மருத்துவமா? மத வழிபாடா?



டாக்டர் எனக்கொரு டவுட்டு

கேள்வி : ஆடி மாதங்களில் கூழ் வார்க்கும் நிகழ்வு தமிழகத்தில் பரவலாக நடந்து வருவதை ஒவ்வோர் ஆண்டும் பார்க்கிறேன். இதற்கு மருத்துவ முக்கியத்துவம் உண்டு என்றும் கூறுகிறார்கள். இது நிஜமா?
- கே.சித்ரா, சென்னை - 34.
பதிலளிக்கிறார் ஆயுர்வேத மருத்துவர் அசோக் குமார்.

‘‘தமிழர்களின் வாழ்வியல் முறையில் இறை வழிபாடும், மருத்துவமும் ஒன்றாகச் சேர்ந்தே காணப்படுகின்றன. இதை பல விஷயங்களில் நுட்பமாகப் பார்த்தால் உணர முடியும். அவற்றில் ஒன்றுதான் ஆடி மாதம் கூழ்வார்க்கும் நிகழ்வும். ஆடி மாதத்தில் தட்பவெப்ப நிலை மாறிக்கொண்டே இருக்கும். அதாவது, வெயில், மழை, காற்று, பனி என அடிக்கடி பருவ மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

பகல் குறைவாகவும், இரவு அதிகமாகவும் காணப்படும். இவ்வாறு, குழப்பமான பருவநிலை நிலவும் சூழலில் ஏராளமான நோய்க்கிருமிகள் உருவாகும் அபாயம் உண்டு. இதன் எதிரொலியாக நோய்த்தொற்று, அம்மை, வயிற்றுப்போக்கு போன்ற பலபாதிப்புகள் ஏற்படுகின்றன.

இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி நோய் வராமல் தடுப்பதற்கு ஏற்றவகையிலேயே கூழ்வார்க்கும் நிகழ்வு நடைபெறுகிறது. அதற்கு நமது பாரம்பரிய உணவான கேழ்வரகு பெரிதும் பயன்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் ஒளஷதம் கஞ்சி என அழைக்கப்படுகிற இந்த உணவுப்பொருளைத் தாய்மை அடைந்த பெண்கள் உட்பட, குழந்தைகள் முதல் வயதானவர்கள் என எல்லோரும் சாப்பிடலாம் என்பது இதன் குறிப்பிடத்தக்க சிறப்பு.

கேழ்வரகு கூழ் உடல் சூட்டை தணித்து, ஆரோக்கியத்துக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் வழங்குகிறது. எனவேதான் நம்முடைய முன்னோர்கள் கேழ்வரகு கூழ் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டு இருந்தனர். சிறந்த கிருமி நாசினியான வேப்பிலையையும் கூழுடன் சேர்த்து கூழ் வார்ப்பதையும் கவனித்தால் இதன் மகத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியும்!’’

- விஜயகுமார்
படம்: சதீஷ்