பதற்றத்தை ஏற்படுத்திய பச்சிளம் குழந்தைகள் மரணம்



அதிர்ச்சி

தர்மபுரியும் சேலமும் பெண்சிசுக் கொலை, குழந்தைத் திருமணம், கருக்கொலை மற்றும் பச்சிளம் குழந்தைகள் மரணம் என தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன. சமீபத்தில் தர்மபுரி அரசு மருத்துவமனையில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகள் 5 பேர் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து இறந்ததும், அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் மருத்துவமனையில் 8 குழந்தைகள் பலியானதும், தமிழக அளவில் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளன. 

இப்பகுதியில் கர்ப்பகால ரத்தசோகை, எடை குறைவான குழந்தைகள் பிறப்பு மற்றும் பச்சிளம் குழந்தைகள் இறப்பு ஆகியவை தொடர்கதையாக உள்ளன. பச்சிளம் குழந்தைகள் தொடர் மரணத்தின் உண்மையான மருத்துவக் காரணங்களே, இதன் பின்னணியில் உள்ள பிரச்னையை வெளிச்சம் போட்டுக் காட்டும்.

என்ன நடந்தது தர்மபுரியில்?


தர்மபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு இயங்கி வருகிறது. எடை குறைவு, மூச்சிரைப்பு, பிறக்கும் போதே மஞ்சள் காமாலை ஆகிய பாதிப்புள்ள குழந்தைகள், பிறந்த உடனே, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்படுகின்றனர்.

நவம்பர் 15 அன்று இரவு, தர்மபுரி மாவட்டம் ஈச்சம்பாடியை சேர்ந்த குமுதாவின் ஆண் குழந்தை, பாப்பிரெட்டி பகுதியில் உள்ள பூர்ணிமாவின் பெண் குழந்தை, அரூர் கோபிநாதம்பட்டியை சேர்ந்த ஜெயகாந்தியின் பெண் குழந்தை, திருப்பாத்தூர் ஷோபனாவின் பெண் குழந்தை, தர்மபுரி பழனியம்மாளின் பெண் குழந்தை ஆகிய 5 பச்சிளம் குழந்தைகளும் அடுத்தடுத்து இறந்துள்ளன.

 குழந்தைகள் இயற்கையாக இறந்து விட்டதாக பெற்றோரிடம் ஒப்புதல் கையொப்பம் பெற்றுக் கொண்டு, ‘விடியும் முன்னரே குழந்தைகளை அடக்கம் செய்துவிடுங்கள்’ என அறிவுறுத்தி அனுப்பி வைத்ததாக, குழந்தைகளை இழந்த பெற்றோர் கண்ணீர் மல்கக் கூறுகின்றனர்.

அடுத்தடுத்து குழந்தைகள் இறந்த போதும், மருத்துவமனை அலுவலர்கள், ‘ஒருவர் குழந்தை இறந்தது மற்றவருக்கு தெரிந்து விடாதபடி’ மறைத்து அனுப்பி விட்டனர். நவம்பர் 11 அன்று முருகன் என்பவரின் குழந்தை 2 கிலோ 600 கிராம் எடையுடன் பிறந்தது.

இரண்டே நாட்களில் அக்குழந்தை மூச்சுத் திணறலில் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதன் பிறகு, 5 குழந்தைகள் இறந்த சம்பவத்தை அறிந்த முருகன், மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையில் சந்தேகம் இருப்பதாக கேள்வி எழுப்பினார். இதுதான் குழந்தைகளைப் பறிகொடுத்த மற்ற பெற்றோரையும் யோசிக்க வைத்தது.

மருத்துவமனையில் தொடர் விசாரணை நடக்க, பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே, தொடர்ச்சியாக அடுத்தடுத்து மரணங்கள்...தர்மபுரி அரசு மருத்துவமனையில் நவம்பர் 15 முதல் 20 வரை 12 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இப்போது, சென்னையை சேர்ந்த குழந்தைகள் மருத்துவ சிறப்பு சிகிச்சை நிபுணர் குமுதா தலைமையில் 9 பேர் மருத்துவக் குழு, பச்சிளம் குழந்தைகள் வார்டில் விடிய விடிய கண்காணித்து வருகின்றனர்.

மருத்துவக் கல்வி இயக்குனர் கீதாலட்சுமி தலைமையிலான குழுவும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. கடந்த 8 மாதங்களில், தர்மபுரி அரசு மருத்துவமனையில் 321 சிசுக்கள் உயிரிழந்துள்ளனர். ஏப்ரல்: 34, மே: 39, ஜூன்: 48, ஜூலை: 41, ஆகஸ்ட்: 35, செப்டம்பர்: 41, அக்டோபர்: 48, நவம்பர்: 35 என மொத்தம் 321 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

எடை குறைவு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாகவே குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பச்சிளம் குழந்தைகள் வார்டில் தொற்றுநோய் பரவியதா என்றும் பரிசோதனை செய்து வருகின்றனர்.

அங்குள்ள கழிவறையில் குளோரின் அதிக அளவில் பயன்படுத்தியதால், குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். தர்மபுரி அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டில் புதிதாக 10 ஏசி சாதனங்கள் பொருத்தப்பட்டன.

நவம்பர் 20 நிலவரப்படி பச்சிளம் குழந்தைகள் வார்டில் 70 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 46 குழந்தைகள் நல்ல நிலையிலும், 19 குழந்தைகள் அபாய கட்டத்திலும், 5 குழந்தைகள் மிகுந்த அபாய கட்டத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் இறப்பின் காரணமாக மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளதால் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது.

தர்மபுரியில் இந்தப் பிரச்னை ஏற்பட்டதால், அங்கிருந்து அபாய கட்டத்தில் இருந்த குழந்தை கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இரு மருத்துவமனைகளிலும் சேர்த்து, இதுவரை 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இன்னும் எத்தனையோ?சிசு மரணங்கள் மருத்துவ ரீதியாகவும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. தர்மபுரி மாவட்டம் ஏற்கனவே பெண் சிசுக்கொலை மற்றும் குழந்தைத் திருமணம் அதிக அளவில் நடக்கும் மாவட்டமாக இருந்து வருகிறது. நவம்பர் 14ல் இறந்த குழந்தைகளில் மூவரின் தாய்மார்களின் வயது 20க்கும் குறைவு. ஒரு குழந்தையின் தாய் இப்போதுதான் 18 வயதை எட்டியுள்ளார்.

குழந்தைத் திருமண நடைமுறையும் எடை குறைந்த குழந்தை பிறக்க காரணமாகியுள்ளது. அரசு மருத்துவமனை கணக்கெடுப்பின் படி, குறைப் பிரசவத்தில் இறக்கும் குழந்தைகள் விகிதம் சேலம்: 5.6, தர்மபுரி: 10.8, நாமக்கல்: 4.3 மற்றும் கிருஷ்ணகிரி: 4 சதவிகிதம் ஆக உள்ளது.தர்மபுரியில் நெருங்கிய உறவுகளுக்குள் திருமணங்கள் அதிக அளவில் நடக்கின்றன. இந்தாண்டு தடுத்து நிறுத்தப்பட்ட குழந்தைத் திருமணங்கள் சேலம்:

 100, நாமக்கல்: 80,தர்மபுரி: 150, கிருஷ்ணகிரி: 70 எனப் பதிவாகியுள்ளது. பெண்ணின் உடல் திருமணத்துக்கும் மறு உற்பத்திக்கும் தயாராக, போதுமான வளர்ச்சி அவசியம். 15 வயதிலேயே திருமணங்கள் நடப்பதால் போதிய வளர்ச்சியை உடல் உறுப்புகள் எட்டும் முன்னரே தாம்பத்தியம், குழந்தைப்பேறு ஆகியவை நடக்கின்றன. இதன் காரணமாக எடை குறைவு, போதிய வளர்ச்சியின்மை, குறைப்பிரசவம் உள்ளிட்டபிரச்னைகளை பிறக்கும் குழந்தைகள்சந்திக்கின்றனர்.

மகப்பேறு காலத்தில் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பெண்கள் சத்தான உணவு உட்கொள்ள அரசு வழங்கும் உதவித்தொகை முழுமையாக பயன்படுத்தப்படுவதில்லை. தர்மபுரி பகுதிகளிலுள்ள ஆண்கள் பெங்களூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், வடமாநிலங்களுக்கு வேலைக்காக இடம் பெயர்ந்து விடும் நிலையில், கர்ப்பகாலத்தில் சத்துணவு மற்றும் போதிய கவனிப்பின்மை, மன உளைச்சல் போன்ற பிரச்னைகளுக்கு கர்ப்பிணிகள் ஆளாவதாக பெண்கள்அமைப்புகள் தெரிவிக்கின்றன.

கிராமப்புறங்களில் உள்ள கர்ப்பிணிகளின் எடையை மாதந்தோறும் கண்காணித்து மருத்துவ ஆலோசனை வழங்கும் பணிகளில் ஆரம்ப சுகாதார செவிலியர் காட்டும் மெத்தனமும் இழப்புகளுக்கு இன்னொரு காரணம். இங்கு மலை கிராமப் பகுதிகளே அதிகம் உள்ளன. இங்குள்ள பெண்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு மற்றும் வசதியின்மையின் காரணமாக, கர்ப்ப காலத்தில் சரியான ஊட்டச்சத்து எடுத்துக் கொள்ளாமல், 60 சதவிகிதம் பேர் ரத்தசோகையால் பாதிக்கப்படுகின்றனர்.

‘தர்மபுரி மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள், மூச்சுத்திணறல் மற்றும் அபாய நிலையில் உள்ள குழந்தைகள் உயர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர். பச்சிளம் குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவில் 100 குழந்தைகள் வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் 30 குழந்தைகள் வரை இன்குபேட்டரில் கண்காணிக்கப்படுகிறது.

இவ்வாறு சிகிச்சைக்கு வரும் ஆயிரம் குழந்தைகளில் 17 குழந்தைகள் மட்டுமே இதுவரை மரணத்தைத் தழுவியுள்ளன’ என மருத்துவர்கள் சொல்கின்றனர். தர்மபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் குழந்தைகள் இறக்கும் போது 4 மணி நேரம் கழித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுவதாகவும், அவ்வாறு இறக்கும் குழந்தைகளை எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகமே வாகன ஏற்பாட்டையும் செய்து தருவதாகவும், இதனால் பச்சிளம் குழந்தைகள் மரணம் தொடர்ந்து மறைக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன.

சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் சார்பில், 2012-13ல் தர்மபுரி மாவட்டத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை அதிகரிக்கின்றன. ‘டிஸ்ட்ரிக் லெவல் ஹவுஸ்ஹோல்டு அண்டு ஃபெசிலிட்டி சர்வே’ கணக்கெடுப்பில் திருமணம் ஆன பெண்களில் நகர்ப்புறத்தில் 42.8 சதவிகிதம் பேர் கல்வியறிவு இல்லாதவர்கள். மொத்த குழந்தை பிறப்பில் 15 வயதில் இருந்து 19 வயதுக்குள் 6.4 சதவிகிதம் பேர் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர்.

 2 குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்பவர்கள் 45.5 சதவிகிதம். ஆன்டிநேட்டல் பரிசோதனை செய்து கொள்பவர்களின் சதவிகிதம் 96.8. ரத்தப் பரிசோதனை 88.4 சதவிகிதமாகவும், வயிற்றுப் பரிசோதனை 54.1 சதவிகிதமாகவும், முழு ஆன்டினேட்டல் கேர் எடுத்துக் கொள்பவர்கள் சதவிகிதம் 49.8 சதவிகிதமாகவும் படிப்படியாகச் சரிந்துள்ளது. கர்ப்பகாலம் முழுமைக்குமான பரிசோதனை மற்றும் பராமரிப்பு இப்பகுதிகளில் பின்தங்கியுள்ளன.

அரசு மருத்துவமனையில் 71.5 சதவிகிதம் பேர் பிரசவம் செய்து கொள்கின்றனர். அவற்றில் 11.8 சதவிகிதம் அறுவைசிகிச்சை மூலம் மேற்கொள்ளப்படுகிறது. 5 மாதம் வரை 60 சதவிகிதம் பேர் மட்டும் குழந்தைக்கு தாய்ப்பால் அளிக்கின்றனர். குழந்தைக்கு ஏற்படும் நோய்கள், தடுப்பு முறைகள் போன்றவையும் 50 சதவிகிதம் பெண்களுக்கு தெரிவதில்லை. 6 மாதம் முதல் 9 மாதம் வரை உள்ள குழந்தைகளில் 55.1 சதவிகிதத்தினருக்கு ரத்தசோகை பாதிப்பும், இதில் 3.2 சதவிகிதத்தினருக்கு கடும் பாதிப்பும் காணப்படுகிறது.

தாய்மை அடைந்த பெண்களில் 15 வயது முதல் 49 வயது வரை உள்ள பிரிவில் 54.2 சதவிகிதம் பேருக்கு ரத்தசோகை உள்ளது. இந்த வயதில் சாதாரண பெண்களில் 35.9 சதவிகிதத்தினர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தின் தலைவர் சரவணனிடம் இது பற்றி கேட்டோம்...

‘‘தொடர்ச்சியாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் இறந்தது குறித்து ஆய்வு செய்துள்ளோம். ஆரோக்கியமான குழந்தைகள் கூட இந்த சம்பவத்தில் மூச்சுத் திணறலில் இறந்ததாக கூறுகின்றனர். இங்கு குழந்தைகளை சிகிச்சைக்கு கொண்டு செல்லும் போது மருத்துவர்கள் கண்டு கொள்வதில்லை.

போதிய கவனிப்பின்மை மற்றும் இயந்திரக் கோளாறு போன்றவை குழந்தைகளின் இறப்புக்கு காரணமாக இருக்கலாம். இதற்கு முன்பும் பல குழந்தைகள் இறந்துள்ளனர். குழந்தை இறப்பை தடுப்பதற்கானநடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. மருத்துவர்களின் கவனக்குறைவே குழந்தைகள் இறப்புக்கு காரணம்’’ என்கிறார் சரவணன்.

ஆரோக்கியமான குழந்தை பெற கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்துபச்சிளம் குழந்தைகள் மருத்துவர் அருணாவிடம் கேட்டோம்...‘‘பெண்கள் பூப்பெய்தும் பருவமான 11 வயதில் இருந்தே கவனம் வேண்டும். பெண்ணின் உடல் மறு உற்பத்திக்கு தயாராகும் காலத்திலேயே சத்தான உணவு, உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும். வளர் இளம் பருவத்தில் உடலை ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் உணர்த்த வேண்டும்.

இன்றைய இளம்பெண்கள் காய்கறி மற்றும் சத்தான உணவு எடுத்துக் கொள்வதில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். இதனால் கருப்பை வளர்ச்சி, மறு உற்பத்திக்குத் தயாராவது போன்ற விஷயங்களில் பெண்ணுடல் பலவீனம் அடைய வாய்ப்புள்ளது. போதிய சத்துணவு எடுத்துக் கொள்ளாமை மற்றும் ரத்தசோகை உள்ளிட்ட பிரச்னைகளுடன் 18 வயதுக்குக் கீழ் திருமணம் நடப்பதால், எடை குறைந்த, வளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகள் பிறக்க வாய்ப்பாக அமைகிறது.

எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு ஆரம்பகட்ட சிகிச்சையாக இன்குபேட்டரில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். அதன் பின்னரும், தாய் அந்தக் குழந்தைக்குக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வெற்று மார்பில் குழந்தையைபோட்டுக் கொண்டு, ‘கங்காரு குட்டியை வளர்ப்பது போல’ குழந்தையை வளர்க்க வேண்டும். குழந்தைக்குத் தேவையான சத்துகளை கொண்டிருப்பது தாய்ப்பால்தான்.

 6 மாதம் வரை தாய்ப்பால் தவிர வேறு எதுவும் கொடுக்கக் கூடாது. கிராமப்புறங்களில் பல்வேறு மூட நம்பிக்கைகளின் காரணமாக முதல் பாலை கொடுக்காமல் விடுவதால் போதிய நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைக்குக் கிடைப்பதில்லை. குறை மாதம் மற்றும் எடை குறைந்த குழந்தைகளிடம் போதிய கொழுப்புத்தன்மை இல்லாமல் இருப்பது ஆகிய காரணங்களும் குழந்தைக்கு சிக்கலை உருவாக்கும்’’என்கிறார் அருணா.

தாய்மைக் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து, கர்ப்பவியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் கல்பனாவிடம் கேட்டோம்...‘‘குழந்தையின் எடை இரண்டரை கிலோவுக்குக் கீழ் இருந்தால் எடை குறைவு என்கிறோம். ஒரு கிலோ, ஒன்றரை கிலோ இருப்பது மிகக் குறைந்த எடையாகும். எடை குறைவாக பிறக்கும் குழந்தை முதல் 6 நாட்களுக்குள் சிக்கலான தருணத்தை சந்திக்கிறது. மூச்சுத்திணறல், வெப்பநிலை குறைவது, உப்பு மற்றும் குளுக்கோஸ் அளவு சரிவது, சர்பேடன்ட் எனும் புரத அளவு குறைவது, மூளையில் ரத்தக்கசிவு போன்ற பிரச்னைகள் இந்தக் குழந்தைக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்தக் காலகட்டத்தில் எடை குறைந்த குழந்தைகளை காப்பாற்றி விட்டாலும், இவர்களை வாழ்க்கை முழுவதும் சிறப்புக் கவனம் எடுத்து வளர்க்க வேண்டும். தலை நிற்பது, பேச்சு வருவது, புரிந்து கொள்ளுதல், கற்றல் ஆகியவற்றில் வளர்ச்சிக் குறைபாடுகள் அல்லது வளர்ச்சிப் படிநிலைகளில் தாமதம் ஏற்படலாம்.

வளர்ந்து 30 வயதைத் தாண்டும் காலத்தில் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை, வலிப்பு, புற்று நோய் என பல்வேறு நோய்களும் எளிதில் தாக்கும் வாய்ப்பு உள்ளது. பின்னர் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் என எடை குறைந்த குழந்தைகளின் பிரச்னை தலைமுறை தாண்டியும் பாதிப்புகளை உருவாக்கும். அதனால், கர்ப்ப காலத்தில்கவனம் செலுத்தி இது போன்ற பிரச்னைகளை தவிர்ப்பது நல்லது.

எடை குறைந்த குழந்தை குறை மாதத்தில் பிறந்து விடவே அதிக வாய்ப்புள்ளது.  இது இன்னும் சிக்கலை அதிகரிக்கும். ஏழ்மை நிலை, குறைந்த கல்வி, போதிய விழிப்புணர்வின்மை, தாய்மை அடையும் பெண்ணுக்கு வளர் இளம்பருவத்தில் சத்தான உணவு கிடைக்காமல் போவது, மிக இளம்பருவத்தில் நடக்கும் திருமணங்கள், சுகாதாரமற்ற சுற்றுப்புறம், கர்ப்ப காலத்தில் போதிய சத்துணவின்மை, அளவுக்கு அதிகமாக வேலை பார்ப்பது மற்றும் மன அழுத்தத்துக்கு ஆளாவது, குடும்ப வன்முறையால் பாதிப்புக்கு உள்ளாவது ஆகியவையும் எடை குறைந்த குழந்தை பிறக்க
காரணங்கள்.

பெரும்பாலான பெண்கள் கரு உருவான பின் தாமதமாக மருத்துவரைப் பார்க்க வருகின்றனர். இதனால் ஆரம்ப கட்டத்தில் எடுக்க வேண்டிய ஃபோலிக் ஆசிட் மாத்திரையைத் தவிர்ப்பதும் தடுப்பூசி போடாமல் விடுவதும் குழந்தையை கருவிலேயே பாதிக்கும். மிகச்சிறிய வயதில் தாய்மை அடைவதால் கருப்பையில் குழந்தை வளர்வதற்கு ஏற்ற சூழல் கிடைக்காமல் போகும். நஞ்சுக்கொடி மூலம் குழந்தைக்கு ரத்தம் வருவதில் பாதிப்பு மற்றும் மரபியல் காரணங்களும் எடை குறைந்த குழந்தை பிறக்க காரணம்.

தாய்க்கு ஏற்கனவே இருக்கும் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை, கிட்னி பாதிப்பு, நோய் தாக்குதல் போன்ற காரணங்களும் குழந்தையின் எடையை பாதிக்கிறது. கரு உருவாவதற்கு முன்னரே மகப்பேறு மருத்துவரை அணுகி தகுந்த ஆலோசனைகள் பெற வேண்டும். கரு உருவான பின்னர், தொடர் மருத்துவப் பரிசோதனை, குழந்தையின் வளர்ச்சியை கண்காணித்தல், முறையான சத்துணவு, சத்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதன் மூலம், கருவில் இருந்தே குழந்தையின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தலாம்’’ என்கிறார் கல்பனா. 

எடை குறைவான குழந்தையை ‘கங்காரு குட்டியை வளர்ப்பது போல’ வளர்க்க வேண்டும்...

கரு உருவாவதற்கு முன்னரே மகப்பேறு மருத்துவரை அணுகி தகுந்த ஆலோசனைகள் பெற வேண்டும். கரு உருவான பின்னர், தொடர் மருத்துவப் பரிசோதனை, குழந்தையின் வளர்ச்சியை கண்காணித்தல், முறையான சத்துணவு, சத்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதன் மூலம், கருவில் இருந்தே குழந்தையின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தலாம்.

 ஸ்ரீதேவி
படங்கள்: சங்கர்.சி