அலட்சிய கருத்தடை ஆபரேஷன்



உயிரின் விலை

இந்த நூற்றாண்டிலுமா இப்படியொரு கொடுமை?


சில சம்பவங்கள்

நவம்பர் 11: சட்டீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 83 பெண்களில் 13 பேர் இறந்தனர். தரமற்ற மருந்து மற்றும் மருத்துவர்களின் அலட்சியப்போக்கே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 26: ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக வந்த நாஷிராவுக்கு பிரசவம் முடிந்ததும், குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை நடந்த ஒரு மணி நேரத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்தார்.

ஆகஸ்ட் 6: கோவை மாநகர அரசு மருத்துவமனையில் கலைவாணி என்பவருக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போது அவர் கோமா நிலைக்கு சென்றார். பின்னர் சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். போதிய படுக்கை வசதி, சுகாதார நடவடிக்கைகள் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதே இறப்புக்குக் காரணம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அடிப்படையில் சிகிச்சை என்பது உயிரைக் காப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைதானே ஒழிய, உயிரைப் பறிப்பது அல்ல. மேற்கூறியவை போலவே, இந்தியாவில் கருத்தடை அறுவை சிகிச்சையால் உயிரிழந்த சம்பவங்கள் நிறைய நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை வெளியில் தெரியாமல் வேறு காரணங்களை கூறி மறைக்கப்பட்டிருக்கின்றன.

‘ஊக்கத்தொகை கொடுக்கிறோம், அரசு சலுகைகள் கிடைக்கும்’ என்றெல்லாம் ஆவலைத் தூண்டி கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள வரவழைக்கும் அரசு நிர்வாகம் அறுவை சிகிச்சை மற்றும் சிகிச்சைக்குப் பின்னரான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறதா?  இல்லவே இல்லை. அப்படி மேற்கொண்டிருப்பின் இத்தனை மரணங்கள் ஏற்பட்டிருக்காது. உயிரிழப்பின்றி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியுமா? நிச்சயம் முடியும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜ்.

“பெண்ணின் கருமுட்டையும் ஆணின் உயிரணுவும் இணையும்போதுதான் சிசு உருவாகிறது. அவற்றை இணையாமல் தடுப்பதுதான் கருத்தடையின் அடிப்படை. கர்ப்பம் தரிப்பதைத் தவிர்க்க பல வழிகள் உள்ளன. அவற்றுள் நிரந்தரமான வழிதான் கருத்தடை அறுவை சிகிச்சை. இச்சிகிச்சையில் பெண்ணின் கருமுட்டையும் ஆணின் உயிரணுவும் இணைகிற கரு இணை குழாய் துண்டிக்கப்படும். தேர்ச்சி பெற்ற மருத்துவர் மற்றும் மயக்குனர்தான் இச்சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

சுற்றுப்புறத் தூய்மையும் முக்கியம். சிகிச்சைக்கென பயன்படுத்தப்படும் உபகரணங்களை ஒவ்வொரு முறையும் நன்கு கழுவி, Cidex திரவத்தின் மூலம் 15 நிமிடங்கள் நுண்கிருமிகளை நீக்குதல் (Sterilization) செய்யப்பட வேண்டும். ரத்தக்கொதிப்பு, இதய நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இச்சிகிச்சை மேற்கொள்ளப்படுகையில் முன்னெச்சரிக்கையாக ஆக்சிஜன் சிலிண்டர் தயாராக இருக்க வேண்டும்.

மயக்கம் தெளிந்து இயல்புநிலைக்குத் திரும்பும் வரை, முறையாக பராமரிக்க பணியாளர்கள் வேண்டும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு குறைந்தது ஒரு நாளாவது ஓய்வெடுக்க வேண்டும். சுகாதாரம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக மேற்கொள்ளப்பட்டால், தரமான மருந்துகள் பயன்படுத்தப்பட்டால் உயிரிழப்புகள் ஏற்படுவது மிக மிக அரிது. உயிரின் மதிப்பும் மகத்துவமும் தெரியாதவர்கள் மருத்துவர்களே அல்ல. ஓர் உயிர் மீதான அக்கறையோடு செயல்பட்டாலே இது போன்ற உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்” என்கிறார் கமலா செல்வராஜ்.

சுகாதாரத்துறையின் அழுத்தமும் அரசு மருத்துவமனைகளின் அவலங்களுமே இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணம் என்கிறார் ‘மக்கள் நலவாழ்வு இயக்க’த்தின் தேசியக்குழு உறுப்பினர் அமீர்கான்.“உலக அளவில் மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் நம் நாடு இருக்கிறது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே பொருளாதார அளவில் முன்னேற்றத்தை எட்ட முடியும் என்கிற காரணத்தை முன் நிறுத்தி கருத்தடை அறுவை சிகிச்சைக்குத் தூபம் போடப்பட்டது.

இதற்குப் பின்னே ஓர் உலக அரசியலே இருக்கிறது. நமது நாட்டுக்கு கடன் தரும் உலக வங்கிகள், ‘மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி செலவுகளைக் குறைத்தால்தான் கடனைத் திரும்ப செலுத்த முடியும்’ என்கிற கருத்தை முன் மொழிந்ததன் விளைவுதான் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம். இதன் காரணமாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது சுகாதாரத்துறை.

 கர்ப்பகால செலவுகளுக்காக ரூ.12 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு தான் முதலில் தொடங்கியது. பின்னர் அது இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்
பட்டுள்ளது. கர்ப்பகாலத்தின் போது, பிரசவத்தின் போது, குழந்தைக்குத் தடுப்பூசிகள் போட்ட பின்னர் என இந்த உதவித் தொகை 4 ஆயிரம் ரூபாய் வீதம் 3 தவணைகளில் வழங்கப்படுகிறது. 2வது குழந்தையை பிரசவித்த பெண்களிடம் குடும்பக்கட்டுப்பாடு செய்து கொண்டால்தான் உதவித்தொகை கிடைக்கும் என்று வற்புறுத்தி கருத்தடை அறுவை சிகிச்சைக்கு சம்மதிக்க வைக்கின்றனர்.

ஒரு பெண் கரித்தரிப்பதும் கருவைக் கலைப்பதும் அந்தப் பெண்ணுக்கே உரிய உரிமை. இதில் தலையிட அரசு உள்பட யாருக்கும் உரிமை இல்லை. கருத்தடை அறுவை சிகிச்சை செய்வது இங்கு கட்டாயம் கிடையாது. இருந்தும், கருத்தடை சிகிச்சை செய்து கொண்டோரின் எண்ணிக்கையைக் கூட்ட இவையெல்லாம் மறைமுகமாக வாயளவில் மட்டும் மேற்கொள்ளப்படுகின்றன.

கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்படி வற்புறுத்தப்படுவதே தவறானது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இத்திட்டம் நடைமுறையில் இருந்தும் ஏன் மக்கள் தொகை குறையவில்லை? இதற்கான காரணத்தை சரியான முறையில் அலசி ஆராய வேண்டும். பொருளாதாரம், கல்வி, மருத்துவத்தில் தன்னிறைவு பெற்ற நாட்டில் தானாகவே மக்கள் தொகை குறையும். எளிமையாக சொல்லப்போனால் இறப்பு விகிதம் குறையும் போது பிறப்பு விகிதமும் குறையும்.

இதைப் புரிந்து கொள்ளாத அரசு, ‘ஊக்கத் தொகை’ ஆசை காட்டி மக்கள்தொகையை கட்டுப்படுத்த நினைக்கிறது.சரி... கருத்தடை அறுவை சிகிச்சையாவது முறையாக நடைபெறுகிறதா? இல்லவே இல்லை. ஒவ்வொரு செவிலியரும் 5 பேரை கட்டாயம் கருத்தடை அறுவை சிகிச்சைக்கு அழைத்து வர வேண்டும் என்பது மாவட்ட சுகாதாரத் துறையின் நிபந்தனை. அதற்குக் கட்டுப்பட்டே பலரை மூளைச் சலவை செய்தேனும் இச்சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியுள்ளனர்.

பணியாளர் பற்றாக்குறை, முறையான பராமரிப்பின்மைதான் அரசு மருத்துவமனைகளின் அவல நிலை. இப்படியான சூழலில் எளிதில் நோய்த்தொற்று ஏற்பட்டு மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது. நாளொன்றுக்கு ஒரு மருத்துவரால் குறிப்பிட்ட அளவு நபர்களுக்கு மட்டும்தான் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும். அந்த அளவைத் தாண்டி அதிக நபர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் சூழ்நிலை உருவாக்கப்படுகிறது.  2005ல், ‘தேசிய ஊரக சுகாதார இயக்கம்’ தொடங்கப்பட்டது.

அதன் கீழ், மருத்துவமனைகளில், மக்களின் குறைகள் மற்றும் தேவைகளை எடுத்துச் செல்லும் நோக்கோடு ‘பயனாளிகள் நலச்சங்கம்’ தொடங்கப்பட்டது. இன்று எத்தனை மருத்துவமனைகளில் இச்சங்கம் செயல்படுகிறது?

 ஒவ்வொரு மருத்துவமனையிலும் பொதுமக்கள் பார்வைக்கு மருத்துவமனையில் எத்தனை பேர் பணிபுரிகிறார்கள், வேலை நேரம் என்ன? இதுபோன்ற தகவல்களை உள்ளடக்கிய ‘பயனாளிகள் பிரகடனம்’ வைக்க வேண்டும் என்று ‘தேசிய ஊரக சுகாதார இயக்கம்’ சொல்கிறது. கிராம சபா கூட்டங்களில் துணை சுகாதார நிலையத்தின் செலவுக் கணக்குகள் வாசிக்கப்பட வேண்டும். இவை எதுவும் நடைமுறையில் இல்லை.

80 சதவிகித நோய்களுக்கு மருத்துவமனைகளை நாட வேண்டியது இல்லை என்பதற்காகவே துணை சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டன. பல துணை சுகாதார நிலையங்களுக்கு மருத்துவர் செல்வது கூடக் கிடையாது. இதையெல்லாம் எதிர்த்து மக்கள் கேள்வி கேட்டு விடக்கூடாது என்பதில் அரசு தெளிவாக இருக்கிறது. ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஜனநாயக ரீதியில் பயனாளிகள் நலச்சங்கம் தொடங்கப்பட்டு, தொடர்ந்து இயங்க வேண்டும்.

அப்போதுதான் அரசு மருத்துவமனை மக்கள் மருத்துவமனையாக மாற்றம் பெறும். மருத்துவமனையின் அவலங்களை எதிர்த்து குரல் எழும்” என்கிறார் அமீர்கான்.இரண்டாவது குழந்தையை பிரசவித்த பெண்களிடம் குடும்பக்கட்டுப்பாடு செய்து கொண்டால்தான் உதவித்தொகை கிடைக்கும் என்று சொல்லி வற்புறுத்தி கருத்தடை அறுவை சிகிச்சைக்கு சம்மதிக்க வைக்கின்றனர்.

பொதுவாகவே மருத்துவர்கள் ஒரு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய 15 முதல் 20 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்கின்றனர். சிறப்பு முகாம்களில் அதிக எண்ணிக்கையிலான அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையால் 2 முதல் 5 நிமிடங்களுக்குள்ளாகவே சிகிச்சையை முடித்து விடுகின்றனர். ஒரு நபருக்கு சிகிச்சை புரிய குறைந்தது 2 செட் உபகரணங்கள் வேண்டும். சிகிச்சை முடிந்த பின்னர் கிருமிகள் இல்லாதபடி Sterilization  செய்ய வேண்டும்.

சிறப்பு முகாம்களில் அதற்கான நேரம் இல்லாததால், முறையாக சுத்தம் செய்யப்படாத உபகரணங்களை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஒரே உபகரணங்களைக் கொண்டு 10க்கும் அதிக அறுவை சிகிச்சை களை செய்திருக்கிறார்கள். இதனால் கிருமித்தொற்று ஏற்பட்டு பெரும் விளைவுகளுக்கு காரணமாக அமைகிறது.

அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையை மட்டும் கணக்கில் கொள்பவர்கள் அறுவை சிகிச்சைக்கு பிறகு ஒரு நாள் ஓய்வெடுக்க வேண்டும் என்பது போன்ற எந்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துவது இல்லை.

கி.ச.திலீபன்