கேமரா 576 Megapixel



புதிய தொடர்

இயற்கையின் படைப்பு என்று சொன்னாலும் சரி... இறைவன் படைப்பு என்று புரிந்துகொண்டாலும் சரி... சொல்லித் தீராத அதிசயங்களையும், நம்ப முடியாத ஆச்சரியங்களையும் கொண்டவை கண்கள்!ஒரே ஓர் சின்ன உதாரணம்... நாம் HD quality என்று கொண்டாடும், அதிநவீனமாகப் படம் பிடிக்கும் ஒரு கேமராவின் பிக்ஸல் அளவு சராசரியாக 50 Megapixel. ஆனால், கண்களோ 576 என்கிற பிக்ஸல் அளவு துல்லியம் கொண்டது. சொல்லப் போனால் உலகின் முதல் டிஜிட்டல் கேமரா கண்கள்தான்.

கண்கள் இல்லாத ஒரு நாளை நினைத்துப் பாருங்கள்... ஒரு மணி நேரமேனும் கண்கள் இல்லாத வாழ்க்கையை வாழ நேர்வது எத்தனை சவாலாக இருக்கும்?!இத்தனை பெருமையும், பயனும் கொண்ட கண்களை நாம் சரியாகத்தான் பராமரிக்கிறோமோ அல்லது சரியாக கண்ணான கண்ணே என பார்த்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை வாசகர்களுக்கு விளக்கத்தான் இந்த பயனுள்ள தொடர். அதற்கு முன் கண்கள் பற்றி இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்களை அறிந்துகொள்வோம்...

கண்ணெனும் சிறு உறுப்பானது பல அதிசயங்களைத் தன்னுள் வைத்திருக்கிறது. கண்ணைச் சார்ந்த 15 முதல் 20 குறு உறுப்புகள் நரம்பு மண்டலத்துடன் ஒருங்கிணைந்து கண்பார்வை எனும் அற்புதத்தை சாத்தியமாக்குகின்றன. இவற்றின் ஒருங்கிணைப்பால் ஒவ்வொரு கண்ணும் ஒரு கேமராவாக செயல்பட்டு காட்சிகளை உள்வாங்குகிறது.

மனிதக் கண்களில் மேல் இமை, கீழ் இமை என்ற இரு பகுதிகளைப் பற்றி அறிந்திருப்போம். இந்த இமை ஓரங்களில் காணப்படும் சிறு முடிகள்(Eye lashes) கண்களுக்கான பாதுகாப்பு அரணின் முதற்படி. இந்த முடிகள் சிறு தூசிகள், கற்கள் பூச்சிகள் போன்ற அயல் பொருட்களை(Foreign bodies) கண்களைத் தாக்கும் முன்னே தடுத்து நிறுத்துகின்றன.

பொதுவாக 7 முதல் 8 மில்லி மீட்டர் நீளம் வரை இருக்கும் ஒவ்வொரு இமை மயிரின் அடியிலும் சிறு சிறு சுரப்பிகள் அமைந்துள்ளன. இவை கண்ணீர் மற்றும் எண்ணெய்ச் சத்துக்களை சுரக்கின்றன. இந்த முடிகள் குறிப்பிட்ட நீளம் வளர்ந்ததும் தானே உதிர்ந்துவிடும் தன்மையுடையவை. பின் அதே இடத்தில் இருந்து புதிதாக ஒரு முடி வளரத் துவங்கும்.

கண் இமைகள் ஒவ்வொன்றும் நான்கு அடுக்குகளால் ஆனது. மேற்புறம் தோல், அதன் கீழ் இருவிதமான தசைகள், இமைக்கு வடிவமைப்பை அளிக்கும் சிறு தட்டு(Tarsal plate) போன்ற அமைப்பு, இவை அனைத்திற்கும் உட்பகுதியில் எண்ணிலடங்கா கண் சுரப்பிகளைக் கொண்டிருக்கும் படலம்- இவை மொத்தமும் இணைந்தது இமை. கண்களுக்குள் விழும் தூசிகளிலும் பெரும்பான்மையானவை இந்த உட்புறப் படலத்தில் ஒட்டிக்கொள்கின்றன. கருவிழி போன்ற பகுதிகளை விட இதிலிருந்து தூசிகளை அகற்றுவது எளிது.

வண்டு, எறும்பு போன்ற அமிலத்தை சுரக்கும் உயிரிகள் கண்களில் விழுந்தால் கண்ணின் வெள்ளை விழிப் பகுதியில் (conjunctiva) உள்ள நூற்றுக்கணக்கான வெள்ளை அணுக்கள் அங்கு கூடி விடுகின்றன. அவை அந்த உயிரியைச் சுற்றி ஒரு அரணை அமைத்து அதனை சிறைப்படுத்தி விடுகின்றன. இதனால் எறும்போ, பூச்சியோ கண்களின் உட்புறம் செல்வதைத் தடுக்க முடியும். சிறைப்பட்ட பூச்சியை மருத்துவரால் எளிதில் அகற்ற முடியும்.

தவிரவும் வெள்ளை விழி, கருவிழி இவற்றின் மேற்பரப்பில் ஒவ்வொரு சதுர மில்லிமீட்டரிலும் லட்சக்கணக்கான உணர்ச்சி நரம்புகள் உள்ளன. அதனால் ஒரு சிறு தூசி விழுந்தாலும் மிக அதிகமான உறுத்தல் ஏற்படுகிறது. எனவே, உடனே சிகிச்சை எடுத்து தூசியை அகற்ற முற்படுவோம். இவை அனைத்துமே இயற்கை கண் பார்வையைக் காக்க அளித்திருக்கும் வரங்கள்.

தூசி போன்ற அயல் பொருட்களை வெளியேற்றுவதில் கண்களில் சுரக்கும் நீரும் பெரும்பங்கு வகுக்கிறது. பொதுவாக அயல் பொருட்கள் பட்டவுடன் கண்களைப் பலமுறை இமைத்தாலே போதும், பெருமளவில் நீர் சுரந்து அந்தத் தூசியை வெளியேற்றிவிடும். இப்படியான கண்ணீர் சுரப்பதற்கு கண் இமைகளின் அடியில் உள்ள எண்ணற்ற சுரப்பிகள் உதவுகின்றன. லாக்ரிமல் கிலாண்ட்(Lacrimal gland) என்ற சுரப்பியும் கண்ணீரை அதிக அளவில் சுரக்கிறது. கண்களில் நீர் சுரப்பு மட்டுமே 3 விதமான வழிகளில் நிகழ்கிறது.

கண்களின் மேற்பரப்பை உலர்வடையாமல் ஈரப்பதத்துடன் வைப்பதற்கு எப்பொழுதும் சிறு அளவிலான நீர் சுரந்து கொண்டே இருக்கும். புகை, ஆவி போன்ற அயல் பொருட்களின் தாக்குதல்களுக்கு எதிர்வினையாக சுரக்கும் நீர் அடுத்த வகை. உணர்ச்சிவசப்பட்ட நிலையில் மனிதன் அழும்போது மூளை நரம்புகளின் வாயிலாக தூண்டப்பட்டு கண்ணீராக வெளிப்படுவது மற்ற வகை.

இப்படி சுரக்கும் கண்ணீரில் இருந்தும், காற்றில் கலந்திருக்கும் பிராண வாயுவில் இருந்தும் கருவிழிக்குத் தேவையான உயிர்ச் சத்துக்கள் கிடைக்கின்றன. கருவிழி கண்ணாடி போன்ற பகுதியாக இருப்பதால் அதில் ரத்த நாளங்கள் எதுவும் கிடையாது. மேலும் கருவிழி ஆறு மெல்லிய அடுக்குகளைக் கொண்டது. அதன் வெளி அடுக்குகள் சுற்றுப்புறத்திலிருந்து உயிர்ச்சத்தினைப் பெற்றுக்கொள்கின்றன. கருவிழியின் உள் அடுக்குகள் கண்ணின் உட்பகுதியில் சுரக்கும் நீரிலிருந்து ஊட்டம் பெறுகின்றன.

கண்களின் அசைவுகளை நிர்ணயிக்கும் தசைகளின் கட்டமைப்பு மற்றுமொரு அற்புதம். வலது புறமாகக் கண்களை திருப்ப நேர்கையில் கண்களில் வலதுபுறம் உள்ள தசைகள் சுருங்க, இடதுபுறம் உள்ள தசைகள் நெகிழ்ந்து கொடுக்கின்றன. கண்களை இடது புறம் திருப்ப விழைகையில், கண்ணின் இடதுபுறத் தசைகள் சுருங்கி, வலது புறத் தசைகள் நெகிழ்கின்றன.

இவை தவிர கண்களை மேலும் கீழும் அசைக்கவும், சுழற்றவும் இந்த அனைத்துத் தசைகளும் ஒத்திசைந்து பணிபுரிகின்றன. இவற்றில் பல அசைவுகள் அனிச்சையாக நடைபெறுகின்றன(Involuntary movements). உதாரணமாக வலதுபுறமாக ஒருவர் கைதட்டி நம்மை அழைக்கும் போது தன்னியல்பாகக் கண்கள் அங்கே திரும்புவதை உணர்ந்திருப்பீர்கள்.

 கண்ணருகில் வரும் காயம் ஏற்படுத்தும் காரணிகளுக்கு எதிர்வினையாகக் கண்கள் சட்டென்று மூடிக் கொள்வதையும் பார்த்திருப்போம். இவை அனிச்சை செயல்கள். நாம் விரும்பும்போதும் கண்களை மூடித்திறக்கவோ, விரும்பும் திசைகளில் பார்க்கவோ நம்மால் முடிகிறது(Voluntary movements). மூளையின் நரம்புகள் மற்றும் கண்ணின் மேற்பரப்பில் இருக்கும் சிறுசிறு நரம்புகளின் துரிதமான பணியே (Reflex) இவை இரண்டும் செயல்டுத்தப் படக் காரணம். மூளை இயக்க, நரம்புகள் அந்தச் செய்தியை தசைகளிடம் சேர்க்க, தசைகள் அதனை இனிதே நிறைவேற்றுகின்றன.

நரம்பு அமைப்பினைப் போலவே கண்களுக்கான தமனி அமைப்பும்(Blood supply) சிக்கலானதாகவும், அதேசமயம் மிக நேர்த்தியானதாகவும் அமைந்த ஒன்று. இதயத்தில் இருந்து கழுத்து வழியாக மூளையைச் சென்றடையும் தமனிகள் அங்கிருந்து கண்ணின் பெரு நரம்பிலுள்ள(Optic nerve) ஒரு சுரங்கம் போன்ற பாதை வழியாகக் கண்களின் விழித்திரையைச் சென்றடைகின்றன.

கண்ணின் விழித்திரையில் இவை பல கிளைகளாகப் பிரிந்து ஒவ்வொரு செல்லுக்கும் தூய ரத்தத்தைக் கொண்டு செல்கின்றன. அதேபோல் பயன்படுத்தப்பட்ட ரத்தம் கண்களின் திரைகளின்(Veins) வழியே பயணித்து மீண்டும் இதயத்தை வந்தடையும்.இயற்கை படைத்துள்ள அத்துணை விலங்கினங்களுள்ளும் சிலவற்றிற்கு மட்டுமே மனிதனைப் போன்று இரு கண்களும் முகத்தின் முன் பகுதியில் அமைந்து, துணை வெளிப் பார்வையை (Binocular vision) அளிக்கின்றன.

ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதன் வாழ்விடத்தைப் பொறுத்து கண்களின் நிலை மாறுபடும்(Adaptation). மீன்கள், மான், ஆடு, மாடுகள் போன்ற பிற மிருகங்களின் கண்கள் தலையின் ஒவ்வொரு பக்கவாட்டுப் பகுதியிலும் இருப்பதைக் காணலாம். இத்தகைய விலங்கினங்களில் பார்வை வட்டம் (Field of vision) பெரிதாக இருக்கும். ஆனால், அவை காணும் காட்சியில் ஆழமும்(Depth) பரிமாணமும்(Dimension) குறைவாகவே இருக்கும். எந்தத் திசையில் இருந்தும் தாக்குதல் நிகழக் கூடும் என்பதால் உடலின் பின்புறமும் பார்க்க வேண்டிய அவசியம் அவற்றிற்கு உண்டு. இதனால்தான் இத்தகைய
கண்களை அவை பெற்றிருக்கின்றன.

தூரத்திலும் துல்லியமாக பார்க்கும் ஆற்றல் மனிதனைக் காட்டிலும் கழுகு, வல்லூறு போன்ற உயிரினங்களுக்கு உண்டு (Super vision). வெகு உயரத்தில் இருந்து அவை பறந்து வந்து அனாயாசமாக தன் உணவைக் கவர்ந்து போவதைப் பார்த்திருப்போம்.நீர்வாழ் உயிரினங்களுக்குக் கண்கள் ஒரு கண்ணாடிப் படலத்தால் மூடப்பட்டிருக்கும்.

அதன் வழியாக அவற்றால் நீருக்குள் பார்க்க முடியும். ஆழ் கடல் உயிரினங்களுக்கு குறைவான வெளிச்சத்திலும் ஊடுருவிப் பார்க்கும் அமைப்பையும் இயற்கை வழங்கியிருக்கிறது.கண்களின் மேற்பரப்பிலேயே இவ்வளவு அற்புதங்கள் என்றால் கண்களுக்குள்.....

( தரிசனம் தொடரும்... )