மெனோபாஸுக்குப் பிறகு ரத்தப்போக்கு?!



மகளிர் மட்டும்

பூப்பெய்துதல் எப்படி பெண்களின் வாழ்க்கையில் இயல்பான ஒரு நிகழ்வோ அதே போன்றதுதான் மாதவிடாய் சுழற்சியின் முடிவு காலமான மெனோபாஸ். 40 முதல் 60 வயது வரை எப்போது வேண்டுமானாலும் மாதவிலக்கு சுழற்சி முற்றுப் பெறலாம். மாதந்தோறும் ஏற்படும் அவதிகளை நினைத்து மாதவிடாய் சீக்கிரமே நின்று விடாதா என நினைக்கிற பெண்களுக்கு மெனோபாஸுக்குப் பிறகு ஏற்படக்கூடிய உடல் உபாதைகளைப் பற்றி அவ்வளவாக தெரிவதில்லை.

மெனோபாஸை நெருங்கும் போதிலிருந்தே உடல் மற்றும் மன ரீதியான பலவித மாற்றங்களை பெண்கள் உணர ஆரம்பிப்பார்கள். அதிகம் வியர்ப்பது, தனிமை, சோகம், எதிலும் பிடிமானம் இல்லாத உணர்வு, அழுகை... என ஏராளமான மாற்றங்களை உணர்வார்கள்.

மாதந்தோறும் வரும் மாதவிலக்கிலிருந்து மட்டுமே அவர்களுக்கு விடுதலை கிடைத்திருக்கும். தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கு மாதவிலக்கு வரவில்லை என்றால் அதை மெனோபாஸ் என எடுத்துக் கொள்ளலாம். அதாவது அதன் பிறகு மாதந்தோறும் ரத்தப்போக்கு என்பதே இருக்காது.

ஒருவேளை மெனோபாஸ் உறுதி செய்யப்பட்ட பிறகு மாதவிலக்கு ஏற்பட்டால், அது லேசாக இருந்தாலுமே கூட அலர்ட்டாக வேண்டியது அவசியம். போஸ்ட்மெனோபாஸல் பிளீடிங்(Postmenopausal bleeding) எனப்படும் இது உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியது. மெனோபாஸுக்குப் பிறகு ரத்தப்போக்கு ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். கர்ப்பப்பை சுவற்றின் உள்பகுதியில் ஏற்பட்ட வீக்கம் முதல் புற்றுநோயின் அறிகுறி வரை அதற்கு காரணம் எதுவாகவும் இருக்கலாம்.

Atropic vaginitis

மெனோபாஸின்போது ஹார்மோன் அளவுகள் மிக மிகக் குறையும். அதன் விளைவாக கர்ப்பப்பை சுவற்றின் உள்பகுதி மற்றும் பிறப்புறுப்புப் பகுதி அதீத வறட்சிக்கும் வீக்கத்துக்கும் உள்ளாகலாம். மெனோபாஸுக்குப் பிறகு உதிரப்போக்கை ஏற்படுத்தும் விஷயங்களில் இது மிகவும் பரவலானது.எண்டோமெட்ரியல் அட்ராஃபி (Endometrial atrophy)

* இதுவும் ஹார்மோன் சுரப்பு குறைவதால் ஏற்படும் பிரச்னையே. அதாவது கர்ப்பப்பையின் உள் லேயரானது மெலிந்து அழற்சிக்குள்ளாகும் நிலை இது.

இதனாலும் மெனோபாஸை அடைந்த பிறகு உதிரப்போக்கு ஏற்படலாம்.

* கர்ப்பப்பை, கர்ப்பப்பையின் வாய்ப்பகுதி மற்றும் பிறப்புறுப்பு ஆகிய பகுதிகளில் தோன்றும் புற்றுநோய் அல்லாத கட்டியின் வளர்ச்சியும் ரத்தப்போக்கை ஏற்படுத்தலாம்.

* கர்ப்பப்பை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஏற்படும் சிலவகை தொற்றுகளும் ரத்தப்போக்கை ஏற்படுத்தலாம்.

*மெனோபாஸுக்குப் பிறகும் ரத்தப்போக்கு இருக்கும் பெண்களில் 10 பேரில் ஒருவருக்கு அது புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம்.
ஆரம்பத்திலேயே எச்சரிக்கையாகி முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சைகளை எடுத்துக் கொண்டால் இந்த அபாயத்திலிருந்து எளிதாக மீளலாம்.

என்ன செய்ய வேண்டும்?

மெனோபாஸுக்குப் பிறகு ரத்தப் போக்கைச் சந்திக்கும் பெண்கள், அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுகினால் அவர் கீழ்க்காணும் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளச் சொல்லி அறிவுறுத்துவார். அதன்படி பொதுப் பரிசோதனை, பிறப்புறுப்பின் வழியே செய்யப்படும் ட்ரான்ஸ்வெஜைனல் அல்ட்ராசவுண்ட் (Transvaginal ultrasound), எண்டோமெட்ரியல் பயாப்ஸி(Endometrial biopsy), ஹிஸ்ட்ரோஸ்கோபி(Hysteroscopy), டி&சி போன்றவை தேவைப்படலாம்.

சிகிச்சைகள் என்ன?

மருத்துவப் பரிசோதனைகளின் முடிவைப் பொறுத்து காரணங்களின் அடிப்படையில் சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும். அதன்படி ஹார்மோன் அளவுகளில் ஏற்பட்ட மாறுதல் காரணமாக ஏற்பட்ட உதிரப்போக்கு என்றால் பெரிய சிகிச்சைகள் தேவை இருக்காது. HRT எனப்படும் Hormone replacement therapy மூலமே தீர்வு காணப்படும்.

எண்டோமெட்ரியல் அட்ராஃபி மற்றும் அட்ராபிக் வெஜினிட்டிஸ் பிரச்னைகளுக்கு ஈஸ்ட்ரோஜன் க்ரீம்கள் பரிந்துரைக்கப்படலாம். புற்றுநோய் அல்லாத கட்டிகளால் ஏற்பட்ட உதிரப்போக்கு என்றால் மிதமான சூட்டைச் செலுத்தி செய்யப்படும் Cauterization முறையில் சிகிச்சையளிக்கப்பட்டு ரத்தப்போக்கு நிறுத்தப்படும்.

புற்றுநோய் காரணமாக ஏற்பட்ட உதிரப்போக்கு என்றால் புற்றுநோயின் நிலை, அது பாதித்துள்ள இடம் போன்றவற்றை பொறுத்து கீமோதெரபி மற்றும் அறுவை சிகிச்சை போன்றவை தேவைப்படலாம். மிக மிக அரிதாக சில பெண்களுக்கு கர்ப்பப்பையை நீக்க வேண்டி வரலாம்.

எனவே, மெனோபாஸுக்குப் பிறகு ஏற்படும் ரத்தப்போக்கை எக்காரணம் கொண்டும் அலட்சியப்படுத்தக் கூடாது. ஸ்பாட்டிங் எனப்படும் மிகக் குறைந்த அளவு ரத்தப்போக்கு இருந்தாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம். உங்கள் பாட்டி, அம்மா, தோழிகள் என யாருக்கேனும் இந்த அனுபவம் இருந்து, அது தானாக சரியாகி விட்டதாகவும், இது பயப்படக்கூடிய பிரச்னை அல்ல என்றும் உங்கள் காதுகளுக்கு வரும் அனாவசிய அறிவுரைகளை தயவுசெய்து புறக்கணித்து விடுங்கள்.

- ராஜி