அல்கலைன் உணவுகள்!



டயட் டைரி

எண்ணெயில் பொரித்த உணவுகள், இறைச்சி, அதிக காரம், இனிப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பதால் சிலருக்கு வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாகிவிடும். இவர்களுக்கு அசிடிட்டி, அல்சர் போன்ற பிரச்னைகள் வரக்கூடும். இவர்கள் அல்கலைன்(Alkaline) உணவு வகைகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது என்ற கருத்து வேகமாகப் பரவி வருகிறது.

அமிலத்தன்மையுள்ள உணவுகளை விட அல்கலைன் உணவுகளை உண்பதன் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்பது அல்கலைன் உணவு ஆதரவாளர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. புற்றுநோயைப் போன்ற கடுமையான நோய்களுக்கு அல்கலைன் டயட் உதவும் என்றும் கூறுகின்றனர். இவையெல்லாம் உண்மைதானா? இவற்றுக்கு எல்லாம் ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?

முதலில் அல்கலைன் டயட் என்றால் என்ன என்று புரிந்துகொள்வோம்...நீங்கள் உண்ணும் உணவுகள் உங்கள் உடலின் அமிலத்தன்மை அல்லது அல்கலைன் தன்மை (PH *alue) ஆகியவற்றை மாற்றலாம். உண்ணும் உணவு ஜீரணமாகி எரிக்கப்பட்டு ஆற்றலாக மாறுகிறது. இவ்வாறு உணவு ஆற்றலாக எரிக்கப்படும்போது, ஒருவித சாம்பல்(Ash residue) வெளியேறும். இது ஒரு மரம் எரியும்போது அதிலிருந்து மிஞ்சும் சாம்பல் போன்றது.

இந்த சாம்பல் அமிலத்தன்மை அல்லது அல்கலைன் தன்மையுடையதாக இருக்கும். உணவில் அதிக அமிலத்தன்மை இருந்தால் அது உங்கள் உடலின் அமிலத்தன்மையை அதிகரிக்கும், அல்கலைன் தன்மை இருந்தால் அது உங்கள் உடலில் அல்கலைன் தன்மையை அதிகரிக்கும்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? சிம்பிள்... அமில சாம்பல் உடலில் நோயை உண்டாக்குவதாகவும், அல்கலைன் சாம்பல் நோயிலிருந்து நம்மை காக்கக்கூடியதாகவும் இருக்கிறது. அல்கலைன் உணவுகளை நாம் உண்ணும்போது பல நோய்களிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும், நம் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும்.

நாம் உணவுகளை pH *alue (பிஹெச் மதிப்பின்) அடிப்படையில் அசிடிக், அல்கலைன், நியூட்ரல் என்று மூன்று வகைகளாக பிரித்துக் கொள்ளலாம்.
மாமிச உணவுகள், மீன் வகைகள், பால் மற்றும் பால் பொருட்கள், தானியங்கள் மற்றும் மதுபானங்களை அமிலத்தன்மை நிறைந்த உணவுகள் என்றும், இயற்கை கொழுப்பு (தேங்காய், பட்டர் ஃப்ரூட், கொட்டைகள்) கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை நியூட்ரல் உணவுகள் என்றும் சொல்லலாம். இவற்றில் பழங்கள், காய்கறிகள், விதைகள், பருப்பு வகைகளையே அல்கலைன் உணவுகள் என்கிறோம்.

இந்த இடத்தில் இன்னும் கொஞ்சம் நுட்பமாக ஒரு விஷயத்தையும் புரிந்துகொள்வோம். pH அளவு O என்பது அமிலத்தன்மையை குறிக்கும். அதேநேரத்தில் 14 pH அல்கலைன் தன்மையை குறிக்கும். 7 என்பது நடுநிலையானது. பொதுவாக, நம்முடைய ரத்தத்தில் pH அளவானது 7.35 முதல் 7.45 வரை இருக்கும். ஆனால், நம்முடைய வயிறு மிகவும் அமிலமயமானது. 3.5 அல்லது அதற்கு கீழே இருக்கும். இது நம் உணவை ஜீரணம் செய்வதற்கு ஏதுவானது. நம்முடைய சிறுநீரும் நாம் உண்ணும் உணவுகளுக்கு ஏற்றாற்போல் மாறுகிறது. இப்படி செய்வதன் மூலம் ரத்தத்தின் pH-யை நிலைக்க செய்கிறது.

அல்கலைன் உணவு உங்கள் உடலின் ரத்த pH நிலையை பராமரிக்க உதவுகிறது. ஆனால், நாம் எந்த உணவு உட்கொண்டாலும் நம் உடல் நம் ரத்தத்தின் pH-யை சமநிலையில் வைக்கவே வேலை செய்யும். ஆனால், அல்கலைன் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியத்தையும், ஆரோக்கியமான எடை இழப்புக்கும் உதவுகின்றன. பழங்கள், காய்கறிகள் மற்றும் நிறைய நீர் எடுத்துக் கொள்வதும், சர்க்கரை, மது மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பதும் ஆரோக்கியமான எடை இழப்புக்கு வழி வகுக்கிறது.

சில ஆய்வுகளின்படி விலங்கு புரதம்(இறைச்சி மற்றும் சீஸ் போன்றவை) ரொட்டி வகைகள் அதிக அமிலத்தன்மை நிறைந்தவையாக கருதப்படுகின்றன. இவைகளைத் தவிர்த்து, அல்கலைன் உணவுகளான அதிக பழங்கள், காய்கறிகள் உட்கொள்வதன் மூலம் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கவும், எலும்புகள் மற்றும் தசைகள் வலுவாகவும், இதய ஆரோக்கியம் மற்றும் மூளை செயல்பாட்டை மேம்படுத்தவும், முதுகுவலியை குறைக்கவும், நீரிழிவு நோய்களை குறைக்கவும் உதவுகிறது.அமில உற்பத்தி செய்யும் உணவுகளை எடுத்துக் கொண்டால், உடலின் பிஹெச் சமநிலையை அதிகரிக்கச் செய்து, அசிட்டி (Acidity) பிரச்னை உண்டாகலாம்.

அல்கலைன் டயட் மற்றும் அதன் நன்மைகள் அதிகப்படியான கலோரிகள் கொண்ட உணவு, உயர் கொழுப்பு உணவுகளைத் தவிர்த்து, பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தேர்வு செய்வது; சோடியம் நிறைந்த உணவுகளை அறவே நீக்குவது போன்றவை அல்கலைன் டயட்டை பின்பற்றுவதாகும். அல்கலைன் டயட் இதய ஆரோக்கியத்துக்கும் மிகவும் அவசியமாகும். ரத்த அழுத்தம் மற்றும் ரத்த கொழுப்பை குறைப்பதற்கு உதவி புரியும். நீரிழிவு மற்றும் கீல்வாதம் ஆகியவற்றைத் தடுக்கும். ஆரோக்கியமான எடை குறைப்புக்கும் உதவி புரியும்.

அல்கலைன் தன்மை உள்ள உணவுகள் கீமோதெரபி மருந்துகளின் ஆற்றலை அதிகரிக்கக் கூடியவை. மேலும், கீமோதெரபியின் பின் விளைவுகளை குறைப்பதாகவும் சில ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். அல்கலைன் உணவு பற்றிய இறுதிப் பார்வை பழங்கள், காய்கறிகள் போன்ற உணவுகளை உட்கொள்ளும்பொழுது ஆரோக்கியமான எடை இழப்புக்கு உதவி புரிகிறது. எல்லாம் கலந்–்த உணவு முறையில்(இறைச்சி, குறைந்த கொழுப்பு பால், ரொட்டி மற்றும் இனிப்புகள் உட்பட) பல உணவு வகைகள் அனுமதிக்கப்படும். அத்தகைய உணவு வகைகள் கூட இதில் தடை செய்யப்பட்டுள்ளன.

பீன்ஸ் மற்றும் டோஃபு போன்ற செடி சார்ந்த புரோட்டீன் வகைகள் மட்டும்தான் கிடைக்கிறது. அதனால் போதுமான புரதம் மற்றும் கால்சியம் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அல்கலைன் உணவு முறையை, வெளியே சாப்பிடும் நேரங்களிலும், நீண்ட நாட்கள் பின்பற்றுவதிலும் சிறிது சிரமங்கள் இருக்கலாம். அல்கலைன் உணவு முறையை பின்பற்றுவதே கூட சிலருக்கு கடினமாக இருக்கலாம். உடற்பயிற்சியுடன் சேர்ந்த அல்கலைன் உணவுமுறை சிறந்த ஆரோக்கியத்துக்கு உறுதுணையாக இருக்கும். அல்கலைன் உணவு முறை தேர்ந்தெடுத்து ஆரோக்கியமாக
வாழுங்கள்!

அல்கலைன் காய்கறிகள்

பீட்ரூட், காலிஃப்ளவர், ப்ரோக்கோலி, வெள்ளரிக்காய், கீரை, வெங்காயம், பட்டாணி, குடைமிளகாய்.

அல்கலைன் பழங்கள்

ஆப்பிள், வாழை, பெர்ரி, திராட்சை, முலாம்பழம், எலுமிச்சை, ஆரஞ்சு, தர்பூசணி. அல்கலைன் புரோட்டீன் பாதாம், டோஃபு. அல்கலைன் ஸ்பைசஸ் பட்டை, இஞ்சி, கடுகு, கடல் உப்பு, மிளகு.

மாதிரி அல்கலைன் டயட் சார்ட்

காலை உணவு

சூப்பர் ஃபுருட் சாலட்
ஆப்பிள் - 2, ஸ்ட்ராபெர்ரி - 1 கப், வாழைப்பழம் - 1 கப், பேரீச்சம்பழம் - 4, நாவல்பழம் - 4 சேர்த்துக் கொள்ளலாம்.

மதிய உணவு

வாழைப்பழம் - 5, பேரீச்சம்பழம் - ஒரு கையளவு, வாழைப்பழத்திற்கு பதிலாக பப்பாளி சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் கீரை - 1 கப் சேர்த்துக் கொள்ளலாம். பொரியலாகவோ அல்லது பச்சை காய்கறிகளாவோ சேர்த்துக் கொள்ளலாம்.

இரவு உணவு

வால்நட் சாலட்
சாலட் - 2 கப், தக்காளி - 2 கப், லேட்டுஸ்(Lettuce), காலிஃப்ளவர் துண்டுகள் - 4.
சாலட் சாஸ்: வால்நட் - 1/3 கப், தக்காளி - 1 கப், மாம்பழம் - 1 கப், குடைமிளகாய் - 1/4 கப், எலுமிச்சைச்சாறு - 2-3 டீஸ்பூன் சேர்த்து அரைத்து சாலட் மேல் ஊற்றி சாப்பிடவும்.

(புரட்டுவோம்!)