வெறி



ஏன் இந்த கொடூரம்?

கொலைகளுக்குப் பின்னே மறைந்து கிடக்கும் மனசு!


திரும்பிய திசையெல்லாம் ரத்தம் தெறித்த இந்த ஜூன் மாதத்தை இனி எப்போதும் மறக்க முடியாது. மாடியிலிருந்து நாய்க்குட்டியைத் தூக்கிப் போடுவதிலிருந்து, ரயில்நிலையத்தில் ஒரு பெண்ணை வெட்டிக் கொல்வது வரை நாம் பார்த்தவை அனைத்தும் பதற வைக்கும் பயங்கரங்கள்.சட்டம் ஒழுங்கு் குறைபாடு, மதுப்பழக்கம், ஆணாதிக்கம் என்று இந்த அசம்பாவிதங்களுக்கு எல்லாம் பல காரணங்களைச் சொல்ல முடியும். ஆனால், அவை எல்லாமே கிளைக் காரணங்கள்தான். இவற்றின் ஆதாரமான, ஆணிவேரான காரணம் ஒன்று உண்டு.

அது… மனசு!
அதிர்ஷ்டவசமாக மனம்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்பது நமக்குத் தெரியும். துரதிர்ஷ்டவசமாக அதை நாம் பின்பற்றுவதில்லை. மனிதர்களின் மனம் ஏன் இத்தனை வன்மமாக மாறுகிறது? இனி இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?உளவியல் மருத்துவரான கார்த்திக்கிடம் பேசினோம்…

‘‘கோபம், காதல், சோகம் போன்ற நம் உணர்ச்சிகள் எல்லாம் மூளையில் Limbic system என்ற பகுதியில்தான் உருவாகிறது. இந்த உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் வேலையைச் செய்வது Frontal lobe என்ற மூளையின் முன்பகுதி. இந்த ஃப்ராண்டல் லோப் செயல்படவில்லை என்றால்தான், அது வெறியாக மாறுகிறது. அதற்கு வடிகால் வேண்டும் என்று தவிக்கும்போது குற்றங்கள் நடக்கின்றன.

காதலனுடன் சேர்ந்து தந்தையையே ஒரு பெண் கொன்ற செய்தியைப் பார்த்திருப்பீர்கள். அப்பாவைக் கொல்லலாமா, ஜெயிலுக்குப் போவோமே, மற்றவர்கள் தவறாகப் பேசுவார்களே என்பதையெல்லாம் யோசிக்கும் அளவு அந்தப் பெண்ணின் ஃப்ராண்டல் லோப் வளர்ச்சியடையவில்லை. பல கள்ளக்காதல் கொலைகளின் அடிப்படைக் காரணம் இதுதான்.

கணவனையோ, மனைவியையோ கொலை செய்துவிட்டால் சந்தோஷமாக வாழ முடியும் என்று நம்புகிறார்கள். ஜெயிலுக்கு போக வேண்டியிருக்கும் என்கிற பின்விளைவை மறந்துவிடுகிறார்கள். எதிர்காலத்தை மறந்து செய்யப்படும் இந்த எல்லாக் குற்றங்களும் ஃப்ராண்டல் லோப் வளர்ச்சியடையாதவர்களால்தான் நடக்கிறது.’’

ஃப்ராண்டல் லோப் வளர்ச்சி எதனால் பாதிக்கப்படுகிறது?
‘‘மரபியல் ரீதியாக சிலருக்குப் பாதிக்கப்பட்டாலும், Micro environment என்கிற குடும்ப, சுற்றுப்புறச்சூழல்தான் பெரிய காரணமாக இருக்கிறது. அதனால், குழந்தை வளர்ப்பில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு குழந்தை திருடும்போது கண்டிக்க வேண்டும். அப்போது திருடுவது தவறு என்று அந்தக் குழந்தை புரிந்துகொள்ளும். முக்கியமாக, ஃப்ராண்டல் லோப் வளர்ச்சியடையும் காலம் 18 வயது முதல் 24 வயது வரை என்பதால் குழந்தைகளை முறைப்படுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு நிறைய இருக்கிறது.’’

சினிமாக்களால் குற்றங்கள் அதிகமாகிறதா?
‘‘இது தவறான கருத்து. சமூகத்தில் நடப்பதைப் பிரதிபலிக்கும் ஓர் ஊடகம்தான் சினிமா. அடிப்படையிலேயே வன்முறை எண்ணம் கொண்ட ஒருவன், சினிமா பார்க்காவிட்டாலும் கொலை செய்வான்.

பட்டப்பகலில் ஒரு கொலை நடக்கிறது. சுற்றியிருக்கிறவர்களால் அதைத் தடுக்க முடியவில்லை. அந்த குற்ற உணர்ச்சியை மறைக்க யார் மீதாவது பழி போடுகிறோம். பொறுப்பேற்றுக்கொள்ளும் நேர்மை இல்லாதவர்கள்தான் இதுபோல மற்றவர்களைக் குறை சொல்கிறார்கள். அதிலும் சினிமா எப்போதும் எளிதான இலக்காக இருக்கிறது.

அரசியல்வாதிகளையோ, போலீசையோ நம்மால் பகிரங்கமாக குற்றம் சொல்ல முடியாது. அதற்குப் பின்விளைவுகள் உண்டு. சினிமா பிரபலங்களை விமர்சிக்கலாம். அதில் விளம்பரமும் கிடைக்கும். அவர்களிடமிருந்து நமக்கு பிரச்னையும் வராது.திரைப்படக் கலைஞர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், ஆக்கப்பூர்வமான மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறவர்கள், சினிமாதான் காரணம் என்று சொல்லிவிட்டுத் தப்பிக்கக்கூடாது. தவறுக்கு நானும் ஒரு காரணம் என்பதை ஏற்றுக் கொள்வதுதான் மாற்றத்துக்கு வழி.’’

கோபம் எப்போது ஆபத்தாக மாறுகிறது?
‘‘கோபம் ஓர் இயல்பான உணர்ச்சி. அதைக் கையாளும் விதத்தில்தான் வித்தியாசம் இருக்கிறது. சாதாரண மனிதர்கள் கோபப்பட்டாலும் அதன்பிறகு அதை நினைத்து வருந்துவார்கள். அந்தத் தவறை மீண்டும் செய்ய மாட்டார்கள். ஃப்ராண்டல் லோப் வளர்ச்சி குறைந்தவர்களின் உணர்ச்சிகள் வேறு வகை. இவர்கள் என்ன செய்கிறோம் என்பதை உணர மாட்டார்கள்.

ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்வார்கள். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள உதவும் Mirror neurons இவர்களுக்கு செயல்படாது. ஒருவன் மாடியில் இருந்து நாய்க்குட்டியைத் தூக்கிப் போடுவதற்குப் பின்னால் இருப்பது இந்த மிரர் நியூரான்கள்தான். நாய்க்குட்டியின் உணர்வைப் புரிந்துகொள்ளாதவன் மனிதர்களையும் அதேபோலத்தான், மாடியிலிருந்து தூக்கிப் போடுவான்.’’

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளாகிவிடுவார்களா?
‘‘தானாகப் பேசுவது, சிரிப்பது போன்ற கோளாறுகள் எல்லாம் உடல்ரீதியான குறைபாட்டால் வரும் பிரச்னை. அதில் ஆபத்து இல்லை. மருந்துகள் கொடுத்தால் குணமாகிவிடுவார்கள். இவர்கள் சமூகத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்க மாட்டார்கள். மனநிலை பாதிக்கப்பட்ட இவர்கள் கிட்டத்தட்ட குழந்தைகளைப் போன்றவர்கள். ஆனால், Personality disorder கொண்டவர்கள்தான் குற்றவாளிகளாகிறார்கள்.’’

கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்…‘‘Personality disorder என்ற குணக்கோளாறில் இரண்டு வகை இருக்கிறது. Anti social personality என்ற முதல் வகையைச் சேர்ந்தவர்கள் சமூகத்துக்கு எதிரான குற்றங்களை விருப்பத்துடன் செய்வார்கள்.

‘நோ பார்க்கிங்’ என்றால் அங்கேதான் வண்டியை நிறுத்துவார்கள். பணம் என்பதைத் தாண்டி குற்றச்செயல்களைச் செய்வதில் அலாதியான விருப்பம் இருக்கும். கூலிப்படையினர், தீவிரவாதிகள் எல்லாம் இந்த வகையினர்தான். இந்தப் பிரச்னை ஆண்களுக்கு அதிகம் ஏற்படும்.

இதில் இரண்டாவது வகை Border line personality. காதலுக்காகக் கொலை செய்கிறவர்கள் இந்த பார்டர் லைன் பர்சனாலிட்டியாக இருக்கவே வாய்ப்பு அதிகம். இவர்களுக்கு சுயமதிப்பு இருக்காது. இவர்கள் மற்றவர்களைச் சார்ந்தே இருப்பார்கள். உணர்வுரீதியாக வாழ்க்கையைக் கையாள்கிற பெண்களுக்கு இந்தப் பாதிப்பு அதிகம் ஏற்படும்.’’காதல் கொலைகள் பற்றி...‘‘ ‘நீயில்லாமல் நானில்லை’, ‘நீயில்லாவிட்டால் நான் செத்துருவேன்’ என்பதையெல்லாம் ஆரோக்கியமான மனநிலையில் இருப்பவர்கள் சொல்வது இல்லை.

இது பார்டர் லைன் பர்சனாலிட்டியின் அறிகுறி. ஆனால், இதை காதல் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இவர்களுக்குக் காதல் சம்மதம் கிடைத்தாலும் அமைதியாக இருக்க மாட்டார்கள். அதன் பிறகுதான் பிரச்னையே ஆரம்பிக்கும். வேறு யாராவது நம் காதலுக்குக் குறுக்கே வந்துவிடுவார்களோ என்கிற பயம் வந்துவிடும். இதன் எதிரொலியாக ‘எங்கே இருக்கிறாய்’, ‘யாருடன் இருக்கிறாய்’ என்று அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். சண்டை,
சச்சரவு வந்துகொண்டே இருக்கும்.

கடைசியில் வாழ்க்கையே நரகமாகிவிடும்...’’காதல் தோல்வியை இளைஞர்கள் எப்படிக் கையாள வேண்டும்?‘‘ஓர் உறவு முறியும்போது இழப்பு இருவருக்கும்தான். அதனால் விலகலாம் என்று ஒருவர் முடிவெடுத்துவிட்டால் அதற்கு மற்றவர் மரியாதை கொடுக்க வேண்டும்.

அந்த உறவை இறுக்கிப் பிடிக்க முயற்சித்தாலே, நம் மீது நமக்கு மதிப்பு குறைவாக இருக்கிறது என்றுதான் அர்த்தம். தன்னம்பிக்கையும் சுயமதிப்பும் கொண்டவர்கள் காதல் தோல்வியை சாதாரணமாகவே எடுத்துக் கொள்கிறார்கள். அந்தப் பெண்ணுக்கு அல்லது ஆணுக்குத்தான் இழப்பு என்று நினைப்பார்கள். சுயமதிப்பு இல்லாதவர்களால் இந்த நிராகரிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுதான் கொலையாகவோ, தற்கொலையாகவோ மாறுகிறது.’’

நாம் ஆபத்தான உறவில் இருக்கிறோம் என்பதை உணர முடியுமா?
‘‘சுயநலத்துக்காக ஒருவர் உங்களை நிர்பந்தப்படுத்திக் கொண்டே இருந்தால் அவர் ஆபத்தானவர். ‘என் கூடவே இருக்க வேண்டும்’, ‘என்னுடன் இந்த இடத்துக்கு வர வேண்டும்’ என ஒருவரிடமிருந்து டிமாண்ட் வந்துகொண்டே இருந்தால், நீங்கள் ஆபத்தான உறவில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

நீங்கள் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டிக் கொண்டு இருக்கிறவரும் பிரச்னைக்கு உரியவரே. இதேபோல, சிறிய பிரச்னைக்குக் கூட 4 நாட்கள் பேசாமல் இருக்கிறவர்கள், ஏதாவது பிரச்னையை உருவாக்கிக் கொண்டே இருக்கிறவர்களிடமும் கவனம் அவசியம்.

இன்னொரு வகையும் உண்டு. ரொம்பவும் அமைதியாக, யாரிடமும் பேசாமல் சிலர் ஒதுங்கியே இருப்பார்கள். இவர்களை நல்லவர் என்று சமூகம் நினைக்கும். ஆனால், நல்லவர்களின் அடையாளமே சமூகத்தோடு நன்றாகக் கலந்து பழகுவதில்தான் இருக்கிறது. அதனால், இவர்களிடமும் விலகி இருப்பதே நல்லது.

சுதந்திரம் கொடுத்து, தேவைப்படும்போது உதவி செய்கிற, நம்மைப் புரிந்துகொள்கிறவர்களுடனே நட்பு பாராட்ட வேண்டும்.’’
காதல் தொந்தரவுகளை சமாளிக்க வழிகள் என்ன?‘‘ஆண்-பெண் உறவு கண்ணாடிப் பொருட்களைக் கையாள்வது போலத்தான். ஏதாவது ஒரு கட்டத்தில் இருவரில் ஒருவருக்கு மனதில் அந்த அபிப்பிராயம் வந்துவிடும் என்பதால் கவனமாகவே கையாள வேண்டும்.

ஒருவேளை, அந்த உறவு சரிவராது என்று நினைத்தால் எதிராளியின் ஈகோவை சீண்டுகிற மாதிரி அவமானப்படுத்துவதோ, மிரட்டுவதோ தவறு. அது மோசமான பின்விளைவுகளையே உண்டாக்கும். காதல் இம்சை செய்கிறவர்களைத் தனியாக சமாளிக்க முடியும் என்று நம்புவதும் தவறு. மற்றவர்களின் உதவியோடு பக்குவமாகவே அந்தப் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டும்.

நன்றாகப் பழகிய பின்னர், காதலைச் சொல்லும் நிலைக்கு வந்தபிறகு, ஒருவரை மறுக்கும்போதுதான் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அதனால், ஆரம்பத்திலேயே போதுமான இடைவெளியுடன் பழகுவது நல்லது.

ஒருவரின் குணம் முழுமையாகத் தெரியாமல் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. சமூக வலைத்தளங்களில் ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட்டை ஏற்றுக் கொள்வதி லிருந்து, அவருடைய மெசேஜுக்கு பதில் தருவதிலிருந்து எல்லாவற்றையும் கவனமாகக் கையாள வேண்டும். நேரில் பேசி, பழகியவரை முகநூலில் நண்பர்களாக வைத்துக் கொள்வதே நல்லது.’’

மனநலம் பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் இருக்கிறதா?‘‘உடல்நலத்துக்காக உணவில் கவனம் செலுத்துகிறோம், உடற்பயிற்சிகள் செய்கிறோம். ஆனால், மனதை நாம் பொருட்படுத்துவதில்லை. மன ஆரோக்கியத்துக்காக எந்த முயற்சிகளும் செய்வதில்லை.  நம் கல்வித் திட்டத்திலும் மனம் என்ற விஷயமே இல்லை. மருத்துவம் படிக்கிறவர்களுக்கே உளவியல் பற்றித் தெரியாது.

அதனால்தான் உணர்வு ரீதியான பிரச்னைகளை சமாளிக்கத் தெரிவதில்லை. ஒருவர் தானாகப் பேசினாலோ, சிரித்தாலோதான் மனம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறோம். ஆனால், நமக்குள் இதுபோல நீறுபூத்த நெருப்பாக இருக்கும் குணக்கோளாறுகளை உணர்வதில்லை.’’

ஆரோக்கியமான மனநிலை கொண்ட குழந்தைகளை எப்படி வளர்ப்பது?‘‘ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்க முடியாத சூழல் என்று சொன்னால், அதை குழந்தை புரிந்துகொள்ள வேண்டும். அழுது, அடம்பிடித்தால் அந்தக் குழந்தை ஆபத்தாக வளர்கிறது என்று அர்த்தம். தொடர்ந்து அதே பிடிவாதத்தை எல்லா விஷயத்திலும் கடைபிடித்தால் மனநல ஆலோசகரிடம் அழைத்துப் போவதுதான் சரி.

ஆர்ப்பாட்டம் பண்ணினால் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வளர்கிற ஒருவன், வளர்ந்த பிறகு ஒரு பெண்ணிடமும் அதே ரீதியில் காதலை எளிதாக எதிர்பார்ப்பான். அந்தப் பெண் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் அவனால் தாங்கிக் கொள்ளாமல் விபரீதம் நடக்கும். ஐஸ்கிரீம் என்ற சின்ன விஷயத்தில் ஆரம்பிப்பதுதான் ஒரு பெண்ணைக் கொலை செய்வதில் முடியும்.

அதனால், உடனுக்குடனே கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி குழந்தைகளை வளர்க்கக் கூடாது. சைக்கிள் கேட்டால், ‘நல்ல மார்க் எடுத்தால் வாங்கித் தருகிறேன்’ என்று சொல்ல வேண்டும்.

அப்போது கஷ்டப்பட்டால்தான் பலன் கிடைக்கும் என்கிற பக்குவம் வரும்.’’மன ஆரோக்கியத்தை அளவிட எதுவும் வழிகள் இருக்கிறதா?‘‘ஒரு பிரச்னை வருகிற போது தனக்கும் மற்றவர்களுக்கும் பாதகம் வராமல் எப்படி அந்த சூழலைக் கையாள்கிறார்கள் என்ற பக்குவத்தைப் பொறுத்தே ஒருவரின் மன ஆரோக்கியத்தைச் சொல்ல முடியும். Intelligence quotient என்ற அறிவுத்திறனை விட Emotional quotient என்ற உணர்வுகளைக் கையாளும்
திறன்தான், இப்போது நாம் எல்லோருக்கும் தேவை.’’

மனதை  ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில ஆலோசனைகளைச் சொல்லுங்கள்…‘‘யோகாவும் தியானமும் மனநலத்தை மேம்படுத்தும். தியானத்தின் மூலம் நம் உணர்வுகளைக் கண்காணித்துக் கொண்டே இருக்கும்போது எண்ணங்கள் மட்டுப்படும். அதன்பிறகு, எந்தச் சூழலையும் எளிதாகக் கையாள முடியும்.

உணர்ச்சிகளைக் கையாளும் திறனை ஃப்ராண்டல் லோப் தானாகவே பெற்றுவிடும். சிறந்த புத்தகம் படிப்பது, நல்ல பாடல்கள் கேட்பது, நல்ல நண்பர்களுடன் பழகுவது, இயற்கையான இடங்களுக்குச் சென்று வரும்போது ஃப்ராண்டல் லோப் நல்லவிதமாகத் தயாராகும். முடிந்தவரை இயற்கையோடு தொடர்பில் இருக்க வேண்டும். சக மனிதர்களோடு பேசிப் பழகவேண்டும். தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ளக் கூடாது. அதுவும் மனநலப் பாதிப்பை உண்டாக்கும்.

முக்கியமாக, நம் உணர்வுகளை நாமே கவனிக்கிற திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவர் திட்டினால்  நம்மிடம் இருந்து நாமே கொஞ்சம் விலகி நின்று யோசிக்க வேண்டும். என்ன காரணம், இந்தப் பிரச்னை சரியாக என்ன வழி என்று ஆக்கப்பூர்வமாக யோசிக்க வேண்டும். ‘தேவாங்கு’ என்று திட்டினால் அதையே நினைத்துக் கொண்டிருந்தால்தான் மனது பாதிக்கப்படும். அதற்கு எதிர்வினை ஏதாவது செய்ய வேண்டும் என்று
தோன்றும். கண்டுகொள்ளாமல் விட்டால் பிரச்னை இல்லை!’’

‘தேவாங்கு’ என்று திட்டினால் அதையே நினைத்துக் கொண்டிருந்தால்தான் மனது பாதிக்கப்படும். அதற்கு எதிர்வினை ஏதாவது செய்ய வேண்டும்
என்று தோன்றும். கண்டுகொள்ளாமல் விட்டால் பிரச்னை இல்லை!

தன்னம்பிக்கையும் சுயமதிப்பும் கொண்டவர்கள் காதல் தோல்வியை சாதாரணமாகவே எடுத்துக் கொள்கிறார்கள். அந்தப் பெண்ணுக்கு அல்லது ஆணுக்குத்தான் இழப்பு என்று நினைப்பார்கள். சுயமதிப்பு இல்லாதவர்களால் இந்த நிராகரிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுதான் கொலையாகவோ, தற்கொலையாகவோ மாறுகிறது.

- ஞானதேசிகன்