நீரிழிவைத் தடுக்க தடுப்பூசி தயார்!



டயாபட்டீஸ் மேக் இட் சிம்பிள்

காலம் காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு தீர்வு நம் கண் முன்னே வந்துவிட்டது. யெஸ்... குழந்தைகளுக்கு ஏற்படும் டைப் 1 நீரிழிவை வராமலே தடுக்கும் வகையில் இனி தடுப்பூசி போட முடியும். இதற்கான அதிகாரப்பூர்வமான சோதனைகள் 2018-ல் தொடங்கப்பட இருக்கின்றன.

ஏற்கனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இந்தத் தடுப்பூசி பலன் தராது. ஆனால், உடலின் பாதுகாப்புத் திறனைத் தாக்கும் ஒருவித வைரஸுக்கு எதிராக, இது நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்கும். அதனால், ஒவ்வோர் ஆண்டும் டைப் 1 வகை
நீரிழிவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறையும்.

ஃபின்லாந்து நாட்டில் உள்ள டேம்பியர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இருபதாண்டுகளுக்கும் மேலாக செய்து வந்த ஆராய்ச்சியின் வெற்றி இது. இதன் பலன் அடுத்து வரும் தலைமுறையினரை நீரிழிவிலிருந்து காக்கும்.

Coxsackie*irus B1 என்கிற வைரஸ் தன் எதிர்ப்புத் திறனைப் பயன்படுத்தி கணையத்தின் செல்களை அழிக்கச் செய்கிறது. இந்த விஷயத்தை 2013-ம் ஆண்டிலேயே ஆதாரத்துடன் உலகுக்கு அறிவித்திருந்தனர் இவ்விஞ்ஞானிகள். அதன் தொடர்ச்சிதான் நீரிழிவுக்கு எதிரான தடுப்பூசியின் வெற்றி.

பொதுவாக குழந்தைகளைத் தாக்கும் டைப் 1 வகை நீரிழிவுக்கும், வாழ்க்கைமுறை மற்றும் பாரம்பரியம் காரணமாக ஏற்படும்  டைப் 2 வகை நீரிழிவுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. டைப் 2 வகையில் இன்சுலின் சுரக்கும் திறன் குறைவதன் காரணமாக, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸானது உடல் செல்களால் உறிஞ்சப்படுவதில்லை.

டைப் 1 வகையில் இன்சுலின் சுரப்பு இல்லாமல் போவதற்கு என்ன காரணம்? கணையத் திசுக்களான பீட்டா செல்கள், நம் உடலின் எதிர்ப்புசக்தியாலே அழிக்கப்படுவதுதான். இது குழந்தை பிறந்த ஓரிரு ஆண்டுகளிலேயே நடந்துவிடுவதால், டைப் 1 நீரிழிவு பாதிப்பு ஏற்படுகிறது. கணையத்தின் பீட்டா செல்களை நமது உடலின் எதிர்ப்புசக்தியை ஏன் அந்நிய சக்தியாகக் கருதி அழிக்க வேண்டும்?

இது மருத்துவ விஞ்ஞானத்தின் அறியப்பட வேண்டிய புதிர்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது. இது மிகவும் குழப்பமான விஷயம் என்பதிலும் சந்தேகமே இல்லை. டேம்பியர் பல்கலைக்கழக வைரல் விஞ்ஞானி ஹெய்க்கி ஹயோட்டி இதற்கான விடைகளை பல்லாண்டு கால ஆராய்ச்சிகளின் விளைவாகக் கண்டறிந்து வருகிறார்.

6 விதமான வைரஸ்களைத் தொடர்ச்சியாக ஆய்வுக்கு உட்படுத்திய பிறகு, இன்னும் தெளிவு கிடைத்திருக்கிறது. புதிதாகப் பிறக்கும் குழந்தைகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில், அவர்களில் கால்வாசிப் பேர்களுக்கு Coxsackie*irus B1 வைரஸின் தாக்கம் இருப்பது தெரிய வந்தது.

அத்தனை பேரையும் அந்த வைரஸ் நீரிழிவுக்குள் தள்ளி விடுவதில்லை என்பதுதான் ஒரே ஆறுதல். எனினும், வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் 5 சதவிகித குழந்தை
களுக்கு டைப் 1 நீரிழிவு ஏற்படக்கூடும்.

கெட்ட விஷயத்திலும் ஒரு நல்ல விஷயம் என்பது இதற்குப் பொருந்தும். டைப் 1 வகை நீரிழிவுக்கு குறிப்பிட்ட வகை வைரஸ் ஒரு காரணம் என அறியப்பட்டிருப்பதால், இதற்கான தடுப்பூசியைத் தயாரித்துவிட முடியும்தானே? அப்படி உருவாக்கப்பட்ட தடுப்பூசி எலிகளிடம் பரிசோதிக்கப்பட்டு விட்டது. தடுப்பூசி நல்ல முறையில் வேலை செய்வதோடு, அதன் பாதுகாப்புத் தன்மையும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மனிதர்களுக்குப் பயன்படுத்திப் பார்ப்பதுதான் அடுத்த கட்டம். அதைதான் வரும் ஆண்டில் செய்யப் போகிறார்கள் விஞ்ஞானிகள்.

இதில் ஒரு போனஸ் பலனும் உண்டு. டைப் 1 வகை நீரிழிவு மட்டுமல்ல... இந்த வைரஸ் சம்பந்தப்பட்ட மற்ற நோய்களிலிருந்தும் தடுப்பூசி நம்மைக் காக்கும். இந்தத் தடுப்பூசி உலகெங்கும் பயன் தர, இன்னும் 8 ஆண்டுகாலம் பிடிக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதன் பிறகாவது, டைப் 1 நீரிழிவு இல்லாத உலகம் உருவாகட்டும்!

- கோ.சுவாமிநாதன்