Peek Plate



ட்ரீட்மெண்ட் புதுசு

எலும்பு அறுவை சிகிச்சைகளில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிளேட், டைட்டானியம் பிளேட் போன்றவற்றைப் பயன்படுத்தி வருவது நாமறிந்த விஷயமே. தற்போது கார்பன் ஃபைபர் பீக் பிளேட்(Carbon Fiber Peek Plate) என்ற புதிய முறை பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் நாவலாடி சங்கரிடம் பீக் பிளேட் சிகிச்சை பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் கேட்டோம்...

‘‘பீக் பிளேட்டானது இதுவரை பயன்படுத்தி வந்த டைட்டானியம் பிளேட்டுகளைப் போன்று மிகவும் உறுதியானது. நீண்ட காலம் பயன்படுத்துவதற்கேற்ற நிலைத்தன்மை உடையது. மனித எலும்புகளைப் போன்றே வலிமையுடையது.

மனித உடலிலுள்ள அனைத்து எலும்பு பகுதிகளிலும் ஏற்படும் முறிவுகளை இணைத்து சரிசெய்வதற்கு இந்த தொழில்நுட்பம் பெரும் உதவியாக இருக்கிறது. இந்த பிளேட்டானது 20 கிராம் முதல் 50 கிராம் வரை எடையுடையது. இதன் எடை பழைய ஸ்டீல் பிளேட்டுகளோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, லண்டன் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்டுவரும் இந்த பீக் பிளேட் சிகிச்சை முறை இப்போது நம் நாட்டுக்கும் வந்துவிட்டது’’ என்றவரிடம், பீக் பிளேட்டின் சிறப்பம்சங்களைப் பற்றிக் கேட்டோம்...‘‘சாதாரண ஸ்டீல் பிளேட்டுகள் பொருத்தப்பட்டுள்ள எலும்பு பகுதியில் எக்ஸ்ரே அல்லது எம்.ஆர்.ஐ. மற்றும் சி.டி. ஸ்கேன்கள் எடுக்கும்போது அந்த பகுதியை முழுமையாகப் பார்க்க முடிவதில்லை.

அந்த ஸ்டீல் பிளேட்டுகள் எலும்பு பகுதியை மறைத்திருப்பதும், எக்ஸ் கதிர் மற்றும் ஸ்கேனிங் பரிசோதனைகளை அதன் வழியே அனுமதிக்காததுமே இதற்குக் காரணம். இந்த பழைய சிகிச்சைமுறையில் குணமடையும் நிலையையும் அந்த பிளேட்டுகளை நீக்கும்வரை பார்க்க முடிவதில்லை.

அதுவே பீக் பிளேட் சிகிச்சையில் எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் உள் மற்றும் வெளி பகுதிகளை எக்ஸ்ரே அல்லது எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்து, எலும்புகளின் நிலையை தெளிவாக கண்டறிய முடியும். எக்ஸ் கதிர்கள் மற்றும் இதுபோன்ற ஸ்கேனிங் பரிசோதனைகளை இந்த பிளேட்டுகள் தன் வழியே அனுமதிப்பதுதான் இதன் காரணம். இதனால் எலும்புகளில் ஏற்பட்ட பிரச்னை எந்த அளவுக்கு சரியாகியுள்ளது என்பதை இந்த பிளேட்டுகள் இருக்கும்போதே அவ்வப்போது ஒப்பிட்டுப் பார்க்க முடியும்’’ என்கிறார்.

- க.கதிரவன்