புல்வெளிகளில் நடப்பது கண்களுககு நல்லது !



சர்ப்ரைஸ்

சமூக வலைதளங்களை இப்போது கலக்கிக் கொண்டிருக்கும் வீடியோ இது...‘நான் ஒரு கம்ப்யூட்டர் என்ஜினீயர். கடந்த சில நாட்களாக என் கண்கள் சிவந்த நிலையிலேயே இருந்தது. மருத்துவரிடம் பரிசோதனைக்காகச் சென்றபோது, இது Computer related injury என்றார். கம்ப்யூட்டரில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்குக் கண்களில் நீர் சுரப்பது நின்றுவிடுவதால் வரும் பிரச்னை என்று விளக்கியதுடன் அதற்கு ஒரு டிராப்ஸும் எழுதிக் கொடுத்தார். வாழ்நாள் முழுவதும் போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லிவிட்டார்.

நான் சொந்த ஊருக்குப் போயிருந்தபோது, என் பாட்டியிடம் இந்த பிரச்னையைச் சொன்னேன். அதற்கு அவர், ‘பச்சைப் புல்லுல வெறும் கால்ல நடந்துட்டே இரு... சரியாகிரும்’’ என்றார் சாதாரணமாக! பாட்டியின் அறிவுரையை அலட்சியப்படுத்தாமல், தகவல்கள் சேகரித்தபோது புல்லில் இருக்கும் க்ளோரோபில்(Chlorophyll) என்ற வேதிப்பொருள் குதிகாலின் வழியாக கண் நரம்புகளுக்குச் செல்லும்போது கண்ணில் உள்ள நீர்சுரப்பிகள் வேலை செய்யத் துவங்கிவிடும் என்று தெரிந்தது’ என ஒரு இளைஞர் பேசுவதுபோல வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
 
இதன் உண்மைநிலையை அறிய கண் அறுவை சிகிச்சை நிபுணர் திரிவேணியிடம் இதுபற்றிக் கேட்டோம்...‘‘கண்ணின் கருவிழிக்கு நேரடியான ரத்த ஓட்டம் இல்லாததால், ரத்தத்தின் மூலம் ஆக்ஸிஜன் கிடைப்பதில்லை. காற்றின் மூலம்தான் கருவிழி நேரடியாக ஆக்சிஜனை எடுத்துக் கொள்கிறது. போதிய ஆக்ஸிஜன் கிடைக்காததால் கண்ணில் நீர் வற்றிவிடும். கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் இந்த பிரச்னையை கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் அல்லது ட்ரை ஐ சின்ட்ரோம் என்கிறோம்.

இதற்காகத்தான் கம்ப்யூட்டர் முன் தொடர்ந்து வேலை செய்பவர்களை அடிக்கடி கண்களை மூடித்திறக்க வேண்டும் என்றும், கண்களை வேகமாக இமைக்க வேண்டும் என்றும் சொல்கிறோம். மேலும், Lubricant drops-ஐ கண்களில் ஊற்றிக் கொள்ளவும் பரிந்துரைக்கிறோம்.
சமீபத்தில் வெளிநாட்டில் நைட் விஷன் குறைபாட்டுக்கு குளோரோபில் ஐ டிராப்ஸ் கண்டுபிடித்திருக்கிறார்கள். புல்வெளிகள் உள்பட தாவரங்களின் பச்சையத்திலிருந்து தயாரிக்கப்பட்டதுதான் இந்த குளோரோபில் ட்ராப்ஸ். நம் நாட்டில் இன்னும்  பயன்பாட்டுக்கு வரவில்லை. அதன் அடிப்படையில் பார்க்கும்போது இது உண்மையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது” என்கிறார்.

இயற்கை மருத்துவர் வெங்கடேஸ்வரனிடம் இதுபற்றிப் பேசினோம்...‘‘கிராமங்களில் இருப்பவர்கள் ஆறு மற்றும் குளத்தின் கரையோரங்களில் உள்ள புல்வெளிகளில் வெறும் கால்களில் நடப்பார்கள். இதுபோல் வெறும் காலில் நடப்பதால் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்து, மூளை சுறுசுறுப்பு அடைவதாகவும், மன அழுத்தம் குறைவதாகவும் ஏற்கனவே ஆய்வில் கண்டறிந்துள்ளார்கள்.

பச்சைப் புல்வெளிகளைப் பார்த்தாலே கண்களுக்குக் குளிர்ச்சி உணர்வு ஏற்படுவதில் இதை நாம் உணர்ந்திருப்போம். இப்போது தாவரத்தின் பச்சையம் கண்களுக்கும் பயனளிக்கிறது என்று செய்திகள் வெளியாகியிருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்தான். இன்னும் தீவிரமான ஆராய்ச்சிகள் செய்து உறுதிப்படுத்த வேண்டும்’’ என்கிறார்.

நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் விஞ்ஞானியான இலியாஸ் வாஷிங்டன், ‘குளோரோஃபில் கொண்டு தயாரிக்கப்பட்ட கண் சொட்டு மருந்தானது இரவுப்பார்வை குறைபாட்டை போக்குவதோடு கண்சிவப்பு, வீக்கம் போன்றவற்றுக்கும் மருந்தாவதையும் தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- இந்துமதி