கலக்காதீங்க... கலக்காதீங்க!



சுத்தம் என்பது நமக்கு...

வீட்டைச் சுத்தம் செய்வது மிகக் கடினமானது, எரிச்சல் தரும் வேலையும்கூட. இதற்காக ஏகப்பட்ட கிளீனிங் பொருட்கள், கிருமிநாசினிகள் மார்க்கெட்டில் கிடைத்தாலும், ‘சில பொருட்களை ஒன்றோடொன்று கலந்து உபயோகித்தால் இன்னும் ஈஸியா வேலை முடியுமே’ என வித்தியாசமான முயற்சிகளில் நாம் இறங்குவது உண்டு. ஆனால்...

“சாதாரணமாக பிளீச்சிங் பவுடர், பினாயில்,  தரையை சுத்தம் செய்யும் மற்ற பொருட்களை உபயோகிப்பதால் ஆபத்தில்லை. ஆனால், தவறான வேதிப்பொருட்களை ஒன்றோடொன்று கலந்து பயன்படுத்தினால் அது உயிருக்கே கூட ஆபத்தை விளைவிக்கும்” என்று எச்சரிக்கிறார் வேதியியல் ஆசிரியர் ரவி சுந்தரபாரதி. வீடு சுத்தத்துக்காக பயன்படுத்தப்படும் கலப்புப்பொருட்களின் ஆபத்துகளையும் விளக்குகிறார் அவர்.

“பாத்ரூம் போன்று அதிகம் தண்ணீர் உபயோகிக்கும் இடங்களில் அதிகமாக பாசி பிடித்து, கால் வழுக்க ஆரம்பிக்கும் என்பதற்காக பிளீச்சிங் பவுடர் உபயோகிப்போம். பிளீச்சில் சோடியம் ஹைப்போகுளோரைட் வேதிப்பொருள் இருப்பதால், மற்ற சுத்திகரிக்கும் பொருட்களுடன் இது கலக்கப்படும் போது வேதிவினை ஏற்படும். வினிகர், கண்ணாடி மற்றும் கண்ணாடி ஜன்னல்களை சுத்தம் செய்யும் பொருட்கள், பெயின்டுகள், கலர் சாயம் போன்ற பொருட்களில் அமோனியா இருக்கும்.

அதேபோல, வினிகர், பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் சோப்புகள், திரவங்கள், கழிவறை பேசன் கிளீனர்கள், வடிகால் சுத்தம் செய்யும் கிளீனர்கள், துரு, கறையைப் போக்கும் பொருட்கள் போன்றவற்றில் அமிலங்கள் கலந்திருக்கும்.

இதுபோன்ற பொருட்களை பயன்படுத்தும் போது பிளீச்சிங் பவுடர் கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு கிளீனர்களை ஒன்றாக கலந்து உபயோகித்தால் எளிதில் சுத்தமாக்கலாம் என்று நினைக்கிறார்கள். கண்டிப்பாக வேதிப்பொருட்களை ஒன்றோடொன்று கலப்பது மிகவும் தவறான செயல்’’ என்பவர், தவறான கலவைகள் சிலதையும் பட்டியலிடுகிறார்.

பிளீச்  + அமோனியா

பிளீச்சிங்குடன் அமோனியா சேர்த்து உபயோகிக்கும் போது குளோரோமைன் என்ற விஷவாயு வெளிப்படுகிறது. இதனால் இருமல், தொண்டை, கண்கள் மற்றும்
மூக்கில் எரிச்சல் ஏற்படும். கண்களில் நீர்வடிதல், குமட்டல், மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்படும். குளோரோமைன் மிகவும் விஷத்தன்மை உடையது.

குளோரின் பிளீச் + வினிகர்

இவை இரண்டும் கலக்கும்போது குளோரின் வாயு அதிகமாக வெளியேறும். சிறு அளவில் கலந்தாலும் இருமல், மூச்சுத்திணறல், கண்களில் எரிச்சல் பட்டு நீர் வடிய ஆரம்பிக்கும்.

பேக்கிங் சோடா + வினிகர்

சமையலுக்கு மட்டும் உபயோகிக்கும் இந்த இரண்டு பொருட்களையும் சுத்தம் செய்ய பயன்படுத்தினால் மிக எளிதாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருப்போம். இது தவறான செய்தி. அதாவது... பேக்கிங் சோடா அடிப்படையான பொருள்.

வினிகரில் அசிடிக் அமிலம் உள்ளது. இவை இரண்டும் சேரும் போது சோடியம் அசிடேட், தண்ணீர் மற்றும் கார்பன்டை ஆக்சைடு வெளிப்படும். பேக்கிங் சோடாவையும் வினிகரையும் இறுக மூடிய கிண்ணத்தில் ஒன்றாக வைக்கும் போது காற்றுக் குமிழ்கள் உருவாகி வெடித்துவிடும். இரண்டையும் தனித்தனியாக வைத்துதான் பயன்படுத்த வேண்டும்.

பிளீச் + ஆல்கஹால்

முன்பு அறுவை சிகிச்சையின்போது நோயாளியை மயக்கமுறச் செய்ய குளோரோஃபார்ம் கொடுப்பது பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பிளீச் மற்றும் ஆல்கஹாலின் கலப்புதான் குளோரோஃபார்ம். இது வெளிப்படும்போது வேதிவினை ஏற்பட்டு கண் எரிச்சல், மயக்கம் உண்டாகும்.

ஹைட்ரஜன் பெராக்சைட் + வினிகர்

உடலில் ஏற்பட்ட புண்களை சுத்தம் செய்யவும், புதுத்துணிகளின் பளபளப்பு மாறாமல் இருப்பதற்காகவும் ஹைட்ரஜன் பெராக்சைட்  உபயோகப்படுத்தப்படுகிறது. வினிகருடன், ஹைட்ரஜன் பெராக்சைடை கலக்கும் போது பெராசிடிக் அமிலம் வெளிப்படுகிறது. தவறிப் பட்டாலோ கண்கள், மூக்கு மற்றும் தொண்டையில் எரிச்சல் ஏற்படும். சருமப் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் அதிகம் உள்ளது.இரண்டு கிளீனர்களை ஒன்றாக கலந்து  உபயோகித்தால் எளிதில் சுத்தமாக்கலாம் என்று நினைக்கிறார்கள். கண்டிப்பாக  வேதிப்பொருட்களை ஒன்றோடொன்று கலப்பது மிகவும் தவறான செயல்!

- உஷா