வந்தான்டா மார்பர்க்!



புதிய பயங்கரம்

உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் எபோலாவை பற்றியே நாம் இன்னும் ஒரு முடிவுக்கு வந்தபாடில்லை. அதற்குள், ‘மார்பர்க் காய்ச்சலால் உகாண்டாவில் ஒரு நர்ஸ் உயிரிழப்பு’ என்று ஃப்ளாஷ் நியூஸ் ஓடினால் என்னதான் செய்வது?

மார்பர்க் காய்ச்சல் (Marburg fever)
பற்றித் தெரியாதவர்களுக்காக ஒரு சிறிய அறிமுகம்...

எபோலாவை போலவே இந்த மார்பர்க் காய்ச்சலின் நதிமூலமும் ஆப்பிரிக்காதான். உகாண்டாவிலிருந்து ஜெர்மனிக்கு ஆய்வு நடத்துவதற்காகக் கொண்டு வந்த ஒரு குரங்கிலிருந்தே மனிதனுக்கு இந்தக் காய்ச்சல் தொற்றியிருக்கிறது.

ஆப்பிரிக்க வவ்வால் இனத்தின் மூலம் சுரங்கத் தொழிலாளிகளிடம் பரவி, அவர்களின் மூலம் ஊருக்குள்ளும் வந்து சேர்ந்திருக்கிறது. 1967லேயே, இந்தக் காய்ச்சலால் பலர் இறந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட எபோலாவுக்கு ஏற்படும் அதே அறிகுறிகள், அதே வேகம், அதைவிட அதிக சாத்தியம் உள்ள உயிரிழப்பு விகிதம் என்பதால்தான் பதற்றப்பட வைத்திருக்கிறது. 

புதிது புதிதாக இதுபோன்ற காய்ச்சல்கள் வருவது பற்றி மருத்துவர் சதீஷ்குமாரிடம் கேட்டோம்...‘‘மனிதர்கள் காலத்துக்கேற்றாற்போல பரிணாமம் அடைவதைப் போல, வைரஸ்களும் எதிர்ப்பு மருந்துகளையும் தாண்டி, வேறு பரிணாமம் அடைந்து விடுகின்றன. அதனால்தான், ஒரு காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முன்னரே, நாம் எதிர்பாராத இன்னொரு மர்மக் காய்ச்சல் வந்து நம்மை பயமுறுத்துகிறது.

ஆரம்பகாலத்தில் விலங்குகளை அப்படியே பச்சையாக உண்ட பழக்கம், காட்டை அழித்து மனிதன் குடியேறியது போன்ற காரணங்களால் விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு இதுபோன்ற காய்ச்சல்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. மனித உயிரிழப்பு ஏற்பட்டால்தான் அதுபற்றிய ஆய்வுகளில் இறங்குகிறோம்.

ஆனால், விலங்குகளுக்கு இதுபோன்ற நோய்கள் முன்னரே இருந்திருக்கலாம். விலங்குகளின் இறப்பையும் ஆராய ஆரம்பித்தால், இதுபோன்ற நோய்களை முன்னரே கண்டுபிடிக்க வாய்ப்பு இருக்கிறது.

டெங்கு, சிக்குன்குன்யா போன்ற காய்ச்சல்கள் கொசுவின் மூலம் பரவுகிறது என்றால், அதற்கேற்றவாறு கொசு இல்லாத சூழ்நிலையை நம்மைச் சுற்றி உண்டாக்கி, அதிலிருந்து தப்பிக்க முடியும். எதிர்பாராத காய்ச்சல் வரும்போதோ, அதை எதிர்த்து போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆப்பிரிக்காவுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் மனிதர்களிடம் தொடர்புகள் அதிகம் என்பதால், இது போன்ற பரவும் காய்ச்சல்கள் ஏற்பட்டால் பாதிப்புகளும் அதிகளவிலேயே இருக்கும்.

நல்லவேளையாக அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதால், எபோலா இந்தியாவுக்குள் இல்லை. நவம்பர் 18 அன்று டெல்லி விமான நிலையத்தில் அப்படி தீவிரமான கண்காணிப்பில்தான் எபோலா நோயாளி ஒருவரை அடையாளம் கண்டு, தனியே வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது போன்ற காய்ச்சல் வெளிநாடுகளில் இருந்து வருவதால், வெளிநாடு சென்று வந்தவர்களிடம் கவனமாகப் பழக வேண்டும், ஒருவர் பயன்படுத்திய ஊசி போன்ற பொருட்களை மற்றவர் பயன்படுத்தக் கூடாது.

அசைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள் நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும். ஏதாவது உடல்நலக் குறைவு ஏற்பட்டால்உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும்’’ என்கிறார். ‘‘கிட்டத்தட்ட எபோலாவுக்கு ஏற்படும் அதே அறிகுறிகள், அதே வேகம், அதைவிட அதிக உயிரிழப்பு விகிதம் என்பதால்தான் பதற்றப்பட வைத்திருக்கிறது மார்பர்க்...’’

- தேசிகன்