மல்டி டாஸ்க்கிங் என்கிற மாயைசயின்ஸ்

ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பல வேலைகளைச் செய்யும் திறனை Multitasking என்று குறிப்பிடுகிறார்கள். ஒரு நேரத்தில் ஒரு வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவதை நேர விரயமாகவோ அல்லது திறமைக் குறைபாடாகவோ பார்க்கும் நிலையும் இருக்கிறது.

உண்மையில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பல வேலைகளைச் செய்யும் மல்ட்டி டாஸ்க்கிங் திறன் சரியானதா அல்லது ஒரு நேரத்தில் ஒரு வேலையில் மட்டுமே கவனம் செலுத்தும் முறை சரியானதா? ஆராய்ச்சிகள் என்ன சொல்கிறது என்பதையும், நிபுணர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதையும் பார்ப்போம்...

‘‘மல்ட்டி டாஸ்க்கிங் என்பது உண்மையில்லை. நாம் நம்புவதுபோல் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை திறமையாகச் செய்ய முடியாது. ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதால், உங்களுக்கோ, உங்கள் முதலாளி அல்லது குடும்பத்தினருக்கோ எந்தவிதமான பலனும் இருக்கப்போவதில்லை. அது ஆரோக்கியத்துக்கும் தீங்கானது’’ என்கிறார் க்ளீவ்லேன்ட் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியரானநரம்பியல் மனநல மருத்துவர் குபு(Kubu).

காரணம், ஒரு நேரத்தில் ஒரு வேலையில் மட்டுமே கவனம் செலுத்தக்கூடிய வகையில்தான் நம்முடைய மூளை வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம். இதை நரம்பியல் விஞ்ஞானமும் தெளிவாகச் சொல்கிறது. ‘மனிதன் இரண்டு சிக்கலான வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய முயற்சிப்பது வெறும் மாயை.

கவனம் மற்றும் உற்பத்தித்திறன் என்று வரும்போது, நமது மூளை ஒரு வரையறுக்கப்பட்ட அளவில்தான் உள்ளது. இதுபோல் மல்ட்டி டாஸ்க்கர்ஸ் என்று பெருமையாகச் சொல்கிறவர்களின் எண்ணிக்கையும் 2.5 சதவிகிதத்துக்கும் குறைவுதான்’ என்பது நரம்பியல் ஆய்வாளர்களின் கருத்து.

மல்ட்டி டாஸ்க்கிங்கில் இருக்கும் சிக்கல்கள் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்...வேகத்திறன் குறைபாடுமல்டி டாஸ்க்கால் நேரத்தை மிச்சப்படுத்தலாம் என்று நம்பினால் அது முற்றிலும் தவறு. சிலநேரங்களில் முழு கவனத்தையும் செலுத்த முடியாமல், மிக மெதுவாக செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டு, இரண்டு வேலைகளையும் முடிக்க காலதாமதம் ஆகிவிடும். ஒவ்வொரு வேலையையும் தனித்தனியாக செய்யும்போது முழு கவனமும் செலுத்தி, விரைவாக முடித்துவிடலாம்.

அதிகரிக்கும் தவறுகள்

இரண்டு வேலைகளுக்கு இடையே மாறுவதால், உற்பத்தித் திறனில் 40 சதவீத இழப்பு ஏற்படலாம். மேலும், வெவ்வேறு சிந்தனைகள் தேவைப்படுவதால் மூளையின் மோட்டார் நரம்புகளுக்கு அதிக வேலைப்பளுவை கொடுத்து, செய்யும் வேலையில் அதிக தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மனப்பதற்றம்

‘பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் வேலையாட்களின் இதயத் துடிப்பை ஆராய்ந்ததில், மனப்பதற்றத்தில் இருக்கும் அவர்களுக்கு இதயத்துடிப்பு மிக வேகமாக இருக்கிறது’ என்கிறார்கள் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

கனவுலக வாழ்க்கை

இரண்டு விஷயங்களைச் செய்வதில் பரபரப்பாக இருப்பவர்கள், தங்கள் கண்முன்னே நடக்கும் விஷயங்களில் கவனம் செலுத்துவதில்லை. உதாரணத்துக்கு, ஒருவர் மொபைலில் பேசிக்கொண்டே செல்லும்போது, தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை பார்த்தால்கூட அவரது மூளையில் அவை பதிவதில்லை. இதை ‘அசாதாரண குருட்டுத்தன்மை’(Inattentional blindness) என்று அழைக்கிறார்கள் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள். இவர்கள் வாழ்க்கையை நிஜத்தில் வாழ்வதில்லை என்பதே உண்மை.

நினைவுத்திறன் பாதிப்பு

டிவி பார்த்துக் கொண்டே ஒரு புத்தகம் படிக்கிறீர்கள் என்றால், இரண்டிலிருந்தும் அறிந்து கொள்ளும் முக்கியமான விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு கவனம் சிதறுவதால், அது குறுகிய கால நினைவுத்திறனை பாதிக்கும்.

உறவுச்சிக்கல்

உயர் அதிகாரி கொடுத்த வேலையைச் செய்து கொண்டிருக்கும் ஒருவரிடம், உடன் வேலை செய்பவர் வேறு வேலையை கொடுக்கும்போது, யார் சொன்ன வேலையை செய்வது என்ற குழப்பம் ஏற்படும். இது இருவருக்குமிடையேயான ஈகோ பிரச்னையிலும் முடியும்.
வீட்டிலும் கணவன், மனைவி பேசிக் கொண்டிருக்கும்போது, நடுவே அலுவலக மெயிலை செக் செய்து கொண்டிருந்தால் அது அடுத்தவரை அவமானப்படுத்துவதாக இருக்கும். அவர்களிடையேயான உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும். இது, பெற்றோர், நண்பர், குழந்தைகள் என எல்லோருக்கும் பொருந்தும்.

படைப்பாற்றல் பாதிப்பு

குறிப்பிட்ட வேலைக்கான நினைவாற்றலுடன் செயல்பட வேண்டிய நிலையில், மல்டி டாஸ்க்கிங்குக்கு ஆக்கபூர்வமான சிந்தனைத்திறன் தேவைப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளில் கவனம் செலுத்தும்போது சிக்கலான வேலைகளில் ஒருவருடைய படைப்புத்திறன் பாதிப்படையலாம்.

உளவியல்

ஒரு நேரத்தில் ஒரு வேலையைச் செய்வதைத்தான் உளவியலும் அறிவுறுத்துகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட வேலையில் ஈடுபடும் மூளை விரைவிலேயே சோர்ந்து மன அழுத்தத்தையும் உண்டாக்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.‘ஒன்றே செய்... அதையும் நன்றே செய்... அதையும் இன்றே செய்’ என்று நம்மவர்கள் சும்மாவா சொன்னார்கள்?

- என்.ஹரிஹரன்