டியர் டாக்டர்



ஒரு காச நோயாளி தன் வாழ்நாளில் தொடர்ந்து இருமினால் தன்னைச் சுற்றி இருக்கும் நண்பர்கள், உறவினர்கள் என 17 பேருக்கு நோயை தர முடியும் என சொல்கிறது டாக்டர் மு.அருணாசலத்தின் கட்டுரை. இது தனது சொத்தினை 17 பேருக்கு தருவது போல உள்ளது. இப்போதுள்ள நிலவரப்படி எங்கே சார் தூசி இல்லா ரோடு, தூசி இல்லா இடம் இருக்கிறது?
- செ.பிரியதர்சினி செல்லதுரை, கோவை.

உடலில் அமைதியாக இருந்து ஆளைக் கொன்று விடக்கூடியது ரத்த அழுத்தம், அதனால்தான் இதற்கு சைலன்ட் கில்லர் என்ற பெயரா? பெயரை பாருங்கள்! நம் உடம்பிலுள்ள நோய்களில் இப்போது அதிக ஓட்டு வாங்கி முன்னணியில் இருப்பது, இந்த அமைதியான ஆட்கொல்லி நோய். இதை நாம் அமைதியாகவே கொன்று விட வேண்டும்.
- ச.ஜெனோவா சந்தோஷ், கோவை.

உயர் ரத்த அழுத்தம் தடுப்புமுறை பற்றி இதுவரை யாருமே இவ்வளவு தெளிவாக எடுத்துச் சொன்னது இல்லை. மொத்தத்தில் பி.பி.க்கு டாட்டா காண்பிச்சாச்சு! பால் விலையும் ஏறிப் போய் பயமுறுத்தி வரும் இத்தருணத்தில் பாலால் இன்ன நோயும் வரக்கூடும் என எடுத்துச் சொல்லி வயிற்றில் ‘பால்’ வார்த்திருக்கிறீர்கள்! வீட்டில் ‘குங்குமம் டாக்டர்’ இருக்க கவலை இனி ஏது? எப்படி இவ்வளவு விஷயமும் தேடிப் பிடிக்கிறீங்க!
- சுகந்தி நாராயணன், வியாசர் நகர்.

 ஒல்லியான உடம்புதான் அழகானது என்று நம்பிக்கொண்டிருந்தோம். ‘மகளிர் மட்டும்’ பகுதியில் சிறுநீரகத்தையே பாதிக்கும் ‘புலிமியா’ பயங்கரம் பற்றி தெரிந்துகொண்டோம். இனிமேல் அவரவர் உயரத்துக்கேற்ப எடையை தக்க வைத்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி விட்டீர்கள்.
- மேகவர்ஷினி, சேலம்.

சாதாரண தலைவலி முதல் ஆபத்தான தலைவலி வரை பல வகைகள் உள்ளன என்பதையும் முக்கியமாக ‘மைக்ரேன்’ தலைவலிக்கு ‘பெண்களின் தலைவலி என்றும் ‘க்ளஸ்டர்’ தலைவலிக்கு ஆண்களின் தலைவலி’ என்றும் பெயர் இருப்பதைச் சொன்ன டாக்டருக்கு நன்றி. - விக்னேஷ்வரன், சென்னை.

‘மயக்கம் என்ன’ பகுதியில் அதிர்ச்சி டேட்டா படித்து அதிர்ச்சி அடைந்தேன். தமிழ் மண்ணின் எந்த ஒரு சாலையிலும் குடிமகன்களின் தாய்மண் மீதான பற்று, 2000ம் ஆண்டுக்குப் பிறகே அதிகமாக மாறியிருக்கிறது. மது குடிப்பவர்களின் விஷயத்தில் தமிழ்நாடு சாம்பியன் ஆகவே திகழ்கிறது என்பதை சுட்டிக்காட்டியது. என்றைக்கு திருந்தி வாழ்வார்களோ இவர்கள்?
- தீபக்ராஜ், கன்னியாகுமரி.

கருமுட்டை உறைதல் பற்றிய சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து வெளியிட்ட ‘குங்குமம் டாக்டருக்கு’ எப்படி நன்றி சொல்வது?
- வர்ஷினி வருண்குமார், நாகப்பட்டினம்.