும் பல உண்மைச் சம்பவங்களுடன் உங்களிடம் கொண்டு சேர்க்கவே இந்தத் தொடர்.
எது புற்றுநோய்?

கோடிக்கணக்கான செல்களால் ஆனது நமது உடல். ஒவ்வொரு செல்லும் குறிப்பிட்ட பாதையில் பிரிந்து, வளர்ந்து, திசுவாகி, உறுப்பாகிறது; தன்னுடைய பணி முடிந்ததும் அழிந்தும் போகிறது. இதை உடலிலுள்ள பல காரணிகள் கட்டுப்படுத்துகின்றன. அதனால், உடலில் செல்கள் எங்கு தேவையோ, எப்போது தேவையோ அதற்கு ஏற்றவாறு ஒரு கட்டுப்பாட்டுடன் வளர்ந்து மறைகின்றன. இப்படி உடலுக்குள் உருவாகும் உறுப்புகள் இயல்பாக இயங்குவதால் நமக்கு ஆரோக்கியம் நிலைக்கிறது.

கேஸ் அடுப்பில் எவ்வளவு தீ எரிய வேண்டும்; எவ்வளவு நேரம் எரிய வேண்டும் என்று கட்டுப்பாட்டுடன் அம்மா சமைக்கும்போது சட்டியில் உணவு தயாராகிறது. அது இயல்பானது. அதேநேரம் குரங்கணி காட்டில் கட்டுப்பாடில்லாமல் தீ எரியும்போது, காடு அழிகிறது. அதுமாதிரி செல்களின் இயல்பான வளர்சிதைமாற்றத்தில் எங்காவது பிழை ஏற்பட்டால், செல்கள் அங்கே கட்டுப்பாட்டை இழக்கின்றன.

தங்கள் விருப்பத்துக்கு வளர்ச்சி அடைகின்றன. தேவையில்லாமல் எண்ணிக்கையில் பெருகுகின்றன. அப்போது திசுவாக இருக்க வேண்டியது கட்டியாகிறது. அது படிப்படியாகப் பெரிதாகிறது; பக்கத்து உறுப்புக்குப் பரவுகிறது; முதலில் அது உள்ள உறுப்பைக் கெடுக்கிறது; அழிக்கிறது. அதைத் தொடர்ந்து அருகில் உள்ள உறுப்பையும் சிதைக்கிறது. பிறகு ரத்த ஓட்டத்தில் கலந்து உடலெங்கும் ஓடி, எங்கெல்லாம் அது தங்குகிறதோ அங்கெல்லாம் பரவி, உயிருக்கு ஆபத்தாக முடிகிறது. இதுதான் ‘புற்றுநோய் விருட்சம்’ என்பது.

வெயிட்.. வெயிட்…
உடலில் கட்டி தோன்றிவிட்டாலே அது புற்றுநோய்தான் என்று அவசரப்பட்டு முடிவு கட்ட வேண்டாம். எல்லாக் கட்டிகளும் புற்றுக்கட்டிகள் அல்ல! ஆபத்தானதும் அல்ல! விதிவிலக்கும் உண்டு.

விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள்!

புகழ்பெற்ற அமெரிக்க ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, மார்பகப் புற்றுநோய் வராமல் தற்காத்துக்கொள்ள தன் இருபக்க மார்பகங்களையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய செய்தி மிகவும் பிரபலம். தன் 37 வயதில் அவர் இத்தகைய ‘வருமுன் காக்கும் சிகிச்சை’யை மேற்கொண்டதன் பின்னணியில் இருந்த மருத்துவக் காரணம் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் அதிகப்படுத்தியது.

ஏஞ்சலினா ஜோலியின் தாயார் (இவரும் ஒரு நடிகைதான்) மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 10 வருடங்கள் கடுமையாகப் போராடி,
2007-ல் இறந்தார். இதனால், எச்சரிக்கை அடைந்த ஏஞ்சலினா ஜோலி, ‘கேன்சர் ஸ்கிரீனிங்’ எனப்படும் முன்னறிதல் பரிசோதனைகளை அடிக்கடி செய்து வந்தார். அப்போது, அவருக்கு BRCA1 & 2 மரபணுக்களில் குறைபாடு இருப்பது தெரிய வந்தது.

BRCA1 & 2 மரபணுக்களில் குறைபாடு காணப்பட்டால், பெண்களுக்கு மார்பகத்தில் கேன்சர் வருவதற்கு 90% வாய்ப்பும், சினைப்பையில் கேன்சர் வருவதற்கு 50% வாய்ப்பும் உள்ளன என்பது உறுதி செய்யப்பட்ட உண்மை. இதனால் ஏஞ்சலினா ஜோலி ‘வருமுன் காக்க’ மார்பகங்களை அகற்றும் அறுவை சிகிச்சையையும், மார்பக மறுசீரமைப்பு சிகிச்சையை (Breast Reconstruction)யும் மேற்கொண்டார். கேன்சர் வரலாற்றில் உலக அளவில் மிகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்திய நிகழ்வு இது.

இந்தியாவில் புற்றுநோயை வென்றவர்கள் பட்டியலில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் (நுரையீரல் புற்றுநோய்), நடிகைகள் கௌதமி, மனிஷா கொய்ராலா (மார்பகப் புற்றுநோய்) என பலரும் இடம் பெற்றுள்ளனர்.

கேன்சர் டேட்டா!

* நாட்டில் ஆண்டுதோறும் 17 லட்சம் பேருக்கு ஏதாவது ஒரு புற்றுநோய் ஏற்படுகிறது.
* 10 லட்சம் பேர் ஏதாவது ஒரு புற்றுநோயால் இறக்கின்றனர்.
* ஒன்றரை லட்சம் பெண்களுக்கு கருப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படுகிறது.
* 72,000 பேர் கருப்பை வாய்ப் புற்றுநோயால் இறக்கின்றனர்.
* 1,25,000 பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது.
* 85,000 ஆண்களுக்கும் 35000 பெண்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் வருகிறது.
* 100 பேரில் 13 பேர் மட்டுமே புற்றுநோயின் ஆரம்பக்கட்டத்தில் சிகிச்சைக்கு வருகின்றனர்.
* மூன்றில் இரண்டு மடங்கு புற்றுநோய்கள் நம் வாழ்க்கைமுறை மாற்றங்களால் ஏற்படுபவை. இவற்றை நிச்சயம் தடுக்க முடியும்.

(படைப்போம்...)