தேவை கொஞ்சம் அன்பு!



சேவை

டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் தினம் சிறப்புக் கட்டுரை

‘ஹெச்.ஐ.வி. பாதித்த மனிதர்கள் அபாயகரமானவர்கள் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களின் கைகளைக் குலுக்கலாம்... ஓர் அன்பான அணைப்பைத் தரலாம். அது அவர்களுக்கு எந்த அளவுக்கு அவசியம் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்’.

 - இளவரசி டயானாவே இப்படிச் சொல்லிவிட்டுச் சென்றிருந்தாலும், இந்த உண்மைக்குக் காது கொடுப்பவர்கள் நம்மில் வெகு குறைவு. எய்ட்ஸ் நோயாளிகளும் ஹெச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளானவர்களும் சமூகத்தில் மற்றவர்களால் புறக்கணிக்கப்படுபவர்களாகத்தான் இன்றைய தேதி வரை இருக்கிறார்கள்.

அவர்களில் ஒருவர் கௌசல்யா. ஹெச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், தன்னைப் போல பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுகிற கௌசல்யா தொடங்கிய அமைப்பு தான் ‘பாசிட்டிவ் வுமென் நெட்வொர்க்’. ஆண்டுகள் பல கடந்த நிலையிலும் ஹெச்.ஐ.வி. தன்னை பாதித்த வலி மிகுந்த கதையை மெல்லிய குரலில் விவரிக்கிறார் கௌசல்யா... ‘‘பிளஸ் டூ முடிச்சிட்டு வீட்ல இருந்தேன். சொந்த கிராமம் நாமக்கல் போடிநாயக்கன்பட்டி... வளர்ந்ததெல்லாம் நாமக்கல். அம்மா 2 வயசுலயே இறந்துட்டாங்க. அப்பா ரெண்டாவது கல்யாணம் செஞ்சுகிட்டார்.

அதனால பாட்டி வீட்டுல வளர்ந்தேன். ஒரு அக்கா, அண்ணன்... அக்காவுக்கு கல்யாணம் ஆகி, ஒரு பையன். அக்கா இப்போ உயிரோட இல்லை. நீரிழிவுப் பிரச்னை இருந்துச்சு. அது தீவிரமாகி ஹார்ட் ப்ராப்ளம் வந்து, பிரெயின்ல கட்டி வந்து இறந்துட்டாங்க...’’ - சற்று நேர அமைதிக்குப் பின் தொடர்கிறார்...

‘‘பிளஸ் டூ முடிச்சிட்டு வீட்ல இருந்தப்பவே எனக்கு கல்யாணம் பண்ணிட்டாங்க. கணவருக்கு தொட்டிரெட்டிபட்டின்னு ஒரு கிராமம். லாரி ஓட்டுவார். விவசாயத்துல ஒத்தாசையா இருப்பார்.

அவருக்கு ஏற்கனவே ஹெச்.ஐ.வி. இருந்திருக்கு. அது அவங்க வீட்ல இருக்கறவங்களுக்கும் தெரியும். மறைச்சு கல்யாணம் பண்ணிட்டாங்க. 1995 மார்ச்ல எனக்கு கல்யாணம்... அப்புறம் அவர் மூலம் எனக்கும் ஹெச்.ஐ.வி. பாதிச்சுச்சு. ஏதோ ஒரு காரணத்துக்காக டெஸ்ட் பண்ணினப்பதான் அது தெரிஞ்சுது.கல்யாணத்துக்கு 10 நாளுக்கு முன்னாடி என் கணவரை ஒரு டாக்டர் டெஸ்ட் பண்ணியிருக்கார்...

ஹெச்.ஐ.வி. இருக்கறது தெரிஞ்சிருக்கு. அந்த டாக்டர்தான் என் கணவருக்கு ஹெச்.ஐ.வி. இருக்கறதை ஒரு மீட்டிங்ல என்கிட்ட சொன்னார். ‘இப்படி ஒரு கொடுமையான உண்மையை மறைச்சு கல்யாணம் பண்ணிட்டாங்களே’ங்கிற ஆதங்கத்துல, நான் அந்த வீட்டை விட்டு வெளியேறிட்டேன். அதுக்கப்புறம் கணவர் வீட்டுக்கும் எனக்கும் தொடர்பு இல்லாம போயிடுச்சு.

கல்யாணம் முடிஞ்சு, சரியா ஏழாவது மாசம் என் கணவர் தற்கொலை செஞ்சுகிட்டார். அந்தத் தகவலைக் கூட என் மாமனார் வீட்ல இருந்து யாரும் சொல்லலை. ‘விஷம் குடிச்சி செத்துப் போயிட்டாரு’ன்னு யாரோ மூணாவது மனுஷர் சொல்லித்தான் நான் தெரிஞ்சுகிட்டேன். என் கணவர் ஹெச்.ஐ.வி.க்கான மருந்தை முறையா எடுத்துக்கலை. யாரோ ஒரு போலி மருத்துவர்கிட்ட மருந்து வாங்கி சாப்பிட்டிருக்கார். அதுக்கு ஒவ்வொரு முறையும் ஐயாயிரம், பத்தாயிரம் ரூபாய்னு பணம் வேற குடுத்திருக்கார்.

வீட்ல குடுத்த பிரஷர் தாங்காம தான் தற்கொலை வரை போயிருக்கார். கணவரோட மரணத்துல சந்தேகம் இருக்குன்னு நான் போலீஸ்ல கம்ப்ளெயின்ட் குடுத்தேன். ஆனா, அந்த கேஸை என் மாமனார் வீட்ல ஒண்ணும் இல்லாம ஆக்கிட்டாங்க. இடையில என் மாமனார் ஒரு ஆக்சிடென்ட்ல இறந்து போனார். அந்தக் குடும்பத்துக்கு முறையான வாரிசு நான்தான்கிற சர்டிஃபிகேட், அவரோட டெத் சர்டிஃபிகேட் எல்லாம் வாங்கினேன். ஆனா, ஒண்ணும் நடக்கலை.

என் மாமனார் உயில் எழுதி வச்சிட்டுப் போயிருக்கறதா சொன்னாங்க. எனக்கு அந்தச் சொத்து பெருசில்லை. அதை வச்சு ஹெச்.ஐ.வி. பாதிப்படைஞ்ச பெண்களுக்கு ஏதாவது உபயோகமா செய்யணும்னு நினைச்சேன். கேஸ் நடத்தறது சாதாரண விஷயமில்லை... வக்கீல் மூலமா நோட்டீஸ் அனுப்பணும்... வழக்கு நடத்தணும்... தீர்ப்பு வர வருஷக் கணக்கா ஆகும். அப்படியே நடத்தினாலும், நான் இறந்து போனதுக்கு அப்புறம் கூட நீதி கிடைக்குமான்னு தெரியலை.

என்னை மாதிரி எத்தனையோ பாதிக்கப்பட்ட பெண்கள் இருக்காங்க. எனக்குத் தெரிஞ்சு ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட பொண்ணு ஒண்ணு இதே மாதிரி வழக்குப் போட்டுச்சு. அந்தப் பொண்ணுக்கு தீர்ப்பும் சாதகமாத்தான் வந்தது. ஆனா, யார் அந்தப் பொண்ணுக்கான உரிமைகளையும் சொத்தையும் புகுந்த வீட்ல போய் மீட்கறது? தீர்ப்பு வர்றதுக்கு அஞ்சாறு வருஷங்களுக்கு முன்னாலயே, அந்தப் பொண்ணு இறந்துட்டா...

ஹெச்.ஐ.வி. பாதிப்போட ஒரு பெண் வாழ்க்கையை எதிர்கொள்றது பெரிய சவால். இந்த மாதிரி பெண்களுக்காகத்தான், நான், வரலட்சுமி, ஹேமா, ஜோன்ஸுனு நாலு பேரும் சேர்ந்து ‘பாசிட்டிவ் வுமென் நெட்வொர்க்’ ஆரம்பிச்சோம். ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட ஒரு பொண்ணோட நிலைமையை யோசிச்சுப் பாருங்க...

ஆதரவற்ற தனிமை... பிறக்கிற குழந்தை ஹெச்.ஐ.வி. பாசிட்டிவா பிறந்தாலும் நெகட்டிவா பிறந்தாலும் பிரச்னை! பெண் குழந்தைன்னா கண்டுக்க மாட்டாங்க... ஆண் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. இல்லைன்னா தூக்கிட்டுப் போயிடுவாங்க. இந்த மாதிரி பாதிப்புக்கு ஆளான பெண்கள் அனாதை இல்லங்கள்லயோ, ஏதாவது ஆசிரமத்துலயோதான் இருந்தாகணும்.

வாடகைக்கு வீடு கிடைக்காது. கெடைச்சாலும் அநியாய வாடகை. அரசாங்கம் விதவை பென்ஷன்னு ஆயிரம் ரூபாய் குடுக்குது... அதுவும் 38-40 வயசுக்கு இடைப்பட்ட பெண்களுக்குத்தான். ஹெச்.ஐ.வி.க்கு மருந்து எடுத்துக்கறாங்கன்னா அதுக்கு ஆயிரம் ரூபாய் குடுப்பாங்க. இதை வச்சுக்கிட்டு வாழ முடியுமா?

2002ல தமிழக அரசு ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்யறதுக்காக ஒரு குழுவை அமைக்கணும்னு ஒரு ஆணை கொண்டு வந்தது. அது வெறும் எழுத்தளவுலதான் இருக்கு. இன்னும் செயல்படுத்தப்படலை. அந்த மாதிரி ஒரு குழு இருந்தா, ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட பெண்களை சின்னச் சின்ன குழுக்களா இணைச்சு, தொழில் பயிற்சி கொடுக்க முடியும். அதன் மூலமா அவங்களோட வருமானத்தைப் பெருக்க முடியும். பேங்க்ல தொழில் தொடங்க கடன் வாங்கித் தர முடியும். அதுக்காகத்தான் நாங்க குரல் கொடுத்துகிட்டு இருக்கோம்.

சென்னைல ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட பெண் ரேஷன் கார்டு வாங்கறதே கஷ்டம். மாவட்டங்கள்ல கொஞ்சம் சிரமப்பட்டாவது வாங்கிடலாம். ‘கை கால்லாம் நல்லாத்தானே இருக்கு? உனக்கு எதுக்கு பென்ஷன்’னு ஈசியா கேட்டுடுவாங்க. அந்த மாதிரி பாதிக்கப்படுற பெண்களுக்கெல்லாம் எங்க அமைப்பு மூலமா வழி காட்டுறோம். ஒரு பெண்ணுக்கு பிரசவம்னா யாராவது தன்னார்வலரை வச்சு உதவி செய்யறோம்.

பிரசவத்துக்கு அப்புறம் அந்தப் பெண்ணுக்கும் குழந்தைக்கும் மருந்து குடுக்கறது, சிகிச்சைக்கு உதவறதுன்னு எங்களால முடிஞ்ச உதவியைச் செய்யறோம். பிறந்த குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. இருந்தா அதை வளர்க்க, படிப்புக்கு உதவ, பண்டிகை நாட்கள்ல பரிசுப் பொருட்கள் வழங்க யாராவது எம்.எல்.ஏ., எம்.பி.க்களோட உதவியை பெற்று செஞ்சு குடுக்கறோம். தெரிந்த நிறுவனங்கள்ல ஏதாவது வேலை வாங்கிக் குடுக்கறோம்.

ஹெச்.ஐ.வி. பாதிப்போட வர்ற பெண்களுக்கு நாங்க முதல்ல கொடுக்கறது கவுன்சலிங். அவங்களுக்கு டி.பி. இருக்கான்னு பார்ப்போம். டி.பி. இருக்கறவங்கள்ல சில பேருக்கு மூளையிலயும் பாதிப்பு இருக்கும்.

சி.டி. ஸ்கேன் செஞ்சு பார்த்தாதான் அது தெரியும். அதுக்கு 2,500 ரூபாய் செலவாகும். அதை இலவசமா செய்யறதுக்கும் வழி இருக்கு. அதுக்கான டாக்டர்கிட்ட அவங்களை அனுப்பி வைப்போம்.

ஹெச்.ஐ.வி. பாசிட்டிவ் இருக்கற ஆணும் பெண்ணும் கல்யாணம் பண்ணிக்க விரும்புவாங்க. அப்படிப்பட்ட ஆணையும் பெண்ணையும் பத்தின முழுத் தகவல்களையும் சேகரிச்சு சரி பார்ப்போம். எப்போல்லாம் அவங்க மருத்துவ பரிசோதனைக்குப் போகணும்... வாழ்க்கையை எப்படி நடத்தணும்... ஒருத்தருக்கொருத்தர் எப்படி உதவியா இருக்கணும்னு கவுன்சலிங் கொடுப்போம்...’’ சாதாரணமாகச் சொன்னாலும் கௌசல்யா, அவரைப் போன்ற பெண்களுக்குச் செய்வது மகத்தான சேவை.

இவருடைய ‘பாசிட்டிவ் வுமென் நெட்வொர்க்’ அமைப்பு 13 மாநிலங்களில், 83 மாவட்டங்களில் பரந்து விரிந்திருக்கிறது. அவற்றில் இருக்கும் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 30 ஆயிரம். இந்த அமைப்பை ஆரம்பித்தவர்களில் ஜோன்ஸ் இப்போது உயிரோடு இல்லை,  ஹேமா தன்னுடன் செயல்படுவதில்லை என்கிற வருத்தம் அவர் வார்த்தைகளில் தெரிகிறது.

கௌசல்யா கடைசியாக இப்படிக் கூறுகிறார்... ‘‘எந்த சுகாதாரத் திட்டமாக இருந்தாலும், அதில் முதலில் ஒதுக்கப்படுபவர்கள் பெண்கள்தான்.

கடைசியாகத்தான் அவங்க மேல திட்டத்தின் பார்வை விழுது. சத்தீஸ்கர் கருத்தடை சிகிச்சை முகாம்ல 13 பெண்கள் இறந்து போனாங்களே... எப்படி? கருத்தடை ஆண்களுக்கு எளிதானது. பெண்களுக்கு கடினமானது. அந்த சிகிச்சையை ஆண்கள் செஞ்சுகிட்டிருந்தாங்கன்னா, இந்த மரணங்களைத் தவிர்த்திருக்கலாம். இல்லையா?’’ ‘‘ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட ஒரு பொண்ணோட நிலைமையை யோசிச்சுப் பாருங்க... ஆதரவற்ற தனிமை... பிறக்கிற குழந்தை ஹெச்.ஐ.வி. பாசிட்டிவா பிறந்தாலும், நெகட்டிவா பிறந்தாலும் பிரச்னை!’’

மேகலா
படம்: ஆர்.கோபால்