நீங்கள் இணையத்தின் அடிமையா?



புதிய போதை

இணையம்... கேட்டதைக் கொடுக்கும் அலாவுதீன் பூதம். மெகா சைஸ் புத்தகங்களைப் புரட்டாமலே, சீனியர்ஜீனியஸ்களிடம் சந்தேகம் கேட்காமலே விரலசைவில் தகவல்சுரங்கத்தைத் திறக்கும் தங்கச் சாவி. அப்படிப்பட்ட சூப்பர் பவர் பூதம் நம் கட்டுப்பாட்டை மீறினால் என்ன ஆகும்?மனிதகுல மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பம், பூமராங் ஆகி அவனையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ‘சயின்ஸ் ஃபிக்ஷன்’ கதைகளைப் படித்திருப்போம்.

அப்படித்தான் இன்று இணையம் தன்னுடைய அடிமையாக மனிதனை மாற்றிக் கொண்டிருக்கிறது. சரி... இதனால், என்ன ஆகிவிடப் போகிறது? ‘‘இணைய அடிமைத்தனம்என்பது தனிப்பட்ட பிரச்னையல்ல. வேறு ஏதோ ஒரு மனநலக் கோளாறின் அடையாளமாகவோ, தீவிரமான பிரச்னையின் வடிகாலாகவோ இருக்கலாம். அதனால், உடனடியாகக் கவனிக்க வேண்டியது அவசியம்’’ என்கிறார் மனநல மருத்துவர் மோகன் வெங்கடாசலபதி.

‘‘தேவைக்கும் அதிகமாக இணையத்தைப் பயன்படுத்துவது, பயன்படுத்தும் உந்துதலைக் கட்டுப்படுத்த முடியாதது, நாளுக்கு நாள் இந்த நேரம் அதிகமாவது, இதனால் குடும்பம், தொழில், மனரீதியாக பாதிப்பு ஏற்படுகிற சூழ்நிலை... இதையே Internet addiction disorder என்று சொல்கிறோம். கடந்த சில ஆண்டுகளாகவே ஆய்வுக்குரிய, வருத்தத்துக்குரிய பிரச்னையாக இணைய அடிமைத்தனம் அதிகரித்து வருகிறது. ‘உலகளாவிய இக்கட்டான சூழல்’ என்று இதை ஆய்வாளர்கள் கவலையோடு கூறுகிறார்கள்.

இணையத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பது,வெளியேற வேண்டும் என்று நினைத்தாலும் முடியாதது, இணைய தொடர்பு கிடைக்காதபோது பதற்றம் ஏற்படுவது,இணையப் பயன்பாட்டில் கட்டுப்பாட்டைப் பின்பற்ற முடியாதது, கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாத நிலை போன்ற அறிகுறிகளின் மூலம் இதைக் கண்டுபிடிக்க முடியும். தன்னம்பிக்கையின்மை, தனிமை, வெறுமை, குற்ற உணர்ச்சி, பயம், கவலை போன்ற வாழ்க்கைப்பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமல், சிலர் அதற்கு நிவாரணமாக இணையத்தைப் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். கடைசியில் அந்தப் பிரச்னைகளும் தீராமல், இணைய அடிமைத்தனமும் கூடுதலாக வந்து சேர்வதுதான் மிச்சம்.

இணையத்தை அதீதமாகப் பயன்படுத்துகிறவர்கள் மனச்சோர்வு, மனப்பதற்றம், அடுத்தவர்களிடம் சரியான முறையில் உறவுகளைப் பராமரிக்க முடியாத குற்ற உணர்ச்சி போன்ற மனநலப் பாதிப்புக்கு ஆளானவர்களாகவே பெரும்பாலும் இருக்கிறார்கள். அதனால்தான், இணையஅடிமைத்தனம் என்பதை ஒரு தனிப்பட்டவிஷயமாகப் பார்க்கக் கூடாது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

நல்ல மனநிலையில்இருக்கிற ஒருவரும் இணையத்தை அதிகமாகப் பயன்படுத்தும்போது, நாளடைவில் மனநலப் பிரச்னைகளில் மாட்டிக் கொள்வது நடைமுறை உண்மை. தூக்கத்தை இழப்பது, தொழில் திறன் குறைவது, வேலைக்குச் செல்லாமல் தவிர்ப்பது, மாணவர்களாக இருந்தால் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் போவது, சமூகத்தில்மரியாதை குறைவது போன்ற பிரச்னைகள் இதனால் உருவாகும்.

சாதாரணமாக ஆரம்பிக்கும் ஒரு தேவையை நாளடைவில் அடிமைத்தனமாக மாற்றுவது மூளையில் இருக்கும் ரிவார்ட் சென்டர்தான்  (ஸிமீஷ்ணீக்ஷீபீ நீமீஸீtமீக்ஷீ). போதைப் பழக்கங்கள்எல்லாமே மூளை சம்பந்தப்பட்டவை என்பதை யோசித்தால் புரியும். இந்த போதைப்பொருட்கள் மூளையில் என்னவெல்லாம்மாற்றங்களை ஏற்படுத்துகிறதோ, அதேவேதியியல் மாற்றங்களைத்தான் இணையமும் மூளையில் ஏற்படுத்துகிறது.

விளையாட்டுகள், சூதாட்டங்கள், பங்குச்சந்தை, நீலப்படங்கள் ஆகியவை பரவலாகக் காணப்படுகிற அடிமைத்தனங்கள். இவற்றில் சமூக வலைத்தளங்கள் இன்னும் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. ‘நிஜவாழ்வில் யாரும் தேவையில்லை’ என்று நினைக்கிற ஒருவர், ஆயிரக்கணக்கான நண்பர்களை முகநூலில் வைத்துக் கொடு அவர்களுடன் நட்பு பாராட்டுவது பொய்யானது மட்டுமல்ல... ஆபத்தானதும் கூட.

 ஒரு புகைப்படமோ, நிலைத்தகவலோபதிந்துவிட்டு, அதற்கு வரும் லைக், கமென்ட்டுகளையே பார்த்துக்கொண்டிருப்பது மனநோயின்அடையாளமே. இணையத்துக்குஅடிமையானவர்களை மீட்பதற்காக மறுவாழ்வு மையங்கள் அமைக்கும் அளவுக்கு சீனாவின் நிலைமைமோசமாகியிருக்கிறது.

கொரியாவிலும் இதே கதைதான் என்பதை அந்த அரசே ஒப்புக் கொண்டுள்ளது. அமெரிக்காவில் இணைய அடிமை மறுவாழ்வு மையங்கள் செயல்படத் தொடங்கிவிட்டன.25 வயது வரைதான் நம் மூளையில் வயரிங் அப் (Wiring up) என்று சொல்லக்கூடிய முதிர்தல் நடக்கிறது. மூளையின் செல்களுக்கிடையில் எந்த அளவுக்கு இணைப்பு ஏற்பட்டு வளர்ச்சியடைகிறதோ, அந்த அளவு நாம் புத்திசாலியாகவும், முக்கிய முடிவுகள் எடுப்பதில்பக்குவமானவர்களாகவும் உருவாவோம்.

 ஆனால், இணையத்தின் உபயத்தால்குழந்தைப் பருவத்திலேயே எல்லாதகவல்களையும் இன்று தெரிந்து கொண்டாலும் மூளைத்திறன் குறைவாக இருப்பது அப்பட்டமான உண்மை. இந்தப் பாதிப்புக்கு 17 முதல் 20 வயது வரை உள்ளவர்கள் ஆளாகிறார்கள் என்பதால், பதின் பருவத்தில் இருப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

சில பிரச்னைகளை நாமே புரிந்துகொண்டு, சரி செய்து கொள்வது மனநல சிகிச்சையில் ஒருவகை. சிலருக்கு மனநல ஆலோசனை, சிகிச்சை தேவையிருக்கும். பாதிக்கப்பட்டவரின் எண்ணங்களையும் நடத்தைகளையும் மாற்றி இந்தப் பழக்கத்தில் இருந்து வெளிக்கொண்டு வருவது இதில் ஒரு முறை. தொழில்ரீதியாக, தனிப்பட்ட தேவையின் அடிப்படையில் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்தமுயற்சிப்பது இன்னொரு வழி. இந்த இணையதளங்களைத்தான் பார்க்க வேண்டும், இத்தனை மணி நேரம்தான்அனுமதி போன்ற கட்டுப்பாடுகளைநம் கம்ப்யூட்டருக்கு கொடுக்கும் மென்பொருட்களைப் பயன்படுத்துவதும் பலன் தரும்!’’

நீங்கள் இணையதள அடிமையா?

கிம்பர்லி யங் என்ற மருத்துவர் இந்தப் பரிசோதனை முறையை வடிவமைத்திருக்கிறார்.

முதலில் சில கேள்விகள்...

1. தேவைக்கும் அதிகமாக இணையத்தைப் பயன்படுத்துகிறீர்களா?
2. துணையுடன் இருப்பதைவிட இணையம் அதிக மகிழ்ச்சியைத் தருகிறதா?
3. வீட்டு வேலைகளைஎல்லாம் தள்ளிவைத்துவிட்டு இணையத்தில் உலவுகிறீர்களா?
4. தொழிலோ, படிப்போ... இணையத்தில் அதிக நேரம் செலவழிப்பதால் பாதிக்கப்படுகிறதா?
5. இணையம் மூலமாக புதிய உறவுகள் அதிகமாகிறதா?
6. அதிக நேரம் இணையத்தில் இருப்பதாக உங்களைக் குற்றம் சாட்டுகிறார்களா?
7. உங்களது இணையப் பயன்பாடு பற்றி பகிரங்கமாகப் பேசாமல் ரகசியம் காக்கிறீர்களா?
8. இணையத்தால் உங்களது செயல்திறன் குறைந்துவிட்டதாக உணர்கிறீர்களா?
9. முக்கியமான பிற வேலைகளை விட்டுவிட்டும் இணையத்தைப் பயன்படுத்து கிறீர்களா?
10. இணையத்தைப் பயன்படுத்தும்போது யாரேனும்இடையூறு செய்தால் கோபம் வருகிறதா?
11. எப்போது ஆன்லைனுக்கு செல்வோம் என்று நினைக் கிறீர்களா?
12. வாழ்க்கையின் முக்கிய விஷயங்களை மனம் யோசிக்கும் நேரத்தில் அந்த சிந்தனைகளைத் தடை செய்துவிட்டு மீண்டும் இணையத்துக்குள் மூழ்குகிறீர்களா?
13. இணையம் இல்லாத ஒருநாளை வெறுமையாக உணர்கிறீர்களா?
14. இன்னும் கொஞ்ச நேரம்தான் என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்கிறீர்களா?
15. வேறு வேலைகளில் இருக்கும்போதும் இணையத்துக்கு எப்போது போவோம் என்று ஏக்கம் வருகிறதா?
16. நீண்ட நேரம் இணையம் பயன்படுத்துவதால் தூக்கத்தை இழக்கிறீர்களா?
17. இணையம் பயன்படுத்தும் நேரத்தை மறைக்க விரும்புகிறீர்களா?
18. வெளியே செல்லும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு இணையத்திலேயே இருக்க விரும்புகிறீர்களா?
19. இணையப் பயன்பாட்டைக் குறைக்க முயற்சித்தும் முடியவில்லையா?
20. சாதாரணமாக நிம்மதியிழந்து இருக்கும் நீங்கள் இணையத்துக்கு வந்தவுடன் உற்சாகமாக உணர்கிறீர்களா?

இக்கேள்விகளுக்குப் பின்வரும் 5 பதில்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து மதிப்பெண்களைக் குறித்துக் கொள்ளுங்கள். உங்களது மொத்த மதிப்பெண்களுக்கான முடிவு கடைசியில்...
அரிதாக - 1
எப்போதாவது - 2
அவ்வப்போது - 3
மிகப் பெரும்பாலான
நேரங்களில் - 4
எப்போதும் - 5
முடிவுகள்: 20 முதல் 49 வரை
உங்களது இணையப் பயன்பாடு இயல்பான அளவில்தான் உள்ளது. சற்று அதிக நேரம் இணையத்தில் இருப்பது போல தோன்றினாலும் கட்டுப்
படுத்திக் கொள்ளும் சக்தி
உங்களுக்கு உண்டு.
50 முதல் 79 வரை
இணையத்தினால் அடிக்கடி பிரச்னைக்கு ஆளாகிறீர்கள். உங்களை நீங்களே மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது... உஷார்!
80 முதல் 100 வரை
இணையத்துக்கு நீங்கள் முழுமையாக அடிமையாகிவிட்டீர்கள். கணிசமான அளவு சேதாரம் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய தருணம் இது!

போதைப் பொருட்கள் மூளையில் என்னவெல்லாம் மாற்றங்களை ஏற்படுத்துகிறதோ, அதே வேதியியல் மாற்றங்களைத்தான் இணையமும் மூளையில் ஏற்படுத்துகிறது.

- ஞானதேசிகன்