கமலின் கொள்கை என்ன?



சுகர் ஸ்மார்ட்

நீரிழிவு எனக்கு
ஒழுக்கத்தைக் கற்பித்தது!
சோனியா சோட்டோமேயர்
அமெரிக்க  சுப்ரீம்
கோர்ட் நீதிபதி

1. இனிப்பானவர்களே... இனியவர்களே!

‘உத்தம வில்லன்’ கமல்ஹாசன் எந்த நாட்டில் எந்தப் படப்பிடிப்பில் இருந்தாலும், அவரது காலை உணவு மட்டும் மாறுவதே இல்லை. 3 முட்டைகள் மற்றும் நீரிழிவுக்கான மாத்திரைகள்!கமலின் நீரிழிவு அறியப்பட்ட போது, ‘இதை நிச்சயமாக என்னால் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்’ என்று நம்பிக்கை கொண்டார்.

அதற்கேற்பவே தன் செயல்பாடு களையும் அமைத்துக் கொண்டார். கமலின் அம்மாவுக்கு இருந்த தீவிரமான நீரிழிவும் அவருக்கு ஒரு படிப்பினையாக அமைந்தது. அம்மாவின் நீரிழிவு நினைவுகளைக் கூட, அவருடைய போராட்டத்துக்கு உதவும் வகையில் ‘பாசிட்டிவ்’ ஆகவே எடுத்துக் கொண்டார்.

‘வரும் முன் காப்போம்’ என்பதே கமலின் உடல்நலக் கொள்கை. தொடர்ச்சியான மருத்துவ சோதனைகளும் மருத்துவரின் ஆலோசனைகளும் அவரது உடல்நலத்துக்கு ஊக்கம் அளிக்கின்றன.

‘‘உங்களுக்கு நீரிழிவு வரும் வாய்ப்பிருந்தால், தடுப்பு நடவடிக்கைகளை விடாமல் தொடர வேண்டும். இது உங்களுக்கு மட்டுமல்ல... உங்கள் குடும்பத்துக்கே மிக முக்கியம். சிறுநீரகச் செயல் இழப்பு, இதய நோய்கள் போன்ற சிக்கல்களும் நீரிழிவோடு சேர்ந்து வரும் என்பதால், இது மிகமிக அவசியம்’’ என்கிறார் கமல்.நீரிழிவைக் கண்டு மிரண்டுவிடாத கமல், இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் www.sugarbp.org என்ற இணையதளத்துக்கும் ஆதரவு அளிக்கிறார்.

‘பெற்றால்தான் பிள்ளையா டிரஸ்ட்’ வாயிலாக, ஹெச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளான குழந்தைகளின் சிகிச்சை மற்றும் மறுவாழ்வுப் பணிகளில் பங்கெடுத்து வருகிறார்.நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், கவிஞர், பாடகர், டான்ஸர் என பன்முகத் தன்மை கொண்ட இந்த 60 வயது கலைஞன், தன் உடலைப் பேணிக் காப்பதில் காட்டும் அக்கறை, நம் ஒவ்வொருவருக்குமே உற்சாகம் அளிக்கக்கூடியது!

இவையெல்லாம் நோ!

*சர்க்கரை
*இனிப்பு வகைகள்
*தேன்
*ஜாம்
*ஜெல்லி
*கேக், பேஸ்ட்ரி வகைகள்
*பீட்சா
*பாட்டில் பானங்கள், ஜூஸ் வகைகள்
*இனிப்பு சேர்க்கப்பட்ட யோகர்ட்.

ஸ்வீட் டேட்டா

துரித நடை, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், நடனம்....
இப்படி தினம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது கூட, டைப் 2 நீரிழிவு ஏற்படும் அபாயத்தை 40 சதவிகிதம் குறைக்கும்!

எப்போதும் கடைப்பிடிக்க 8 விஷயங்கள்!

1.கொழுப்பு மற்றும் ரத்த சர்க்கரை அளவை எப்போதும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

2.ஒவ்வொரு 3-4 மணி நேரத்துக்கு ஒருமுறை என, உணவைப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

3.மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத பட்சத்தில், ஒரு வாரத்தில் 215 மி.லி. மது அல்லது இரண்டரை பாட்டில் பியருக்கு மேல் அருந்தக்கூடாது. கவனிக்கவும்... இது ஒரு நாளுக்கு அல்ல... ஒரு வாரத்துக்கு!

4.நார்ச்சத்து மிகுந்த உணவு களை நிறைய சேர்த்துக்கொள்ளுங்கள்.

5.முழுதானிய உணவுகளையே தேர்ந்தெடுங்கள்... பதப்படுத்தப்பட்ட, ரீஃபைன் செய்யப்பட்ட உணவு களை தவிர்த்து விடுங்கள்.

6. கொழுப்பு குறைவான புரத உணவுகள் நல்லது. பால் மற்றும் தயிர், பனீர் போன்ற பால் பொருட்களில் கொழுப்பு நீக்கப்பட்டிருத்தல் அவசியம். எண்ணெயில் குளிக்கும் உணவுகளை தொலைவிலிருந்து பார்க்க மட்டும் செய்யலாம்.

7.வாரத்துக்கு குறைந்தபட்சம் 3-5 மணி நேரமாவது உடற்பயிற்சி மிக அவசியம். ரெசிஸ்டென்ஸ் எக்சர்சைஸ், ஏரோபிக்ஸ் எக்சர்சைஸ் எனக் கலந்து செய்யலாம். ‘ரெசிஸ்டென்ஸ் எக்சர்சைஸ்’ என்பது உடற்பயிற்சி செய்வதற்குத் தடை போடுவது அல்ல! இப்பயிற்சிகளை உரிய நிபுணர்களிடம் பயிற்சி பெற்றே செய்ய வேண்டும்.

8. ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த சோயா பீன், வால்நட், ஃபிளாக்ஸ்ஸீட் என்கிற ஆளிவிதை, பச்சை இலைக் காய்கறிகள், வெந்தயம், ஸ்பைருலினா என்கிற நீலப்பச்சைப்பாசி ஆகியவை உணவில் இருக் கட்டும். அசைவர்களுக்கு மீன்! 

இவையெல்லாம் ஓ.கே!


*பச்சைக் காய்கறிகள், கீரை, வெந்தயம்...
*மாவுச்சத்து குறைவாக உள்ள வெண்டைக்காய், பாகற்காய், சமையல் வெள்ளரி, பீர்க்கங்காய், கத்தரிக்காய், பீன்ஸ்...
*வெள்ளரி, தக்காளி, கேரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், லெட்டூஸ் கீரை, செலரி கீரை போன்றவை அடங்கிய சாலட்...
*காபி / டீ (சர்க்கரை இல்லாமல்)...

2. சில எண்ணங்கள்...சில உண்மைகள்!


*கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து நிறைந்த உணவுகளை நீரிழிவுக்காரர்கள் அறவே தவிர்க்க வேண்டும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. இதில் என்ன வகையான கார்போஹைட்ரேட் என்பதுதான் முக்கியம். காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் வகை உணவுகளைச் சாப்பிடுவதில் தவறில்லை. முழு தானிய பிரெட், மாவுச்சத்து கொண்ட காய்கறிகள், பீன்ஸ், சிறுதானியங்கள் போன்றவை இவ்வகையே.

இவற்றில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுச்சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.மைதா போன்ற ‘ரீஃபைண்டு’ மாவுகள், நூடுல்ஸ், பாஸ்தா போன்ற உணவுகள், சர்க்கரை உணவுகள் ஆகியவை கலோரி அளித்தாலும், குறிப்பிடத்தக்க சத்து எதையும் கொண்டிருக்கவில்லை. இதுபோன்ற உணவுகள் ‘சிம்பிள் கார்போஹைட்ரேட்’ வகையைச் சேர்ந்தவை.

*பிரவுன் அரிசி அல்லது சிறுதானியங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என சிலர் நினைக்கின்றனர். இவற்றிலும் கார்போஹைட்ரேட் உண்டு என்பதால், அளவு  எப்போதும் முக்கியம். அதிகமாகச் சாப்பிட்டால், ரத்த சர்க்கரை அளவும் கூடும்.

*‘நீரிழிவுக்கான மாத்திரைகள் சாப்பிடுவதால், உணவுக்கட்டுப்பாடு அவசியம் இல்லை’ என சிலர் கருதுகின்றனர். மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் கூட, சமச்சீர் உணவும், முறையான உடற்பயிற்சியும் இருந்தால்தான், ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். வெறும் மாத்திரையால் மட்டுமே நீரிழிவைக் கட்டுப்படுத்த முடியாது.