கலகல கபுள் தெரபி!



கொஞ்சம் அறிவியல்... நிறைய ஆச்சரியம்!

Power nap என்ற குட்டித் தூக்கம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். Catnap என்ற பூனைத்தூக்கம் பற்றித் தெரியுமா? வேலை நேரத்துக்கிடையே 5 அல்லது 10 நிமிடங்கள் எடுப்பதுதான் Catnap. நினைவாற்றலையும் கற்றல்திறனையும் பூனைத்தூக்கம் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் நேரத்தில் இதை முயற்சிக்கலாம்.

தகவல் தொடர்பு என்பது வார்த்தைகள் மட்டுமே அல்ல. அதில் மொழியின் பங்கு 30 சதவிகிதம் மட்டுமே. மீதி 70 சதவிகிதத்தை உங்களின் உடல் மொழியும், என்ன மாதிரியான உச்சரிப்பில் சொல்கிறீர்கள் என்பதுமே தீர்மானிக்கிறது.

போதைப் பழக்கத்துக்கும் பொருளா தாரத்துக்கும் தொடர்பு உண்டு. ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், கவலை காரணமாக அவர்களின் மரபணுவிலேயே நிறைய மாற்றம் ஏற்பட்டுவிடுகிறது.

இதன் காரணமாக அவர்களது குழந்தைகள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் வாய்ப்பு அதிகம். சத்தம் நிறைந்த சூழலில் வளர்கிற குழந்தைகளுக்கு வன்முறை உணர்வுகள் எளிதாக வரலாம்.கழிவறை சென்றுவிட்டு வந்தால் கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும் என்பது புரிந்த பலருக்கும், குழந்தைகளுக்கு டயாபர் மாற்றினால் சோப்பு  போட்டுக் கை கழுவ வேண்டும் என்பது புரிவதில்லை என்று ஆதங்கப்படுகிறார்கள் மருத்துவர்கள்.

மனைவிக்காக பியர் அடிப்பதை விடுவது, கணவருக்காக எடையைக் குறைக்க முயற்சி செய்வது என்று அன்றாடம் நாம் பார்க்கிற விஷயங்களுக்கு எல்லாம் பெயர் ஒன்று இருக்கிறது. அது Couple Therapy!ஒருவரின் நடவடிக்கைகளை ஆரோக்கியமாக மாற்றுவதில் அவரது லைஃப் பார்ட்னர் பெரிய பங்கு வகிக்கிறார் என்பதற்காகவே இந்தப் பெயர்.

இந்த Couple therapyல் இன்னொரு சிறப்பம்சமும் உண்டு. நடைப்பயிற்சி, யோகாசனம் போன்றவற்றில் தம்பதியர் இணைந்து செயல்படும்போது பலன் அதிகம் கிடைக்கிறதாம்.நம் உடலுக்குள் ரத்தம் ஓடிக்கொண்டே இருப்பது தெரியும். இந்த ஓட்டத்தை ஒருநாளில் 96 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் என்று வரையறுத்திருக்கிறார்கள்.

ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் Multi Tasking என்ற திறனை அறிவியல் உலகம் நம்ப மறுக்கிறது. காரணம், ஒரு நேரத்தில் ஒரு வேலையின் மீது கவனம் செலுத்தும் அளவுதான் மூளையின் வடிவமைப்பு இருக்கிறது. பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்வதாகச் சொல்கிறவர்கள் ஞாபக மறதியில் நம்பர் 1 ஆக இருக்கிறார்களாம்.

‘தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டியதில்லை’ என்ற நம்பிக்கையையும் இன்னோர் ஆய்வு மறுத்திருக்கிறது. 8 ஆயிரத்து 400 பேரிடம் Jama Internal Medicine என்ற இதழ் நடத்திய இந்த ஆய்வின் மூலம், ஆப்பிள் சாப்பிடுகிறவர்களுக்கும் சாப்பிடாதவர்களுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என்று கூறி இருக்கிறது.

‘தான் இளமையோடு இருப்பதாக நம்பும் ஒருவர் பெரும்பாலும் ஆரோக்கியமானவராகவே இருக்கிறார்’ என்பதைத் தங்கள் அனுபவத்தில் உணர்ந்ததாக  பல மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள். சமூக ரீதியாக நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதும் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

எல்லோருடனும் சுமுகமாகப் போகிறீர்களா? சண்டைக்கோழியா? உம்மணாமூஞ்சியா? இதுவும் உடல்நலத்தைத் தீர்மானிக்கிறதாம்.தூக்கத்தைக் கெடுக்கும் காரணிகளை Slumb Stealers என்று குறிப்பிடுகிறார்கள் விஞ்ஞானிகள். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, காரம் நிறைந்த உணவுகள் போன்றவையும் இந்த Slumb Stealers பட்டியலில் அடங்கும்.

என்னதான் சுத்தமான பேர்வழிகள் என்று சொல்லிக் கொண்டாலும் பாதப் பராமரிப்பில் பலரும் பின் தங்கியவர்களே. குறிப்பாக, ஷூ அணியும் பழக்கம் உள்ளவர்கள் அடிக்கடி வெதுவெதுப்பான தண்ணீரால் சோப்பு கொண்டு பாதங்களைக் கழுவி சுகாதாரமாக வைத்துக் கொள்வது நல்லது. விரல்களுக்கு இடையில் இன்னும் கொஞ்சம் கவனம் தேவை.

தொகுப்பு: எஸ்.கே.பார்த்தசாரதி