மருந்து விலை குறையுமா?



செய்திகள் வாசிப்பது டாக்டர்

மக்களிடையே அதிக அளவில் பயன்படுத்தப்படும் உயிர் காக்கும் மருந்துகளில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அரசு நிர்ணயித்த விலை சிவப்புநிற எழுத்துகளில் குறிக்கப்படும். அரசு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிகமாக விற்கும் மருந்துக் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மருந்துகள் விலை நிர்ணய அமைப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, நெஞ்சு வலி உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படி குறிப்பிட்ட மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், உயிர் காக்கும் மருந்துகளின் விலையை தனியார் மருந்து கம்பெனிகள் மாதந்தோறும் உயர்த்தி வருகின்றனர். அரசு குறிப்பிடும் உயிர் காக்கும் மருந்துகள் வேறு பெயர்களில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.இதைத் தடுக்கும் பொருட்டு, சமீபத்தில் தேசிய மருந்துகள் விலை நிர்ணய அமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில், மக்களின் உயிர் காக்கும் 100 மருந்துகளின் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக, மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோகம் மற்றும் சுகாதார அமைச்சகத்துடன் தேசிய மருந்துகள் விலை நிர்ணய அமைப்பு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.அவர்களது அனுமதி விரைவில் கிடைத்தவுடன், வரும் ஜனவரி முதல் அரசு நிர்ணயிக்கும் 100 உயிர் காக்கும் மருந்துகளின் விலையை சிவப்பு நிற மையில் குறிக்கப்படும். அதன் மேல் கறுப்பு நிற எழுத்தில் அரசு விலை கட்டுப்பாட்டு மருந்து என்று குறிக்கப்படும்.

இந்த விலையை விட அதிக விலைக்கு விற்கும் மருந்துக் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி விற்பவர்கள் குறித்து பொதுமக்கள் 1800 111 255 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம் என்று தேசிய மருந்துகள் நிர்ணய அமைப்பு (ஷ்ஷ்ஷ்.ஸீஜீஜீணீவீஸீபீவீணீ.ஸீவீநீ.வீஸீ) அறிவித்துள்ளது. மக்களின் உயிர் காக்கும்100 மருந்துகளின் விலை இனி கட்டுக்குள் வரும்!

- ஸ்ரீதர்