Fresh Dates...



தெரியுமா?

கறுப்பு, சிவப்பு நிறத்தில் மேலே சுருக்கங்களுடன் பேரீச்சம் பழங்களைப் பார்த்துப் பழகிய நமக்கு மஞ்சள் நிறத்தில் விற்கப்படும் ஃப்ரஷ்ஷான பேரீச்சம் பழங்களைப் பார்த்தால் சற்று வியப்பு ஏற்படுவது இயல்புதான். ஜூலை முதல் செப்டம்பர் வரை ஃப்ரஷ் பேரீச்சம் பழ சீசன் என்பதால் ஆங்காங்கே தள்ளு வண்டிகளிலும், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் இவற்றை அதிகம் பார்க்க முடிகிறது.

வழக்கமாக நாம் சாப்பிடும் உலர்ந்த பேரீச்சம்பழத்தில் கிடைக்கும் சத்துக்களுக்கும், Fresh Dates-க்கும் இடையே வேறுபாடுகள் ஏதேனும் உள்ளதா, இதன் தனித்துவமான சிறப்புகள் என்னவென்று டயட்டீஷியன் லஷ்மியிடம் கேட்டோம்...

செடியிலிருந்து புதிதாகப் பறிக்கும் பேரீச்சம்பழம் மஞ்சள் அல்லது வெளிர் சிவப்பு நிறத்திலும், மிகக் கடினமானதாகவும் இருக்கும். அதுவே பச்சை நிறத்தில் இருக்கும் பேரீச்சையை ‘கிம்ரி’ என்கிறார்கள். மிகவும் ஈரப்பதமான தட்ப வெப்பநிலைகளில் பேரீச்சை பழம் பயிரிடப்படுவதால், அவற்றில் சாறு நிறைந்து இருக்கும்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது, அவற்றின் ஃப்ரஷ்னஸ் குறையாமல் நீண்ட காலம் பாதுகாக்க சாற்றைக் குறைத்தும், மிருதுவாக்கவும் காய வைத்தும் பதப்படுத்துவார்கள். அப்படி பதப்படுத்தும்போது நீர் வற்றி, தோல் சுருங்கி மற்றும் பழுப்பு நிறமாக மாறிவிடும். இதுவே நாளடைவில், பழுப்பு நிற, தோல் சுருங்கிய பேரீச்சையாக நமக்கு பழகிவிட்டது.

இனிப்பு சுவையுடன் உள்ள பேரீச்சையில் கருப்பு, பழுப்பு என இரண்டு வகைகளில் நாம் பயன்படுத்தி வருகிறோம். பேரீச்சையில் கார்போஹைட்ரேட் மிகுந்துள்ளதால் உடனடி ஆற்றலை பெற முடியும். இன்றும் விரதம் முடிப்பவர்கள் உணவு எடுத்துக் கொள்வதற்கு முன்பு பேரீச்சை எடுத்துக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது. பேரீச்சை இல்லாத ரமலான் நோன்பே இல்லை என்பார்கள். அதற்கு காரணம், விரதம் இருக்கும்போது உடலின் குளுக்கோஸ் அளவு குறைந்திருக்கும், அப்போது ஆற்றல் குறைந்து சோர்ந்து இருப்போம். அப்போது இனிப்பான பேரீச்சையை சாப்பிடுவதன் மூலம் உடனடி ஆற்றல் கிடைக்கும் என்பதே முக்கிய காரணம்.

இரண்டிற்கும் உள்ள வேறுபாடுஃப்ரஷ் பேரீச்சை மென்மையான அல்லது பாதி மென்மையானதாக கிடைக்கின்றன. உலர்ந்த பேரீச்சை மென்மையான ஃப்ரஷ் பேரீச்சையைவிட குறைந்த ஈரப்பதத்தைக் கொண்டுள்ளது. ஃப்ரஷ் பேரீச்சையை, காற்று புகாத டப்பாவில் வைத்திருந்தால்  8 மாதங்கள் வரையிலும் ஃபிரிட்ஜுக்குள் ஃப்ரீசருக்கு வெளியே அல்லது உள்ளே ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் ஒரு ஆண்டு வரையும் கூட கெடாமல் இருக்கும்.

உலர்ந்த பேரீச்சையை அதன் ஈரப்பதத்தை அகற்ற வேண்டுமென்பதற்காகவே நீரிழப்பு செய்யப்படுகிறது. உலர்ந்த பேரீச்சை, புதியதை விட நீண்ட ஆயுளைக் கொண்டுள்ளன. காற்று புகாத கொள்கலனில் குளிரூட்டப்பட்டால் உலர்ந்த பேரீச்சை ஒரு வருடம் வரை புதியதாகவும், ஃபிரிட்ஜுக்குள்  என்றால் ஐந்து ஆண்டுகள் வரையும் நீடிக்கும்.

கலோரி வேறுபாடு

கலோரிகளைப் பொறுத்தவரை உலர்ந்த பேரீச்சையின் கலோரி அளவு, Fresh dates-ஸை விட கணிசமான அளவில் அதிகமாக இருக்கும். ஒரு 3.5 அவுன்ஸ். உலர்ந்த பேரீச்சை சுமார் 284 கலோரிகளைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் புதிய பேரீச்சை 142 கலோரிகளைக் கொண்டுள்ளது. குறைந்த ஆற்றல் அடர்த்தி கொண்ட உணவாக, உங்கள் எடையைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறீர்கள் என்றால், புதிய பேரீச்சையே
சிறந்ததாக இருக்கும். ஏனெனில், குறைவான கலோரிகளில் இருக்கும் புதிய பேரீச்சை உங்கள் பசியை பூர்த்தி செய்ய உதவுகின்றன.

ஊட்டச்சத்து வேறுபாடு

இந்த மஞ்சள் பேரீச்சம் பழத்திலும், உலர் பேரீச்சையைப் போலவே அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளது என்பதால், தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். குறைந்த ஈரப்பதத்துடனிருக்கும் உலர்ந்த பேரீச்சையில் புதிய பேரீச்சம்பழத்தைவிட, ஊட்டச்சத்துக்களின் மதிப்பு அதிகமாக இருக்கும்.

மேக்ரோ நியூட்ரியன்ட்ஸ்

ஊட்டச்சத்துக்களில் புரோட்டீன், கார்போஹைட்ரேட், கொழுப்பு போன்றவற்றை மேக்ரோ நியூட்ரியன்ட்ஸ்கள் என்றும் வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவற்றை மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ்(Micro Nutrients)களாக பிரிக்கிறோம். அந்த வகையில் பார்த்தால், புது பேரீச்சை மற்றும் உலர்ந்த பேரீச்சைகளின் மேக்ரோ நியூட்ரியன்ட்ஸ் அளவுகள் வேறுபட்டவை. புரதமும் கொழுப்பும் சிறிதளவே வேறுபட்டாலும், கார்போஹைட்ரேட் அளவு உலர்ந்த பேரீச்சையில் இரட்டிப்பாக இருக்கிறது.

மேலும் உலர்ந்த பேரீச்சை நார்ச்சத்துக்கான சிறந்த மூலாதாரமாகவும் இருக்கிறது. ஒரு 3.5 அவுன்ஸ் புதிய பேரீச்சையில் 1.8 கிராம் புரதம், 1 கிராம் கொழுப்பு, 37 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 3.5 கிராம் நார்ச்சத்து உள்ளது. அதே அளவு உலர்ந்த பேரீச்சையில் 2.8 கிராம் புரதம், 0.6 கிராம் கொழுப்பு, 76 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது.

மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ்

உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை நுண் ஊட்டச்சத்துக்களாகும். புதியதை விட, உலர்ந்த பேரீச்சையில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் சிறப்பாக உள்ளது. அதேவேளையில், வைட்டமின் சி-க்கு புது பேரீச்சை ஒரு சிறந்த ஆதாரமாக இருக்கிறது. 3.5 அவுன்ஸ் புதிய பேரீச்சை 34 மி.கி கால்சியம், 6 கிராம் இரும்பு மற்றும் 30 மி.கி வைட்டமின் சி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

அதே அளவு உலர்ந்த பேரீச்சையில் 81 மி.கி கால்சியம், 8 மி.கி இரும்புச்சத்தும், வைட்டமின் சி அறவே இல்லாமல் உள்ளது. ஏனெனில், உலர் திராட்சையைப் பதப்படுத்தும்போது காயவைத்தல் மற்றும் சேமித்தலின்போது வைட்டமின் சி இழப்பு ஏற்படுகிறது.  

மருத்துவ குணங்கள்

கருவைச் சுமந்திருக்கும் பெண்ணின் கருப்பை தசைகளை உறுதியாக்கும் சக்தி, பேரீச்சைக்குள்ள முக்கியமான சிறப்பு மருத்துவ குணம். கர்ப்ப காலத்தில் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், பிரசவ நேரத்தில் தசைகள் எளிதில் தளர்ந்து கொடுக்கும். புது பேரீச்சம்பழம் நார்ச்சத்து மிகுந்த பழம் என்பதால் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாகிறது. கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுவது சகஜம். எனவே, பேரீச்சம்பழம் கர்ப்பிணிகளின் மலச்சிக்கலைத் தீர்க்கவும் உதவி செய்கிறது.

பிரசவித்த பெண்கள் பேரீச்சை சாப்பிடுவதால் தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, குழந்தைகளுக்கு நோய் வராமல் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். புற்றுநோயைத் தடுக்கக்கூடிய ஆற்றல் பேரீச்சம்பழத்திற்கு இருப்பதாக நவீன ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள். மேலும் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீண்டுவர பேரீச்சம்பழம் உதவுகிறது.

இயல்பாகவே பெண்களுக்கு ஆண்களைக்காட்டிலும் அதிக கால்சியமும், இரும்புச்சத்தும் தேவைப்படும். மாதவிலக்கு மற்றும் கர்ப்ப காலங்களில் ஏற்படும் ரத்த இழப்பில் இந்த சத்துக்கள் குறைந்துவிடும். இதை பேரீச்சை நிவர்த்தி செய்துவிடும்.

ரத்த சுத்தியாகவும் பேரீ்ச்சம்பழம் செயல்படுகிறது. வளரும் குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனிக்குப் பதிலாக ஃப்ரஷ் பேரீச்சம்பழம் கொடுத்தால் எலும்புகளுக்கும் பலம் கிடைக்கும். அதே வேளையில் மூளை ஆற்றலையும் அதிகரிக்கும்.

யாரெல்லாம் சாப்பிடலாம்?

கர்ப்பிணிகள் வளரும் குழந்தைகள் மற்றும் சாதாரணமாக எல்லோருமே தாராளமாக சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகள் கூட சர்க்கரைக்குப் பதிலாக, மிதமான அளவில் ஃப்ரஷ் பேரீச்சையை எடுத்துக் கொள்ளலாம். மாதவிடாய் நிற்கும் தருவாயில் உள்ள பெண்களுக்கு கால்சியம் சத்து அதிகம் தேவைப்படும். இவர்களும் Fresh dates சாப்பிடலாம்.

பேரீச்சையின் தாயகம் இஸ்ரேல் என்றாலும் எகிப்து, வளைகுடா நாடுகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. அரபு மக்களின் முக்கிய உணவுப்பொருள் இது. நம் நாட்டிலும் தற்போது குஜராத்தில் விளைவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்தியாவில் விளையும் பேரீச்சை ரகத்தை பர்ஹி பேரீச்சை (Barhi dates) என்கிறார்கள். ரமலான் நோன்புக்காலத்தில் ஒரு பேரீச்சை சாப்பிட்டு நோன்பை முடித்துக் கொள்ளும் பழக்கம் இஸ்லாம் மக்களிடம் இன்றளவும் இருக்கிறது. மேலும், ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.

- உஷா நாராயணன்