செல்லப்பிராணிகளால் மன அழுத்தம் நீங்கும்!மகிழ்ச்சி

‘செல்லப்பிராணிகள் வளர்ப்பு, அவற்றின் உரிமையாளர்களுக்கு மன ஆராக்கியத்தை கொடுக்கிறது’ என்பது ஏற்கெனவே  நமக்கு தெரிந்த விஷயம்தான். ஆனால், இப்போது ஒரு புதிய ஆராய்ச்சி பூனைகள் அல்லது நாய்களுடன் மேற்கொள்ளும் ஒரு சிறிய தொடர்பு கூட ஆச்சரியத்தக்க வகையில் பலனளிக்கும் என்பதற்கான சான்றுகளை கொடுக்கிறது.

விலங்குகளுடனான தொடர்பு மன அழுத்த நிவாரணத்தை மேம்படுத்துவதில் பயனுள்ளதாக உள்ளதா என்பதை வாஷிங்டனின் ஸ்டேட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சோதிக்க விரும்பினர். இதற்காக 249 கல்லூரி மாணவர்களை நியமித்து நான்கு தனித்தனி குழுக்களாக
பிரித்தனர்.

முதல் குழுவின் பங்கேற்பாளர்கள் பூனைகள் மற்றும் நாய்களுடன் 10 நிமிடங்கள் விளையாட அனுமதித்தார்கள். இரண்டாவது குழுவினரை தங்கள் முறைக்கு காத்திருக்கும்போது முதல் குழுவினரின் தொடர்புகளை மட்டுமே கவனிக்க வைத்தார்கள்.

மூன்றாவது குழுவினரை விலங்குகளின் ஸ்லைடு காட்சியை வெறுமனே பார்க்க மட்டுமே அனுமதித்தார்கள். கடைசி குழுவினர் தங்கள் தொலைபேசிகள், வாசிப்பு பொருட்கள் அல்லது வேறு எந்த தூண்டுதல்களும் இல்லாமல் அமைதியாக அமர வைக்கப்பட்டனர்.

‘கார்டிசோல்’ என்பது மன அழுத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக உடல் வெளியிடும் ஹார்மோன் என்பதால், பங்கேற்பாளர்களின் கார்டிசோலின் அளவு காலையில் எழுந்ததும், 10 நிமிட நிலைக்கு 15 மற்றும் 25 நிமிடங்களுக்குப் பிறகு சேகரிக்கப்பட்டது. மன அழுத்தத்திற்கு பதிலளிக்கும் உடல் வெளியிடும் கார்டிசோல் ஹார்மோன் அளவை தெரிந்து கொள்ள பங்கேற்பாளர்களிடத்தில் காலையில் எழுந்தவுடன் ஒரு முறையும், பின்னர் 15 நிமிடங்கள் மற்றும் 25 நிமிடங்களுக்கு ஒருமுறையும் இதற்காக சேகரிக்கப்பட்டிருந்தது.

இவர்களில் செல்லப்பிராணிகளுடன் நேரடியாக தொடர்பு கொண்ட முதல் குழுவினரின் 10 நிமிட தொடர்புக்குப் பிறகு, கார்டிசோலின் அளவு கணிசமாகக் குறைந்திருப்பதைக் கண்டறிந்தனர். இதில் காலையில் எழுந்தவுடன் கார்டிசோலின்  ஆரம்ப அளவுகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தாலும், அதைக்காட்டிலும் குறைந்திருப்பதும் தெரிய வந்தது.

இந்த ஆய்வின் முடிவு ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. எப்படியெனில், ‘ஒரு 10 நிமிட தற்காலிகத் தொடர்பே, மாணவர்களின் மன அழுத்தத்திற்கு காரணமான கார்டிசோல் அளவை குறைக்க முடியும் எனும்போது, நீண்டகாலத் தொடர்பு உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு கண்டிப்பாக நன்மை அளிப்பதாகத்தான் இருக்கும்’ என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் இந்த ஆய்வின் பலனை உறுதியாக நிரூபிப்பதற்காக, விலங்குகளின் உதவியை மாணவர்களிடையே 4 வார மன அழுத்த தடுப்பு திட்டமாக செயல்படுத்தும் முயற்சியையும் ஆய்வாளர்கள் மேற்கொள்ள இருக்கின்றனர்!

- என்.ஹரிஹரன்