செவிலியர் சீருடை மாற்றம்!



செய்திகள் வாசிப்பது டாக்டர்

செவிலியர்களின் சீருடையில் மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. இந்த கோரிக்கை சமீபகாலமாக வலுப்பெற்ற காரணத்தால், செவிலியர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று புதிய சீருடை முறைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

செவிலியர்களின் சீனியாரிட்டி அடிப்படையில் பச்சை நிற சேலை அணிந்து கோட்டு போடுதல், ரோஸ் நிற சேலை அணிந்து கோட்டு போடுதல், 10 வருடத்திற்கு மேல் பணிபுரியும் செவிலியர்கள் வெள்ளை நிறத்தில் சுடிதார் அணிந்து கோட்டு போடுதல், 10 வருடத்திற்கு கீழ் பணிபுரியும் செவிலியர்கள் வெள்ளை நிறத்தில் பேன்ட் சட்டை என 4 விதமாக சீருடைகள் மாற்றப்பட்டுள்ளது. இதேபோல் ஆண் செவிலியர்களுக்கும் சீருடையில்
மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பழைய சீருடை அசௌகரியமாக இருப்பதாகவும், காலத்துக்கேற்ற வகையில் நவீனமாக இல்லாததால் பணி செய்வதற்கு இடையூறாக இருப்பதாகவும் செவிலியர்களும், சமூக ஆர்வலர்களும் சீருடை மாற்றம் வேண்டி கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று தமிழக சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ அரசாணையையும் கடந்த டிசம்பர் 2018 அன்று வெளியிட்டிருந்தது. அந்த உத்தரவு தற்போது அரசு மருத்துவமனைகளில் நடைமுறைக்கு வந்துள்ளது.

புதிய சீருடையை அணிந்து பணியாற்றத் தொடங்கியிருக்கும் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை செவிலியர்களிடம் இதுபற்றிக் கேட்டோம்...‘பழைய சீருடையில் பல்வேறு சங்கடங்கள் இருந்தன.

ஆனால், புதிய சீருடை பலவிதத்திலும் சௌகரியமாக இருக்கிறது. படிக்கட்டுகளில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் எளிதாக உள்ளது. கம்பீரமாகவும் எங்களை உணர்கிறோம்’ என்று செவிலியர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள். தற்போது மாற்றப்பட்ட பழைய ‘ஃப்ராக்’ சீருடை, ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் இருந்து ஏறத்தாழ 150 வருடங்களாக நடைமுறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது!

- அ.வின்சென்ட்