சுகாதாரத்தில் டாப் 10 நாடுகள் !



ஜன்னல்

வெளிநாடுகளை சிலாகிப்பது எப்போதும் நமக்குப் பிடித்த வேலைதான். சிங்கப்பூர் என்னா சுத்தம் தெரியுமா... ஜப்பான் அப்படி ஒரு வளர்ச்சி... அமெரிக்காவெல்லாம் சான்ஸே இல்ல... என்ற நம்முடைய சிலாகிப்புகள் அவ்வப்போது பேச்சு வழக்கில் நம்மிடம் வெளிவருவதுண்டு. இவையெல்லாம் சரிதான்...

பொருளாதார ரீதியிலான முன்னேற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி, ராணுவ பாதுகாப்பு போன்ற அம்சங்களைப் போலவே உலகின் சுகாதாரமான நாடுகள் என்னவென்று தெரியுமா? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...

‘‘உலகளவில் சுகாதாரமான 10 நாடுகள் பற்றி அதிகாரப்பூர்வமான பட்டியல் ஒன்று இருக்கிறது. இது சாதாரணமாக தரவரிசைப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. சுமார்1லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 172 நாடுகள் இதற்கென ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

அந்த நாடுகளின் சுகாதார நிலை, அதை மக்கள் அணுகும் முறை மற்றும் பொருளாதார நிலை சம்பந்தப்பட்ட தகவல்களை சேகரித்து, அதன் அடிப்படையில் உள்ள குறிப்பிட்ட சில ஆரோக்கிய இலக்குகளின் அளவுகளை ஒப்பிட்டு, அந்த நாடுகளின் சுகாதார நிலை வரிசைப்படுத்தப்பட்டுள்ளது’’என்கிறார் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநரும், இந்திய பொது சுகாதார சங்கத்தின் தமிழக தலைவருமான இளங்கோ.

சுகாதாரநிலையை அளவிடக்கூடிய அளவு கோல்கள் பற்றியும், ஆரோக்கிய இலக்குகளின்படி உலகளவில் முதல் 10 இடங்களிலுள்ள நாடுகள் பற்றியும் கேட்டோம்...‘‘ஒரு நாட்டினுடைய சமூக, பொருளாதார மற்றும் சுகாதார வளர்ச்சி என்பது அந்த நாட்டினுடைய சுகாதாரக் கொள்கைகள் மற்றும் மக்கள் நல்வாழ்வுக்கான கொள்கைகளின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறது.

அதேபோல், அந்த நாட்டு மக்களின் சராசரி வாழ்நாள், சிசு மரண விகிதம், தனி மனித சுகாதார செலவு மற்றும் அதற்கு அரசு செலவு செய்யும் தொகை, வேலை வாய்ப்பின்மை நிலை போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் அந்த நாட்டின் சுகாதாரநிலை தீர்மானிக்கப்படுகிறது. உலக வங்கி, உலக சுகாதார அமைப்பு போன்றவற்றிடமிருந்து இந்த 172 நாடுகளின் சுகாதாரநிலை குறித்த தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

2013-ம் ஆண்டு உலகளவில் 1000 குழந்தைகளுக்கு 33.6 என்ற அளவில் சிசுமரண விகிதம் இருந்தது. ஆனால், தற்போது சுகாதாரம், பொருளாதாரம் போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் அந்த இறப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளது. மேலும், மருத்துவத்துறையில் ஏற்பட்டுவரும் வேகமான முன்னேற்றங்களால் மக்களின் சராசரி ஆயுட்காலமும் அதிகரித்துள்ளது. சுகாதார இலக்குகளை அதிகமுடைய
நாடுகளில் பிறக்கும் குழந்தைகள், உலகளவிலான சராசரி ஆயுட்காலத்தைத் தாண்டி 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வதாகவும், இதேபோல் ஐஸ்லாந்தில் பிறக்கும் குழந்தைகள் 80 ஆண்டுகள் வரை உயிர்வாழ்வதாகவும் தெரிய வந்துள்ளது.

ஒரு நாட்டின் உள்கட்டுமானம் மற்றும் சுகாதார அமைப்பின் தரமானது, நோய்த் தாக்கம் எவ்வளவு குறைவாக உள்ளது என்பதோடு நெருங்கிய தொடர்புடையது. சுகாதார இலக்குகளை அதிகமுடைய நாடுகளில்மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகளவில் உள்ளது. 
சுகாதார இலக்குகளை அதிகமுடைய நாடுகளில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு சராசரியாக 2,000 டாலர்களுக்குக் கூடுதலாக சுகாதாரத்துக்கு செலவு செய்யப்படுகிறது.

ஆனால், உலகளவில் மற்ற நாடுகளில் சராசரியாக 1000 டாலர்களுக்கு மேல் செலவு செய்யப்படுகிறது. சுகாதார இலக்குகள் குறைவாக உள்ள நாடுகளில் சராசரியாக 100 டாலர்களுக்குக் குறைவாக செலவு செய்யப்படுகிறது. இதுபோன்றபொருளாதார பிரச்னைகள், வறுமை போன்ற காரணிகளால் சுகாதாரத்திற்கானசெலவினங்கள் குறைகிறது.

இது சுகாதாரப் பிரச்னைகள் மற்றும் நோய்த் தாக்குதல்கள் அதிகரிக்கக் காரணமாகிறது. முதல் இரண்டு வகை நாடுகளைவிட
அதிகமான தொகை அமெரிக்க ஐக்கிய நாடுகளில் செலவு செய்யப்படுகிறது. அங்கு ஆண்டுதோறும் மொத்தமாக 8,895 டாலர்கள் சராசரியாக செலவிடப்பட்டாலும், அந்நாட்டு மக்களின் ஆரோக்கியம் 33 நாடுகளைவிட மோசமாகவே மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதனால், அதிக செலவினங்கள் மட்டுமே ஒரு நாட்டின் வலுவான சுகாதாரநிலையை உத்தரவாதம் செய்யவில்லை என்பது நமக்கு தெரிய வருகிறது. இதுபோன்று அதிகரிக்கப்படும் ஒவ்வொரு செலவினங்களும் திறமை மிக்கதாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். மொசாம்பிக், கினியா-பிசாவு, யேமன் மற்றும் சூடான் போன்ற சுகாதார இலக்குகள் குறைவாக உள்ள நாடுகளில் 1990 முதல் குறைந்தபட்சம் ஒரு உள்நாட்டு யுத்தமாவது நடந்துள்ளது. இதுபோன்ற போர், வன்முறை மற்றும் பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள், காசநோய், காலரா மற்றும் கொள்ளைநோய்களும் மக்களின் ஆரோக்கிய நிலை, சராசரி ஆயுட்காலம் போன்றவற்றைக் குறைக்கும் காரணிகளாக உள்ளன.

இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் 1947-ம் ஆண்டு வரை 45 முதல் 47 ஆண்டுகளாக இருந்தது. இந்தியாவில் உயிருடன் பிறந்த 1000 குழந்தைகளில் 200 பேர் வரை, ஒரு வயதை பூர்த்தி செய்யும் முன்னர் இறந்துவிடும் நிலை அப்போது இருந்தது. பிளேக், மலேரியா, பெரியம்மை மற்றும் கொள்ளை நோய் போன்றவற்றால் மக்களின் உயிரிழப்பு அதிகமாக இருந்தது.

மேலும் குழந்தைகளுக்கு வாந்தி, பேதி, சீதபேதி, மூளைக்காய்ச்சல், ஊட்டச்சத்துப் பற்றாக்குறை போன்ற பிரச்னைகளும் அதிகளவு இருந்தது. மருத்துவக் கொள்கைகள், திட்டங்கள், மருத்துவ வசதிகள், மருத்துவர்களின் தேவையை பூர்த்தி செய்வது போன்றவற்றால் மேற்சொன்ன பிரச்னைகள் பெருமளவில் குறைந்துள்ளது. தற்போது சிசுமரண விகிதம் 1000 க்கு 54 பேர் என்று குறைந்துள்ளது. மக்களின் சராசரி ஆயுட்காலம் 70 வருடங்கள் என்பதை உறுதி செய்துள்ளனர். 

இதுபோன்ற முன்னேற்றம் ஒருபுறம் இருந்தாலும் தற்போது பெருகிவரும் மக்கள்தொகை மற்றும் மிகக் குறைந்த தனிமனித சுகாதார செலவு போன்ற மேலும் பல காரணங்களால் இந்தியா இந்த பட்டியலில் மிகவும் பின்தங்கியே உள்ளது. அதுமட்டுமல்ல இந்த சுகாதார இலக்குகளை அதிகம் பெற்றுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் இல்லை என்பதையும், சுகாதார இலக்குகள் மிகவும் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் அண்டார்டிகா, ஆப்பிரிக்கா நாடுகள் இருப்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு முறைகளை நவீனப்படுத்துவது, வறுமை ஒழிப்பு, தனிநபர் உடல்நல செலவினங்களை அதிகரிப்பது, வேலையின்மையைக் குறைப்பது, வன்முறை போன்ற பிற குற்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது, இயற்கை சமநிலையைப் பாதுகாப்பதன் மூலம் இயற்கை பேரிடர்களைக் கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

குழந்தைகள் மற்றும் முதியவர்களின் மரணத்துக்கு வழிவகுக்கும் அனைத்து வகையான நோய்களையும் தவிர்ப்பதற்கு, சுத்தமான நீரை பயன்படுத்துவது அவசியம். நாட்டிலுள்ள அனைவருக்கும் சுத்தமான நீரினை கிடைக்கச் செய்வது அரசின் கடமை.

இந்தியாவில் அரசியல், மொழி, மதம், இனம் போன்ற பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. இதுபோன்ற வேறுபாடுகளைக் கடந்து நாடு முழுவதற்கும் சீரான மற்றும் சமமான சுகாதார சேவையை தடையில்லாமல் வழங்க வேண்டியது அரசின் பொறுப்பு. இதுபோன்ற சுகாதாரம் சார்ந்த நடவடிக்கைகளில் அரசும், பொதுமக்களும் ஒன்றிணைந்து சீராக செயல்பட்டால் உலகளவிலான ஆரோக்கிய இலக்குகளை நமது நாடும் அடைய முடியும்!’’

- க.கதிரவன்
படம்: ஆர்.சந்திரசேகர்


10. ஆஸ்திரேலியா (Australia)

* ஆஸ்திரேலியாவில் மக்களின் சராசரி ஆயுட்காலம்- 79.9 வருடங்கள்
* சிசுமரண விகிதம் 1000 பிறப்புகளுக்கு 3.4 பேர்
* தனிநபர் உடல்நல செலவினங்கள் ஒரு ஆண்டுக்கு- 6,140 டாலர்
* வேலையின்மை விகிதம் 5.7%
* மக்கள்- மருத்துவர் இடையிலான விகிதம் 1000 பேருக்கு 3.3 மருத்துவர்கள்
* அதிகபட்ச உடல்பருமன் விகிதம்- 28.6%.

9. ஸ்வீடன் (Sweden)

*ஸ்வீடனில் மக்களின் சராசரி ஆயுட்காலம்- 79.9 வருடங்கள்
* சிசுமரண விகிதம் 1000 பிறப்புகளுக்கு 2.4 பேர்
* தனிநபர் உடல்நல செலவினங்கள் ஒரு ஆண்டுக்கு- 5,319 டாலர்
* வேலையின்மை விகிதம்- 8.1% .

8. சிங்கப்பூர் (Singapore)

* சிங்கப்பூரில் மக்களின் சராசரி ஆயுட்
காலம்- 79.9 வருடங்கள்
* சிசுமரண விகிதம் 1000 பிறப்புகளுக்கு 2.2 பேர்
* தனிநபர் உடல்நல செலவினங்கள் ஒரு ஆண்டுக்கு- 2,426 டாலர்
* வேலையின்மை விகிதம்- 2.8%
* நாட்டின் உடல் பருமன் விகிதம்- 6.2%.

7. ஆஸ்திரியா (Austria)

* ஆஸ்திரியாவில் மக்களின் சராசரி ஆயுட்காலம்- 78.4 வருடங்கள்
* சிசுமரண விகிதம் 1000 பிறப்புகளுக்கு 3.2 பேர்
* தனிநபர் உடல்நல செலவினங்கள் ஒரு ஆண்டுக்கு- 5,407 டாலர்
* வேலையின்மை விகிதம்- 4.9%
* மக்கள்- மருத்துவர் இடையிலான விகிதம் 1000 பேருக்கு- 5 மருத்துவர்கள்

6. ஐஸ்லாந்து (Iceland)

* ஐஸ்லாந்தில் மக்களின் சராசரி ஆயுட்காலம்- 81.6 வருடங்கள்
* சிசுமரண விகிதம் 1000 பிறப்புகளுக்கு 1.6 பேர்
* தனிநபர் உடல்நல செலவினங்கள் ஒரு ஆண்டுக்கு- 3,872 டாலர்
* வேலையின்மை விகிதம்- 5.6% .

5. ஜப்பான் (Japan)

* ஜப்பானில் மக்களின் சராசரி ஆயுட்காலம்- 79.9 வருடங்கள்
* சிசுமரண விகிதம் 1000 பிறப்புகளுக்கு 2.1 பேர்
* தனிநபர் உடல்நல செலவினங்கள் ஒரு ஆண்டுக்கு- 4,752 டாலர்
* வேலையின்மை விகிதம்- 4.0%
* ஒட்டுமொத்த இறப்பு விகிதம் 1000 பேருக்கு- 10 பேர்
* ஜப்பான் இளைஞர்களின் உடல்பருமன் விகிதம்- 3.3%
* காசநோய் பாதிப்பு விகிதம் 1 லட்சம் மக்களில்- 18 பேர் உலகளவிலான காசநோய் பாதிப்பு விகிதம் சராசரியாக 1 லட்சம் மக்களில்- 126 நபர்கள்.

4. லக்சம்பர்க் (Luxembourg)

* லக்சம்பர்க்கில் மக்களின் சராசரி ஆயுட்காலம்- 79.1 வருடங்கள்
* சிசுமரண விகிதம் 1000 பிறப்புகளுக்கு 1.6 பேர்
* தனிநபர் உடல்நல செலவினங்கள் ஒரு ஆண்டுக்கு- 7,452 டாலர்
* வேலையின்மை விகிதம்- 5.9%
* தனிநபரின் சராசரி மதுபான நுகர்வு- 11.9 லிட்டர்
* அதிக உடல்பருமன் விகிதம்- 23.1%.

3. சுவிட்சர்லாந்து (Switzerland)

* சுவிட்சர்லாந்தில் மக்களின் சராசரி ஆயுட்காலம்- 80.6 வருடங்கள்
* சிசுமரண விகிதம் 1000 பிறப்புகளுக்கு 3.6 பேர்
* தனிநபர் உடல்நல செலவினங்கள் ஒரு ஆண்டுக்கு- 8,980 டாலர்
* வேலையின்மை விகிதம்- 4.4%
* ஒட்டுமொத்த இறப்பு விகிதம் 1000 பேருக்கு- 9 பேர்
* மக்கள்- மருத்துவர் இடையிலான விகிதம் 1000 பேருக்கு- 3.9 மருத்துவர்கள்
* தனிநபரின் சராசரி மதுபான நுகர்வு- 10.7 லிட்டர்
* காசநோய் பாதிப்பு விகிதம் 1 லட்சம் பேரில்- 6.5 நபர்கள்.

2. நார்வே

* நார்வேயில் மக்களின் சராசரி ஆயுட்காலம்- 79.5 வருடங்கள்
* சிசுமரண விகிதம் 1000 பிறப்புகளுக்கு 2.3 பேர்
* தனிநபர் உடல்நல செலவினங்கள் ஒரு ஆண்டுக்கு- 9,055 டாலர்
* வேலையின்மை விகிதம்- 3.5%
* ஒட்டுமொத்த இறப்பு விகிதம் 1000 பேருக்கு- 8.4 பேர்
* மக்கள்-மருத்துவர் இடையிலான விகிதம் 1000 பேருக்கு- 4 மருத்துவர்கள்.

1. கத்தார் (Qatar)

* கத்தாரில் மக்களின் சராசரி ஆயுட்காலம்- 77.6 வருடங்கள்
* சிசுமரண விகிதம் 1000 பிறப்புகளுக்கு 7.0 பேர்
* தனிநபர் உடல்நல செலவினங்கள் ஒரு ஆண்டுக்கு- 2,029 டாலர்
* வேலையின்மை விகிதம்- 0.5%
* ஒட்டுமொத்த இறப்பு விகிதம் 1000 பேருக்கு- 1.4 பேர்
* மக்கள்- மருத்துவர் இடையிலான விகிதம் 1000 பேருக்கு- 7.7 மருத்துவர்கள்.